யார் இந்த கோரி கௌஃப்?



இன்று விளையாட்டு உலகமே வியப்புடன் உச்சரிக்கும் ஒரு பெயர் கோரி கௌஃப். டென்னிஸ் உலகை ஆள வந்திருக்கும் குட்டி இளவரசி இவர். ஐந்து முறை விம்பிள்டன் கோப்பையைக் கைப்பற்றிய  வீனஸ் வில்லியம்ஸை விம்பிள்டன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியிலே வீழ்த்தி வாகை சூடியிருக்கிறார் கோரி கௌஃப். இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? கோரி கௌஃப்பின் வயது 15 தான்.

இவரை விட 24 வயது மூத்தவர் வீனஸ். தவிர, மகளிர் டென்னிஸ் உலகத் தர வரிசைப் பட்டியலில் கோரி இருப்பது 313-ம் இடம். வீனஸோ 44-வது இடம். 1997-க்குப் பிறகு வீனஸ் வில்லியம்ஸ் இப்போது தான் விம்பிள்டன் தொடரின் முதல் சுற்றிலிருந்து வெளியேறுகிறார். அத்துடன் கௌஃப் பிறப்பதற்கு முன்பே இரண்டு முறை விம்பிள்டன் கோப்பையை வென்றவர் வீனஸ்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பிறந்த கோரியை, ‘கோகோ’ என்ற செல்லப் பெயரில் அழைக்கிறார்கள். செரீனா வில்லி யம்ஸின் ஆட்டத்தைப் பார்த்து ஏழு வயதிலேயே டென்னிஸ் மட்டை யைப் பிடிக்கத் தொடங்கினார் கோரி. இவரது ரோல் மாடல் கூட வில்லியம்ஸ் சகோதரிகள்தான்.
தந்தை கோரி கூடைப்பந்து விளையாட்டில் பெரிய ஜாம்பவான் மற்றும் கோரியின் முதல் டென்னிஸ் பயிற்சியாளர். ஆரம்ப நாட்களில் கோரியையும் அவரின் உடன் பிறந்தவர்களையும் கூடைப்பந்து விளையாட்டில் ஈடுபடுத்த தந்தை விரும்பினார். ஆனால், கோரிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

தந்தையும் கோரியின் டென்னிஸ் காதலுக்கு எந்தவிதமான தடையையும் விதிக்கவில்லை. கோரியின் தாய் காண்டி ஹெப்டத்லான் பிளேயர். டென்னிஸின் மீதான ஆர்வத்தால் பள்ளிக்குச் செல்லாமல் ‘ஹோம் ஸ்கூலிங்’ சிஸ்டத்தில் வீட்டிலேயே பாடம் பயின்றார் கோரி. டென்னிஸின் சகல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்ட கோரி, ஜூனியர் களுக்கான தேசிய அளவிலான போட்டி களில் பங்கேற்று அள்ளி வந்த பதக்கங்களும், பட்டயங்களும் ஃபுளோரிடாவில் உள்ள அவரது வீட்டின் வரவேற் பறையை அலங்கரிக்கின்றன.  14  வயதிலேயே புரொபஷனல் டென்னிஸுக்குள் நுழைகின்ற தகுதியைப் பெற்று, சர்வதேச அளவில் கலக்கி வருகிறார்.

கவனம் சிதறாமல் மனமும் உடலும் ஒரே நேர்கோட்டில் இணைய, வலது கையைப் பின்னால் இழுத்து, முதுகை வில்லைப்போல வளைத்து, ராக்கெட்டை மூன்றுமுறை நன்றாகச் சுழற்றி, பந்தை எப்போது அடிப்பார் என்று எதிராளியைத் திணற வைத்து, எதிர்பாராத ஒரு நொடியில் 200 கி.மீ வேகத்தில் பந்தை சர்வ் செய்வது கோரிக்கே உரியது.

ஆட்டம் தொடங்கி முடியும் வரை எனர்ஜி குறையாமல் இருப்பது, எதிராளி கணிக்க முடியாத அளவுக்கு பந்தை வெவ்வேறு திசைகளில் மாற்றி மாற்றி அடிப்பது, பூமியை அதிர வைக்கும் கிரவுண்ட் ஸ்ட்ரோக், தோல்வி யடைந்தபோதும்கூட புன்னகை மாறாமல், தன்னை வீழ்த்திய  
எதிராளியிடம் கைகுலுக்கிப் பாராட்டுவது... முக்கியமாக நிதானமாக ஆடுவது என இவரது டிரேட் மார்க்குகள் ஏராளம்.

விளையாட்டைத் தாண்டி கறுப்பினப் பெண்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகிறார் கோரி கௌஃப். விளையாட்டின் மூலம் மக்களின் மத்தியில் கிடைத்த புகழ், பிரபலத்தை தன் இன மக்களுக்காகப் பயன்படுத்தும் கோரியை இணையவாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

ஒரு காலத்தில் கறுப்பினத்தில் பெண்ணாகப் பிறந்துவிட்டால் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அடிமையாக வேலைக்குப் போக வேண்டும் அல்லது வெள்ளையர்கள் யாருக்காவது அடிமையாக இருக்க வேண்டும். இன்றும் கூட இந்நிலை தொடர்கிறது. முன்பு கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் என்பதால் ஆரம்ப காலத்தில் பலரின் கேலி, கிண்டல்களுக்கு வில்லியம்ஸ் சகோதரிகள் ஆளானார்கள்.

வெளிநாடுகளில் அவர்களை இனவெறியுடன் அணுகினார்கள். எதிலும் துவண்டு போகாமல் டென்னி ஸில் தம் முழுத்திறமையை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களைத் தம்வசமாக்கினார்கள்.

இப்போது புதிய கறுப்பின சரித்திரத்தை எழுத வந்திருக் கிறார் கோரி கௌஃப்.‘‘டென்னிஸ் மைதானத்துக்குள் என்னால் யாரையும் வீழ்த்த முடியும்...’’ என்கிற கோரி கௌஃப் அதைச் செய்தும் காட்டுகிறார்.

த.சக்திவேல்