கிளாஸ்நாம் ஒரு நாற்காலியின் விலையை சுலபமாக நிர்ணயித்து விட முடியும். நாற்காலி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை, நாற்காலி செய்பவரின் வேலைக்கான கூலி, அடக்க விலை, பிறகு லாபம் இவற்றையெல்லாம் கணக்கிட்டு ஒரு விலையை நாம் நாற்காலிக்கு நிர்ணயித்து விடலாம்.

ஆனால், ஒரு கலைஞனின் கலைப்படைப்புக்கு விலையை நிர்ணயிப்பது மிகவும் கடினம். கலைஞன் தன் உயிரைக் கொடுத்து ஒரு படைப்பை உயிர்ப்பிக்கிறான். உயிர் விலைமதிப்பற்றது. உயிருக்கான விலையை நம்மால் நிர்ணயிக்க இயலாது.
-கார்ல் மார்க்ஸ்

பெர்ட் கான்ஸ்ட்ராவின் ஆவணப்படமான ‘கிளாஸ்’ நமக்கு தரும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிப்பது என்பது  கடினமான ஒன்று. நாம் சுலபமாக தூக்கி  எறிந்து உடைத்துப் போட்ட பல அழகான கண்ணாடிக் குவளை களுக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களின் கலைத்திறனை, இயந்திரங்களின் வேலையை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது இந்த ஆவணப்படம்.

இங்கே முதலில் அழகான கண்ணாடிக் குவளைகளுக்குப் பின் இருக்கும் மனிதர்களின் உழைப்பை பார்ப்போம் மனிதன் தன்  கலைத் திறனால் கண்ணாடிக் குவளைகளுக்கு அழகான, அற்புதமான தோற்றத்தை மட்டும் கொடுப்பதில்லை. அந்த அழகான வடிவம் அவனின் மூச்சுக்காற்றில் இருந்து உயிர்ப்பிக்கிறது. தன்னுடைய கைகளால் சற்று முன் பிறந்த குழந்தையைப் போல அந்தக் குவளையை வருடுகிறான்.

அவனின் ரத்தத்தில் இருந்து பிறக்கும் வியர்வைத் துளிகள் அந்தக் குவளையை பரிசுத்தமான கலைவடிவமாக மாற்றுகின்றன. நெருப்பின் அணைப்பில் உருவாகும் அந்த அழகான குவளையைக் கலைஞன் தன் இதயத்தின் எண்ணங்களுக்குள் பாதுகாத்து வைத்திருக்கிறான். அந்த எண்ணங்கள் பீறிட்டு எழும்போது அந்த நெருப்பிற்குள் அவனின் கை நுழையும் போது சுடுவதில்லை.

அது பிரகாசமான வெளிச்சமாக  மாறுகிறது. ஒரு கண்ணாடிக்  குவளையைப் போல இன் னொன்றை அவன் படைப்பதில்லை. அவனைப் பொறுத்தவரை ஒரு வேலையாக அந்தக் குவளையை அவன் செய்வதில்லை. மாறாக, அந்தக் குவளையைப் படைக்கிறான். ஒரு குழந்தையைப் பிரசவிப் பதைப் போல கண்ணாடிக் குவளையைப் பிரசவிப்பதால் சேதம் எதுவும் நம் கண்ணுக்குத் தென்படுவதில்லை.

அடுத்து சுவிட்சைத் தட்டிவிட்ட சில நிமிடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே மாதிரியான அச்சில் வார்க்கப்பட்ட கண் ணாடிக் குவளைகளை வெளி யேற்றுகிறது இயந்திரம். அதில் உயிர் இல்லை.

அந்த இயந்திரத்தை இயக்கும் மனிதனும் ஒரு இயந்திரம் போல திரும்பத் திரும்ப ஒரே வேலையைத் தான் செய்ய வேண்டியிருக்கிறது. இயந்திரத்தில் ஏற்படும் சில குறைபாடுகள், தடங்கல்கள் மாபெரும் சேதத்தை விளைவிக்கிறது. நாளடைவில் இயந்திரத்தின் சூட்டில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் மனிதனும் தன் படைப்பாற்றலை மறந்து இயந்திரமாக மாறிவிடுகிறான்.

இந்த ஆவணப்படத்தில்  உரையாடலும், பின்னணியாக வரும் வர்ணனைகளும், விவரிப்புகளும்  இல்லை. கண்ணாடிக் குவளை மனிதனின் கலை உணர்வால் படைக்கப்படுவதையும், இயந்திரத்தால் கண்ணாடிக் குவளை செய்யப்படுவதும் மட்டுமே அழகான இசையுடன் நமக்கு காட்சிப்படுத்தப்படுகிறது.வெறும் பதினோரு நிமிட காட்சிகள் நமக்குள் செலுத்தும் உணர்வு உண்மையிலுமே  அலாதியானது. 1958-ல் வெளி யான இந்த ஆவணப் படம் ஆஸ்கர் விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.