காய்கறி கழிவிலிருந்து சமையல் எரிவாயு



வீட்டில் வீணாகும் சமையல் கழிவுகளைத் தூக்கி குப்பையில் போடுகிறோம். அந்தக் கழிவுகளைக் கொண்டே சமையல் எரிவாயுவை உருவாக்கியிருக்கிறது ‘ஹோம் பயோ கேஸ்’. நிறுவனம் இஸ்ரேலைச் சேர்ந்த இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து இதைக் கண்டுபிடித்திருக்கிறது.

15 உதிரிப் பாகங்களைக் கொண்டு செயல்படும் ஹோம் பயோ கேஸ் உபகரணத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியிருந்தனர். இதற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் வரவேற்பு கிடைத்தது. இப்போது ஹோம் பயோ கேஸ் 3.0 மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் புது உபகரணத்திற்கு நான்கு உதிரிப் பாகங்கள் மட்டுமே.  இதை  எளிதில்  வீட்டின் காலி இடத்தில் நிறுவிவிட முடியும். உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் இறைச்சிக் கழிவுகளை ஒருபுறம் போட்டு, பாக்டீரியா கிருமி துகள்களையும் கொட்டிவிட வேண்டும்.  மாடு, ஆடு போன்ற விலங்குகளின் கழிவுகளையும் இதில் சேர்க்கலாம்.

இந்த உபகரணத்தின் ஜீரணப் பகுதியில் பாக்டீரியாக்கள், உணவுக் கழிவுகளை சிதைத்து, எரிவாயுவையும், திரவ வடிவில் வீட்டுத் தோட்டத்திற்கான உரத்தையும் உற்பத்தி செய்கின்றன. தினமும் 2 கிலோ உணவுக் கழிவைப் போட்டால், இரண்டு மணி நேர சமையலுக்குத் தேவையான எரிவாயு கிடைக்கும்.

க.கதிரவன்