கலக்கல் போன்



சீனாவில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் டாப் 10-க்குள் இடம்பிடித்த ஒரு நிறுவனம் ‘விவோ’. சீனா, ரஷ்யா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ‘விவோ’ போனுக்கு என்றே தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவை முதன்மை சந்தையாக வைத்து  விலை குறைவான ஸ்மார்ட்போன்களை இங்கே களமிறக்கி வருகிறது ‘விவோ’. மூன்று வருடங்களுக்கு முன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சாராக இருந்தது ‘விவோ’தான். சில மாதங்களுக்கு முன் வெளியான ‘Vivo Y93’ என்ற மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற் பைப் பெற்றி ருக்கிறது.

அதனால் இதன் விற்பனையை அதிகரிக்க விலையைக் குறைத்திருக்கிறார்கள். இந்தப் போனிலுள்ள வசதிகளைப் பார்ப்போம்.டேப்லெட்டுகளுக்குப் போட்டி போடும் விதமாக 6.20இன்ச் மெகா டிஸ்பிளே, ஹெச்.டி வசதியிருப்பதால் வீடியோக்களைத் துல்லியமாகப் பார்க்க முடியும்.

  MediaTek Helio P22 என்ற புதிய வகை பிராசஸர், 8 எம்பியில் செல்ஃபி கேமரா, 13 எம்பி மற்றும் 2 எம்பியில் இரண்டு பின்புற கேமராக்கள், 4ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ், எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ளும் வசதி,  ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்க 4030mAh பேட்டரி திறன், மைக்ரோ யூஎஸ்பி, எஃப்.எம். ரேடியோ, புளூடூத், வை-பை வசதி,1520 x 720 ரெசல்யூசன், 163 கிராம் எடை, டூயல் சிம் என சகல வசதிகளும் இதிலுள்ளன.

நெபுலா பர்ப்பிள் வண்ணத்தில் இந்தப் போன் சந்தையில் கிடைக்கிறது. இப்போதைய விலை ரூ.10,990