ஜீரோ டூ ஹீரோ



வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே அவர்கள் வித்தியாசமாகச் செய் கிறார்கள்.-ஷிவ் கெராஅமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ளது மவுண்ட் வெர்னன் நகரம். 1948-ம் ஆண்டு அங்கே உள்ள ஒரு ஏழ்மையான வீட்டில் பிறக்கிறது ஓர் ஆண் குழந்தை. மது விடுதியில் பானங்களைச் சப்ளை செய்யும் வேலையில் இருக்கிறார் அக் குழந்தையின் தந்தை.

அம்மா வீட்டைக் கவனித்துக்கொள் கிறார். குழந்தை வளர்ந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கிறான். ஒரு நாள் ஆசிரியர் அந்தச் சிறுவனிடம் ‘‘பெரியவனாகி என்ன ஆகப்போகிறாய்..?'' என்று கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன் ‘‘நான் பெரிய பணக்காரனாக வேண்டும்...’’ என்று சொல்கிறான். ஆனால், அவன் குடும்பமோ வறுமையில் தத்தளிக்கிறது.

தவிர, அவனுக்குப் பிறகு பிறந்த இரண்டு குழந்தை களையும் வளர்க்க பெற்றோர்கள் பெரும் போராட்டம் நடத்துகின்றனர். அதனால் 13 வயதிலேயே பகுதி நேரமாக வேலை பார்த்து பள்ளிப்படிப்பை முடிக்கிறான் அந்தச் சிறுவன். அத்துடன் தனது குடும்பத்துக்கும் பணம் கொடுக்கிறான். கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் என்பது அவனின் பெருங்கனவு. ஆனால், போதிய பணம் அவனிடமில்லை.

வீட்டிலிருந்த இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்று கல்லூரிப் படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்துகிறான். கிடைத்த வேலைகள் அனைத்தையும் பார்க்கிறான். கிடைக்கும் சம்பளத்தில் ஒரு தொகையைச் சேர்த்து வைக்கிறான். ஆனால், அவனது மனமோ சொந்தத் தொழில் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பெரிய பணக் காரனாக முடியும் என்று இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், அதற்கான நிதி வசதி எதுவும் அவனிடமில்லை. தன்னுடன் சேர்ந்து தொழில் செய்ய நம்பகமான ஒரு ஆளைத் தேடுகிறான். 1988-இல் ஸ்டீவ் ஸ்மித் என்பவ ருடன் சேர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனத்தை ஆரம்பிக்கிறான். அடுத்த ஒன்பது ஆண்டுகளில் பில்லி யன் டாலர் வருமானம் ஈட்டும் ஒரு நிறுவனமாக அது உயர்கிறது. அமெரிக்காவில் மிகவேகமாக வளர்ச்சியடைந்த நிறுவனமாக அந்த நிறுவனம் கொண்டாடப்படுகிறது.

பில் கேட்ஸின் ‘மைக்ரோசாஃப்ட்’டை விட வேகமாக வளர்ச்சியடைந்த நிறுவனமாக அது கருதப்படுகிறது. ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பங்குச் சந்தையில் இடம் பெறு வது என்பது அசாதாரணகாரியம். ஆனால், அவனின் நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் இடம்பிடித்த இளம் நிறுவனம் என்ற பட்டத்தையும் தட்டியது. இப்போது அந்த நிறுவனம் உலகின் மிக முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. அதன் பெயர் ‘எக்சல் கம்யூனிகேஷன்’.

‘‘நான் பெரிய பணக்காரனாக வேண்டும்...’’ என்று சொன்ன அந்தச் சிறுவன்தான் கென்னி ட்ரெளட்.  இன்று  உலகின் முக்கிய கோடீஸ்வரராக இருக்கும் கென்னி, எக்சல் கம்யூனிகேஷனி லிருந்து ஓய்வு பெற்றுவிட்டு முதலீட்டுத் தொழிலில் இறங்கிவிட்டார். குதிரைப் பந்தயங்களில்  ஈடுபடுவது   அவரது பொழுதுபோக்கு. பந்தயக் குதிரைகளை வளர்ப்பதற்காகவே  இரண்டாயிரம் ஏக்கரில் ஒரு பண்ணை வைத்திருக்கிறார். கென்னி ட்ரௌட்டின் இன்றைய சொத்து மதிப்பு 140 கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது 9520 கோடி ரூபாய்!