ஆளில்லா விமானம்



ஒரு காலத்தில் கூரியர் நிறுவனங்கள் தான் அதிகமாக பொருட்களை டெலிவரி செய்து வந்தன. இப்போது ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களே ஆட்களை நியமித்து டெலிவரி செய்கின்றன. பெரு நிறுவனங்கள் டெலிவரி செய்ய ரோபோக்களைக் கூட வைத்திருக்கின்றன. ஆனால், ‘அமேசான்’ நிறுவனம் ஒருபடி மேலே போய்விட்டது. ஆம்; ட்ரோன் மாதிரியான ஆளில்லா விமானத்தை களத்தில் இறக்கியுள்ளது.

‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்...’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது அமேசான். இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள பொருட்களை இதனால் டெலிவரி செய்ய முடியும்.

அமேசானின் இந்தச் சேவைக்கு ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. ஆளில்லா விமான சேவை எங்கு, எப்போது ஆரம்பிக்கப்போகிறது என்பதை அமேசான் ரகசியமாக வைத்திருக்கிறது. ஜூலை ஆரம்பத்தில் இந்தச் சேவை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.