கீதா கோபிநாத்-சக்தி



உலகளாவிய பொருளாதார நிறுவனம் ‘சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்)’. வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் 189 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
சர்வதேச வர்த்தகத்தைக் கட்டுக்குள் வைத்து அதனை மேம்படுத்துவது, பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் நாடுகளுக்கு வழிகாட்டி உதவுவது, பணத்தட்டுப்பாட்டையும் அந்நிய செலாவணியையும் நிர்வகிப்பது உட்பட பல பணிகளைத் திறம்பட செய்து வருகிறது.

பெரும்பாலும் இந்நிறுவனத்தின் உயரிய பொறுப்புகளை ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்களே வகித்துவந்தனர். முதல் முறையாக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் என்ற இந்தியப் பெண் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் பிறந்து மைசூரில் வளர்ந்த கீதா, கேரள முதல்வருக்கு பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

‘‘உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் கீதா. அசாதாரணமான கல்வியறிவும் அட்டகாசமான நிர்வாகத் திறமையும் கொண்டவர். சர்வதேச பொருளாதாரத்தில் அனுபவம் மிகுந்த அவர் இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்...’’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்ட்டின் லகார்டே தெரிவித்துள்ளார்.