அழிந்து வரும் அரிய விலங்கு ஹைனான் கிப்பன்



சீனாவின் மழைக்காடுகளில் ஹைனான் கிப்பன் (Nomascus hainanus) எனும் வாலில்லாத குரங்கினம் வெறும் 26 மட்டுமே உள்ளன என்று வெளியான செய்தி,  உலகில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்களையும் விலங்கு நேசர்களையும் திகைக்க வைத்துள்ளது.

தென் சீனாவின் கடல்புறத்தில் உள்ள ஹைனான் பகுதியில் இந்த குரங்குகள் சிறிய பரப்பில் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2000க்கும் மேற்பட்ட ஹைனான் கிப்பன் வகை குரங்குகள் வாழ்ந்து வந்த இடம்தான் இது. காடுகள் அழிவதாலும், தொடர் வேட்டையாலும் இவை இன்று எண்ணிக்கையில் சொற்பமாகிவிட்டன. 

கிப்பன் குரங்கினத்தில் மொத்தம் 17 வகைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்திலும் ஹைனான் கிப்பன் குரங்குகள் வேறுபட்ட தனித்துவமான பழக்கவழக்கங்கள் கொண்டவையாகும். பொதுவாக கிப்பன் குரங்கினம் ஆண், பெண், நிறைய குட்டிகள் என குடும்பத்தோடு வாழும். ஆனால் இந்த ஹைனான் கிப்பன் வகை குரங்கினம் ஒரு ஆண் குரங்கு நிறைய பெண் குரங்குகளை துணைவியாகக் கொண்டுள்ளது.

மற்ற குரங்குகளை விட வேறுபட்டு அமைந்த இந்தக் குடும்ப வாழ்வு அமைப்பு இதன் எண்ணிக்கை குறைவுக்கு காரணமா என்று கேள்வி எழுந்தபோது, ‘‘குடும்ப சமூக அமைப்பு இயல்பான ஒன்றுதான்’’ என்று கூறியிருக்கிறார் இக்குரங்குகளை பல்வேறு ஆண்டுகளாக ஆராய்ந்து வரும் சாமுவேல் தர்வே.

முதிர்ச்சியடைந்த ஹைனான் குரங்கு தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனக்கான இணையைத் தேடிக்கொள்வதோடு, புதிய குழு ஒன்றையும் உருவாக்கிக்கொள்கிறது. ஆனால் சில குரங்குகள் இதனைக் கடைப் பிடிப்பதில்லை.

அவை தனியாகவே வாழ்கின்றன. இந்த தனிமை இனப்பெருக்கம் குறைவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. ‘‘இக்குரங்குகள் ஏன் இப்படி தனி வாழ்க்கையை தேடிக்கொள்கின்றன என்பதை அறிய முடியவில்லை’’ என்று கூறுகிறார் சாமுவேல் தர்வே.

அண்மையில் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர் (IUCN) அமைப்பு வெளியிட்டுள்ள அழிவிற்குள்ளாகும் ஆபத்துள்ள  25 அரிய விலங்குகள் பட்டியலில் ஹைனான் கிப்பன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதில் லெமூர், டார்சியர் உள்ளிட்ட அழிந்துவரும் விலங்குகளும் உள்ளன.  ‘‘இந்தப் பட்டியலின் மூலம் விலங்குகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்கிறார்’’ இந்த அறிக்கையின் தயாரிப்பில் உதவிய ஆய்வாளர் கிறிஸ்டோர் ஸ்விட்சர். காகிதத்தில் மட்டுமே இல்லாமல் களத்திலும் காரியங்கள் நடந்தால் மட்டுமே அரிய விலங்குகள் பிழைக்க வாய்ப்புண்டு.

- கா.சி.வின்சென்ட்