உலக மெகா எத்தன்!வரலாற்று சுவாரசியங்கள் 7

பொகீமியா என்பது செகஸ்லோவேக்கியா நாட்டிலுள்ள மாநிலம். அதிலுள்ள ஹோஸ்டைன் நகர மேயருக்கு மகனாகப் பிறந்தவர்தான் விக்டர்  லஸ்டிக் (1890-1947).  ஜெர்மனியிலுள்ள  டிரெஸ்டன் நகரிலிருந்த  ஒரு  சிறந்த பள்ளிக்கு  அனுப்பப்பட்டு விக்டர் கற்றுக்கொண்ட மொழிகள் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியன். பாரிஸ் சென்ற தன் மகன் பாரிஸில் நன்றாகப் படிக்கிறான் என்று நினைத்திருந்தார்  விக்டரின் தந்தை.

பாரிசில் காஸனோவா வாகத்  திரிந்த விக்டர் கேளிக்கை நாயகனானார். பிரிட்ஜ், போக்கர், பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் கைதேர்ந்தார். அமெரிக்காவின் புதிய பணக்காரர்கள், ஐரோப்பாவுக்கு உல்லாசப் பயணம் வருவது அப்போதைய  நாகரீகமாக  இருந்தது.

அவர்கள் வரும் சொகுசு கப்பல் களில், சீட்டு விளையாடும்  புலிகள்  சிலர்  ஊடுருவி இருந்தனர்.இவர்களிடம்   சிக்கிய  பணக்காரர் களில் ஒருவர் கூட பணத்தை
இழக்காமல் வீடு போய்ச் சேர்ந்ததில்லை. பிரபு வம்சம் என்று தற்பெருமை தாளம் வாசித்த விக்டர், சூதாட்ட கேங்கில் இணைந்து விரைவில் டாப் வீரரானார். 

நிக்கி ஆர்ன்ஸ்டைன் என்பவர், விக்டரின் கைநேர்த்தியைப் பார்த்து வியந்து, அவரைத் தனது சிஷ்யராக்கி தன்னுடைய கலைகளை சொல்லிக் கொடுத்தார். ஒருவரின் பலவீனத்தை கண்டு பிடித்து வீழ்த்துவது எப்படி? பிறகு  எதிலும்  சிக்காமல் மீள்வது  எப்படி என்கிற வித்தைகளை பூரணமாக விக்டர், நிக்கியிடமிருந்து  கற்றுக்கொண்டார்.

முதலாவது  உலகப்போர் முடிந்த பின்னர் நிக்கியும், விக்டரும் அமெரிக்காவிற்குப் பயணமானார்கள். தொடர்ந்து அவர்கள் அங்கே பல திருவிளையாடல்களை நடத்தியதால் விக்டரிடம் 25 ஆயிரம் டாலர் களுக்கான அரசாங்கப்  பத்திரங்கள் வந்துசேர்ந்தன. அவ்வளவும் தங்க முட்டையிடும் வாத்து. இதை  எப்படி  கரன்சியாக்குவது  என்ற யோசனை விக்டருக்கு.

1924-ஆம் ஆண்டு கான்சாஸ் நகரில் வங்கியாளர் கிரீன் என்பவரைச் சந்தித்த விக்டர், தன்னை வான் லஸ்டிக் பிரபு என அறிமுகப் படுத்திக்கொண்டார்.  ஆஸ்திரியா  நாட்டைச்  சேர்ந்தவரான வான் லஸ்டிக் போரினால்  தனது குடும்ப சொத்துகளை விற்றுவிட்டு 50 ஆயிரம்  அமெரிக்க டாலர்களுடன் சொத்து வாங்க வந்திருப்பதாக கூறினார்.

பணத்தை, பத்திரங்கள் ரூபத்தில் எடுத்துக்காட்டியதால் பாங்கர் அவரை பூரணமாக நம்பினார். இரண்டு கட்டுகளை  எடுத்து  அவர் முன்னால்  வைத்தார்  லஸ்டிக்.  ஒவ்வொரு கட்டும் 25,000 டாலர்கள் மதிப்பிலான பத்திரங்கள். 25000 டாலர்கள் பெறுமான பத்திரங்களை  மட்டும்  எடுத்துக்கொண்டு,  மீதியிருந்த 25,000 டாலர்களுக்கு பாங்கர் பணமாக  அவரிடம் கொடுத்தார். ஆனால் இரண்டு  கட்டுகளிலும் பாதி, கச்சிதமாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் தாள்கள் என்று அவருக்கும்  தெரியாது.

லஸ்டிக், தனக்குக் கிடைத்த 25,000டாலர் பணத்துடன் பாரீஸுக்கு 1925-ஆம் ஆண்டு  ஷிப்ட்டானார்.  டேப்பர்  டான் காலின்ஸ் என்னும் நபருடன் கூட்டாகச்  சேர்ந்தார் விக்டர். பாரிஸில் பெரிய ஓட்டல்களில் தங்கினார்கள்.

இதில் என்ன விசித்திரம் என்றால், விக்டர்  லஸ்டிக், அந்தப்  புதிய  நபரை தனது பி.ஏ என்று  எல்லோருக்கும்  அறிமுகம் செய்து வைத்தார். ஒருநாள் காலை அவர்கள் ஒரு ஓட்டலில் அமர்ந்து உணவருந்திக்  கொண்டிருக்கும்போது  எதிரே தெரிந்தது பாரீஸ்  நகரின் மிகப்பெரிய உலக  அதிசயமான ‘ஈபிள் டவர்’! அதையும் விற்று காசாக்கிய சாமர்த்தியசாலி விக்டர்.

(அறிவோம்…)