எழுத்தாளர் லீ இஸ்ரேல்



நியூயார்க்கில் உள்ள ஓர் எளிமையான யூத குடும்பத்தில் பிறந்தவர் லீ இஸ்ரேல். அவருடைய உடல் பருமன் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த தன்னந்தனியாகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு நண்பர் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. எழுத்தின் மீதான தீராத காதலால் பத்திரிகைகளுக்குக் கதைகள், கட்டுரைகள் எழுதினார். அதில் கொஞ்சம் வருமானம் கிடைத்தது.

புனைப்பெயரில் எழுதுவதால் அவர் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர்களுக்குக் கூட லீயைப் பற்றிய விவரம் தெரியாது. ஒரு அலுவலகத்தில் எழுத்தாளராக வேலைக்குச் சேர்ந்தார். பெண்ணாக இருப்பதால் வீடு, அலுவலகம் தாண்டி அவருக்கு வேறு இடம் கிடையாது. தனிமைச் சூட்டில் இருந்து விடுபட தினமும் குடித்தார்.

குடித்துவிட்டு அலுவலகத்துக்குப் போன போது வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டார். அவருக்கு ஆத்ம துணையாக ஒரு பூனை மட்டுமே இருந்தது. வேலையை விட்டதால் சாப்பிடக்கூட லீ கஷ்டப்பட்டார். வீட்டுக்கு வாடகை கொடுக்கமுடியாமல் அவமானங்களைச் சந்தித்தார். பூனைக்குக் கூட பால் வாங்க முடியவில்லை. ஒரு நாள் பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விடுகிறது. பூனையைக் காப்பாற்ற மருத்துவ மனைக்குப் போகிறார் லீ. ஆனால், அவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கேட்கிறார்கள்.

நிலைகுலைந்து போன லீ, என்ன செய்வ தென்று தெரியாமல் திணறுகிறார். கையறு நிலையை மறப்பதற்காக ஒரு நூலகத்துக்குச் சென்று தனக்குப் பிடித்தமான எழுத்தாளருடைய புத்தகத்தை வாசிக் கிறார். அந்தப் புத்தகத்தினுள் பிரபல எழுத்தாளர் எழுதிய ஒரு கடிதம் கிடைக்கிறது. அமெரிக்காவில் பிரபலமான நடிகர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்களின் கடிதங்களுக்கு பயங்கர மவுசு. பிரபலங்களின் கடிதங்களைப் பொக்கிஷம் போல பாதுகாக்கிறார்கள். அதுவும் அந்தப் பிரபலமானவர் இறந்துபோயிருந்தால் ஒரு கடிதத்துக்கே ஆயிரக்கணக்கான டாலர்கள் கிடைக்கும்.

அந்தக் கடிதங்கள் லட்சக் கணக்கான டாலர்களுக்கு ஏலம் போவது தனிக்கதை. லீ அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய் ஒருவரிடம் விற்கிறார். கொஞ்சம் பணம் கிடைக்கிறது. கடிதத்தை வாங்கியவர் ‘‘இந்த மாதிரி வேறு கடிதங்கள் கிடைத்தால் கொண்டு வாருங்கள்...’’ என்கிறார். லீக்கு பொறி தட்டு கிறது.

பிரபலங்களின் கடிதத்தைப் போல போலியான கடிதங்களை உருவாக்கி பலரிடம் விற்கிறார். அப்படிக் கிடைக்கும் பணத்தில் பூனைக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்துகிறார். சுமார் நானூறு கடிதங்களுக்கு மேல் போலியாகத் தயாரித்து பணம் பார்த்திருக்கிறார் லீ.

எல்லாமே பிழைப்புக்காக அவர் செய்திருந்தாலும் ஒரு கட்டத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். உலகின் பெரிய இலக்கிய மோசடியாக லீ செய்த காரியம் பார்க்கப்படுகிறது.  தான் கடந்து வந்த வாழ்க்கையையும், அந்த 400 கடிதங்களைப் பற்றியும் எந்தவிதமான ஒளிவு மறைவுமில்லாமல் ‘Can You Ever Forgive Me?’ என்ற சுயசரிதையில் எழுதியிருக்கிறார் லீ இஸ்ரேல். ஒப்புதல் வாக்குமூலம் போல விரிகின்ற இந்தப் புத்தகம் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கடைசி வரைக்கும் லீ திருமணமே செய்து கொள்ளவில்லை. தனியாகவே வாழ்ந்து தனியாகவே இறந்துவிட்டார். இன்று அவரின் சுயசரிதை லட்சக்கணக்க்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.