சூப்பர் 30



சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது ‘சூப்பர் 30’. ஆனந்த் குமார் என்ற கணித மேதையின் நிஜ வாழ்க்கைக் கதை தான் இந்தப் படம்.
ஒரு சாமான்ய மனிதன் தனது திறமை மற்றும் எதையும் எதிர்பார்க்காமல் செய்த சேவை மூலமாக எப்படி அசாதாரணமான மனிதனாக உருவெடுக்கிறான் என்பதற்கு உதாரணம் ஆனந்த் குமார். படத்தை நீங்கள் திரையில் பாருங்கள். ஆனந்த் குமாரைப் பற்றி இங்கே பார்ப்போம்.

1973-ம் ஆண்டின் முதல் நாளை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார் ஆனந்த் குமார். அவரின் தந்தை அஞ்சலகத்தில் குமாஸ்தா. போதிய வருமானம் இல்லாததால் ஆனந்த் குமாரை இந்தி மீடியத்தில் சேர்த்தார். ஆனால், மகனின் கனவுக்கு அவர் எந்த முட்டுக்கட்டையையும் விதிக்கவில்லை. படிப்பில் படுசுட்டியான ஆனந்திற்குக் கணிதம் அறி
முகமானது.

கணிதத்தில் இருந்த ஏதோ ஒன்று ஆனந்தை வசீகரிக்க பள்ளிப்பருவத்தி லேயே யாராலும் தீர்வு காண முடியாத பல கணிதச் செயல்பாடுகளை சமன் செய்ய ஆரம்பித்தார். கணிதம் சார்ந்த பத்திரிகைகள் நகரத்தில் உள்ள நூலகத்தில் மட்டும்தான் கிடைக்கும். கல்லூரியில் படிக்கும்போது வார விடுமுறை நாட்களில் ரயில் ஏறி நூலகத்துக்குச் சென்று விடுவார்.

நூலகம் மூடும் வரை அங்கேயே இருந்து குறிப்புகள் எடுத்துக்கொண்டுதான் வீடு திரும்புவார். ‘நம்பர் தியரி’ சார்ந்த அவரது ஆய்வு ‘Mathematical Spectrum’ மற்றும் ‘The Mathematical Gazette’ போன்ற சர்வதேச கணிதப் பத்திரிகைகளில் பிரசுரமாகியது. இந்தப் பத்திரிகைகளைப் படிக்கத்தான் அவர் பல கிலோ மீட்டர் தூரம் ரயிலில் பயணம் செய்தார்.

அவரின் கணிதத் திறமையைப் பார்த்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், தந்தையின் மரணமும், பொருளாதாரச் சூழலும் அதற்கு தடையாக இருக்க அப்பளம் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தனக்கு இருக்கும் கணித அறிவு மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்பட வேண்டும் என்று எண்ணிய ஆனந்த் குமார், தன்னைப் போலவே திறமை இருந்தும் பொருளாதாரம், குடும்பச் சூழலால் படிக்க முடியாமல் போன முப்பது பேரை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சியும், இடமும் தந்தார்.

அத்துடன் அந்த மாணவர்களுக்கு உணவு சமைத்துப் போட்டது அவரின் அம்மா. 2002 -இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி மையத்தில் வருடம் 30 பேர் என இதுவரை 480 பேர் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

அதில் 422 பேருக்கு ஐஐடியில் படிக்க இடம் கிடைத்தது. அவர்களில் பலர் ‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’ போன்ற பெரு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர்.  இந்தியாவில் உள்ள 23 ஐஐடிகளில் ஆன்ந்த்குமாரிடம் பயிற்சி பெற்ற ஒருவராவது இன்றும் படித்துக்கொண்டிருப்பார். அவரது பணி இன்றும் தொடர்கிறது. ஆனால், அவருக் கோ இப்போது மூளையில் கட்டி.

த.சக்திவேல்