ஜோஸ் கார்மன்



பசுமை பேச்சாளர்கள் 35

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் கார்மன், பல்கலைக் கழக படிப்பை முடித்தவுடன் இயற்கை காக்க களம்புகுந்த சூழல்போராளி. பிளேன் ஸ்டுப்பிட் என்ற சூழல் அமைப்பின் துணை நிறுவனரான இவர், ஹீத்ரு விமானநிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி இருபது முறைகளுக்கும் மேல் கைதாகி பிரபலமானார். 

1985 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ஜோஸ் கார்மன், க்ரீன்பீஸ் அமைப்பின் முக்கியச் செயல்பாட்டாளர். சிரியா அகதிகள், மாற்று புதுப்பிக்கும் ஆற்றல் அமைப்புகளிலும் பேச்சு,எழுத்து ஆகிய செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபடும் இளைஞர்.

லண்டனினுள்ள SOAS பல்கலைக்கழகத்தில் அரசியல் பட்டப்படிப்பு பெற்ற கார்மன்,  2007 ஆம்  ஆண்டிலிருந்து  சூழல் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும்  இளம் களப்போராளி. சூழலைக் காக்கும் அமைப்புகளில் உறுப்பினராகவும், டைம்ஸ், இண்டிபென்டன்ட், கார்டியன் ஆகிய பத்திரிகைகளில்  கட்டுரையும் எழுதிவருகிறார். 

யுனிசெஃப்பில் ஆலோசகராகப் பணியாற்றியுள்ள கார்மன், முன்னாள் தொழிலாளர் கட்சி  பணியாளரும் கூடத்தான். “நாம் விரும்புகிற, பொழுதுபோக்கும் இடத்தை அடுத்த தலைமுறைக்கு நல்ல நிலையில் பகிர்வது நமது கடமை” என்கிறார் சூழலியலாளர் கார்மன். 2005 ஆம் ஆண்டு கார்மன் தொடங்கிய  ‘பிளேன்  ஸ்டுப்பிட்’  என்ற  அமைப்பு,  விமானங்கள் அதிகரிப்பு,  ஏர்போர்ட்   விரிவாக்கம்,  விமான விளம் பரங்களை கடுமையாக   எதிர்க்கிறது.

பிபிஏ, ஈஸிஜெட் ஆகிய  நிறுவனங்களின் அலுவலகங்களை  இவ்வமைப்பு முற்றுகையிட்டு மூடியது  இதன்  துணிச்சலுக்கு  எக்சாம்பிள்.  “சிகரெட்டை  குடித்துக்கொண்டே கேன்சர்  வராது   என்று  நம்பினால் அரசு கூறுவதையும்  நம்புவதில்  பிரச்னையில்லை” என்கிறார் கார்மன். விமானங்களால்  மாசு  அதிகரிக்கிறது என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை. 

பொருளாதார வளத்துக்கு  கரிம  எரிபொருட்களை நம்பும்  அரசுகளை,  அரசியல்  தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் கார்மன்,  “மாசற்ற  போக்குவரத்து வசதிகளை மக்கள்  பயன்படுத்த  அரசு  ஊக்குவிக்க  வேண்டும்.

பொருளாதாரத்திலும்  இதற்கான  தீர்வுகளை   திட்டமிடுவது  தேவை.  நான் சிறுவயதில் வாழ்ந்த வேல்ஸ் பகுதி வனப்பகுதியை ஒட்டியது என்பதால், இயற்கை மீதான பாதுகாப்பு என் மனதில் நீங்காமல் தங்கிவிட்டது” என உற்சாகம் குறையாமல்  பேசுகிறார் சூழலியலாளரான  கார்மன்.