அறிவியல் மேதை



‘‘உலகின் மிகச் சிறந்த அறிவி யல் மேதை...’’ - என்று ஐன்ஸ்டீனால் கொண்டாடப்பட்ட விஞ்ஞானி நிக்கோலா டெஸ்லா. அதே நேரத்தில் உலகத்தால் கண்டுகொள்ளப்படாமல் மறக்கப்பட்ட ஒரு விஞ்ஞானியும் இவர் தான். டெஸ்லாவை நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் அவரின் கண்டுபிடிப்புகள் நம்முடன் ஏதோவொரு வழியில் உறவாடிக் கொண்டேயிருக்கிறது.

ஐன்ஸ்டீன், நியூட்டன் அளவுக்குப் புகழ் பெற்றிருக்கக்கூடிய டெஸ்லா, கடந்த சில வருடங்களாகத்தான் ஆங்காங்கே பேச்சுப் பொருளாக மாறியிருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் அவ்வப்போது அவரைப் பற்றிய விவரணைகள் இடம்பெறுகின்றன. இருந்தாலும் இயற்பியலில் ஆர்வமுடைய எவருக்கும் ஆசானாக இருக்கக்கூடிய முக்கிய ஆளுமை டெஸ்லாதான்.

1856-ம் வருடம் ஜூலை 10-ம்  தேதி குரோஷியாவில் உள்ள ஸ்மைல்ஜன் எனும் இடத்தில் பிறந்தார் டெஸ்லா. கடந்த வாரம் அவரின் 163-வது பிறந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய குறிப்புகளை பலரும் எழுதினார்கள். இப்போதுதான் டெஸ்லாவை உலகம் கண்டுகொண்டுள்ளது. ஆனால், அவர் மனித குலத்துக்காக கண்டுபிடித்த விஷயங்கள் ஏராளம். சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட சாதனங்களை அவர் கண்டுபிடித்துள்ளார். அந்தக் கண்டுபிடிப்புகள் தான் நம் நவீன வாழ்க்கைக்கு வித்திட்டவை.

முக்கியமாக நம் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட ரிமோட்,  ராடார் தொழில்நுட்பம், ப்ளோரசன்ட் மின்விளக்கு, X-Ray போட்டோகிராபி போன்ற அத்தனையும் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள் தான்.  நயாகரா நீர்வீழ்ச்சியில் நீர் மின் உற்பத்தி நிலையத்தினை உருவாக்கி மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்தார்.  உலகின் முதல் நீர்மின் உற்பத்தி நிலையமும் இதுவே.

வெகு தொலைவில் உற்பத்தியாகும் மின்சாரம் நமக்குக் கிடைக்க அடித்தளமிட்டது டெஸ்லாவின் மூளை தான். டெஸ்லாவின் இந்த கண்டுபிடிப்பால் தான் உலகமே இன்று வெளிச்சத்தில் திளைக்கிறது என்றால் அது மிகையில்லை. ரேடியோவிற்காக மூல தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் டெஸ்லா என்று சொல்லப்படுவதுண்டு. தனது 86-வது வயதில் டெஸ்லா இந்த உலகை விட்டு நீங்கினாலும் அவருடைய கண்டுபிடிப்புகள் காலம் கடந்தும் நிற்கும்.