உலகை உலுக்கிய புகைப்படம்



சில வருடங்களுக்கு முன் சிரியாவைச் சேர்ந்த  சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது.  மண்ணில் முகம் பதித்து தலை கீழாக அவன் படுத்திருந்த அந்தப் புகைப்படம் உலகையே உலுக்கி எடுத்தது.
யுத்தத்துக்கு எதிரான ஒரு குரலாக அந்தப் புகைப்படம் அடையாளப்படுத்தப்பட்டது. இப்படி எவ்வளவே துயரச் சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன. அந்தச் துயரச் சம்பவங்களைப் புகைப்படமாகப் பார்க்கும்போது அதைக் கடக்க முடியாமல் தவிக்கிறோம். அந்தப் புகைப்படம் சில நிமிடங்களாவது உலகையே உலுக்கி எடுத்துவிடுகிறது.

அப்படியான ஒரு புகைப்படம் கடந்த வாரம் வெளியாகி பலரின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கிறது.மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரைச் சேர்ந்தவர் ஆஸ்கர் அல்பெர்டோ. அவருக்கு அழகான மனைவியும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். ஊழலும் வன் முறையும் வறுமையும் மிகுந்த ஒரு தேசம் எல் சால்வடார்.

சரியான வேலை கிடைக்காமல் பலரும் அங்கே கஷ்டப்படுகிறார்கள். அங்கே வாழும் பலரின் கனவு அமெரிக்காவுக்குப் போய் எப்படியாவது பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும். அங்கு மட்டுமல்ல, உலகின் ஏழ்மையான நாடுகளில் வாழும் பலரின் கனவும் இதுவே. அதனால் அமெரிக்காவில் ரகசியமாக, விதிமுறையை மீறி குடியேறு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிபர் டிரம்ப் இதற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

விஷயத்திற்கு வருவோம். ஆஸ்கருக்கும் அமெரிக்காவுக்குப் போய் பணம் சம்பாதித்து ஒரு வீட்டைக் கட்ட வேண்டும்; குழந்தையை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது கனவு. அதனால் அவர் அமெரிக்காவில் குடியேறுவதற்கான கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்படவே, நதியைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய திட்டம் தீட்டினார்.

அப்படி நதியைக் கடக்கும்போது அவரது செல்ல மகள் நதிக்குள் விழுந்துவிட்டாள். குழந்தையைக் காப்பாற்றி தனது சட்டைக்குள் வைத்து நீந்தினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவரும் நதியில் மூழ்கி இறந்துவிட்டனர். கடந்த வாரம் அவர்களின் சடலம் கரை ஒதுங்கியது. அதில் தந்தையின் கழுத்தைச் சுற்றி கையை வைத்துக்கொண்டு, அவரின்  சட்டைக்குள் மகள் இருக்கும் காட்சி எந்த ஒருவரையும் கலங்கடித்துவிடும்.