பொருளாதார மேதைஉலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென். பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு வென்று இந்தியா வுக்கு பெருமை சேர்த்தவர். அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். அப்போது சென்னிற்கு பத்து வயது கூட இருக்காது. உயிரைக் கையில்  பிடித்துக் கொண்டு உடல் முழு வதும் குருதி வடிய ஓடி வரும் ஒரு வரைப் பார்க்கிறார். அவர் ஒரு  இஸ்லாமியர். பெயர் காதர்பாய். இந்துக்கள்  அதிகமாக இருக்கும் பகுதிக்கு வேலைக்குச் சென்றிருக் கிறார். அவர் ஒரு இஸ்லாமியர் என்று அறிந்த இந்து வெறியன் ஒருவன் காதர் பாயைக்  கத்தியால் குத்தியிருக்கிறான்.

சென்னின் அப்பா, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் காதர்பாயை  மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார். காதர், சென்னின் அப்பாவிடம் ‘‘என் மனைவி வீட்டிலிருந்து கிளம்பும் போதே இந்துக்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம். சாப்பாடு இல்லை என்றாலும்பரவாயில்லை  என்று கெஞ்சினாள். நான் தான் அவள் சொன்னதை கேட்கவில்லை. எங்கயாவது வேலை கிடைத்தால் குடும்பம் சாப்பிட கொஞ்சம்  பணம் கிடைக்கும் என்றுதான் இங்கு வந்தேன். எல்லாமே தப்பாகிவிட்டது...’’ என்று காதர்பாய் நொந்துகொண்டே இருந்தார் என்று கூறியதை  பிற்காலத்தில் நினைவு கூர்கிறார் சென்.
    
 இந்த நிகழ்வு  அமர்த்தியாவை மிகவும் பாதித்திருக்கிறது. “மதவெறி ஒருபக்கம் இருந்தாலும் காதர் பாயின் குடும்பத்திற்குச் சரியாக உணவு  கிடைத்திருந்தால் இந்த மாதிரியான இடத்திற்கு அவர் வேலைக்கு வந்திருக்க மாட்டார். வறுமையும், குடும்பத்தின் பசியும் அவரின் இந்த நிலைக்கு  மூல காரணம்...’’ என்கிறார் சென்.இந்த நிகழ்வு சென்னின் மனதை வெகு வாக பாதித்திருக்கிறது. தவிர, வங்கப் பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள்  புழுக்களைப் போல, பூச்சிகளைப் போல மடிவதை நேரில் கண்டவர். அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியும் செய்தவர் சென். அவரின்  பொருளாதார ஆய்வுகள் வறுமையையும், பஞ்சத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. வறுமையிலிருந்து மக்களை மீட்பதே அவரின் லட்சியமாகக்  கூட இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது.