நடக்கும் கார்



இதோ வந்துவிட்டது மணிக்கு ஐந்து கி.மீ வேகத்தில் நடக்கும் ‘வாக்கிங்’ கார். ‘‘தொழில்நுட்பம் உலகிற்கு அளித்திருக்கும் கொடை...’’ என்று சமூக ஆர்வலர்கள் இந்தக் காரைக் கொண்டாடுகின்றனர்.
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது பாதிப்படையும் இடங்களுக்குச் சென்று மக்களை மீட்கவும், எந்த வாகனமும் செல்ல முடியாத கரடு முரடான மலைப்பகுதிகளில் பயணிக்கவும் வாக்கிங் காரைத் தயாரித்திருக்கிறது தென் கொரியாவின் ‘ஹூண்டாய்’ நிறுவனம்.

ஒரு சிறிய விண்கலத்தைப் போல காட்சிதரும் இக்காரை உருவாக்க மூன்று வருடம் ஆகியிருக்கிறது. செங்குத்தான பகுதிகளில் ஏறுவதற்காகவும், தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களைத் தாண்டுவதற்காகவும் ரோபோட்டிக் கால்களை இதில் பொருத்தியுள்ளார்கள்.

இடிந்துபோன கட்டடக் குவியல்களுக்கு நடுவிலும், வெள்ளப் பாதிப்புள்ள சேற்று நிலங் களிலும் கூட எந்தவித சிரமமுமின்றி வாக்கிங் காரால் பயணிக்கமுடியும். இந்தக் கார் மக்களுக்கானது; விற்பனைக்கு அல்ல என்பது சிறப்பு.