தங்க மீன்



ரஷ்யாவில் ஒரு கதை இருக்கிறது. ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறான். பார்க்க கரடு முரடாக இருப்பான். அழுக்கான உடைவேறு. அதனால் சுற்றியிருக்கும் மக்களுக்கு அவனைப் பிடிக்கவே பிடிக்காது. அவர்களைப் பொறுத்தவரையில் அவன் ஆபத்தானவன், கெட்டவன், மோசமானவன்.

ஒரு நாள் காட்டுப்பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகத்தால் மயக்கம் அடையும் நிலையில் ‘‘தண்ணி தண்ணி...’’ என்று கத்திக் கொண்டு கீழே விழுந்து கிடக்கிறாள். அப்போது அந்த வழியாக இளைஞன் வருகிறான். அவனைப் பார்க்கும் அந்தப் பெண்,  ‘‘இந்த நேரத்தில் இவனா வரணும்...’’ என்று நொந்து கொள்கிறாள். அவன் அந்தப் பெண்ணைக் கடந்து செல்கிறான். சிறிது நேரத்தில் தண்ணீருடன் வருகிறான். அந்தப் பெண்ணுக்கு அருகில் தண்ணீரை வைத்துவிட்டு அவன் போக்கில் சென்று விடுகிறான்.

ஒருவன் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் நல்லவனாக மாறலாம். அது மட்டுமில்லாமல் ஒருவனை மதிப் பிடுவது, ஒருவனைப் பற்றி முடிவு செய்வது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தும் கதை இது.‘The Golden Fish’- என்ற பிரெஞ்ச் குறும்படம் மற்றவர்களைப் பற்றிய நம் தவறான எண்ணங்களை ,மதிப்பிடுதலை நாம் உணர்கின்ற வகையில்  அழகாக சித்தரிக்கிறது.

கறுப்பு நிற பூனை ஒன்று இரை தேடி ஆளில்லாத ஒரு வீட்டுக்குள் செல்கிறது. அந்த வீட்டில் இருக்கும் கூண்டுக்குள் ஒரு பறவை இருக்கிறது. கூண்டுக்கு அருகிலிருக்கும்  கண்ணாடிக் குடுவைக்குள் அகப்பட்டுக் கிடந்த தங்க மீன் வெளியே தாவிக் குதித்து தரையில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இரை தேடி வந்த பூனையின் பார்வையில் மீனும்,பறவையும் அகப்பட்டுவிடுகிறது.

அந்த வீட்டிலிருக்கும் சிறுவன் ஒரு அதிர்ஷ்ட விளையாட்டில் வெற்றி பெற்று  ஆசையோடு  தங்க மீனை வாங்கிவந்து ஒரு நாள் கூட ஆகவில்லை. பள்ளியில் அவன்  நிச்சயமாக அந்த மீனைப் பற்றிய எண்ணத்தில் பாடத்தைக் கூட கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளி முடிந்த பிறகு ஒரு அழகான மலர்க்கொத்தை மீன் குடியிருக்கும் கண்ணாடிக் குடுவைக்குள் வைப்பதற்காக  வாங்கு கிறான். மீன் தரையில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும், அங்கே பூனை இருப் பதும் சிறு வனுக்குத் தெரியாது.

மகிழ்ச்சியுடன் தன் அன்புக்குரிய மீனையும், பறவையையும் பார்க்க வீட்டை நோக்கி வேகமாக ஓடி வருகிறான். வீட்டுக்குள் நுழைந்ததும் மீனும் பறவையும் இருக்கும் இடத்துக்குச் செல் கிறான். தன் புத்தகப் பையிலிருக்கும் மலர்க் கொத்தை எடுத்து கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கிறான். இப்போது அந்த தங்க மீனுடன் சேர்ந்து அந்த மலர் இன்னும் அழகாகக் காட்சி தருகிறது.

அந்தச் சிறுவனைப் போல, அந்த தங்க மீனைப் போல, அந்தப் பறவையைப் போல, இரை தேடி வந்த அந்த கறுப்பு நிற பூனையும் பரிசுத்தமான இதயத்துக்கு சொந்தக்காரன்தான். ஆம்; மீனைக் காப்பாற்றியது பூனைதான். அதுவும் மிகுந்த பசியில்.எட்மண்ட் சேசன் இயக்கத்தில் 1959-ம் ஆண்டு வெளியான இந்தக் குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்