ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய மூன்று தந்தைகள்!



செல்ஃபி வித் சயின்ஸ் 44

இன்று உலகம் முழுவதுமே ஒளியால் நனைந்து கொண்டிருக்கிறது. இரவைப் பகலாக்கும் தந்திரத்தை மனிதன் கண்டு கொண்டிருக்கிறான். ‘மின்சாரம்’ - கேட்டாலே ஷாக் அடிக்கிற பெயர்.

இது எவ்வாறெல்லாம் உருவாகிறது என்று பார்த்தால் அதைவிட பெரிய ஷாக் ஏற்படும். இதோ உங்களுக்கு ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக்.யுரேனியம் அணுசக்தி தனிமம். அண்ட சராசரங்களையும் ஆட்டி வைக்கிற தனிமம்.

அணுமின் நிலையங்களின் மோஸ்ட் வான்டட் எலிமென்ட். யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், அணுசக்தி உலகில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டதும், தனிமத்தின் கனமான மையக் கருக்களை நியூட்ரான்களைக் கொண்டு சிதைத்து அதன் மூலம் மிகப் பெரிய ஆற்றலைப் பெறுவதும் இந்த யுரேனியம் வருகைக்குப் பிறகுதான்.

1789ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்த அதே ஆண்டில்தான் யுரேனியம் பிறந்தது. புரட்சிக் குழந்தை அல்லவா? அதனால்தான் யுரேனியம் ரசாயனத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.அறிவியலின் வரலாற்றில் பல அபூர்வ நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதிய புதிய ஆராய்ச்சிகளின் விளைவாக, பல்வேறு விதமான சேர்மங்கள் உருவாகிக்கொண்டே இருந்தன. அவற்றில் ஒருசில சேர்மங்கள் மிகப் பயனுடையதாக இருந்தன. பல சேர்மங்கள் தொடர் ஆராய்ச்சியில் பயனுள்ளவையாக இல்லை. இவ்வாறு குறைந்த பலனுடைய சேர்மங்கள், அல்லது பயனில்லாத சேர்மங்கள் நீண்ட காலம் எந்தவிதமான பயன்பாடும் இல்லாமல் ஒதுங்கியே கிடந்தன.

ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வருமல்லவா? சில காலம் பயன்படுத்தப்படாமல் ஒதுங்கியே கிடந்த சேர்மங்களை இன்னொரு விஞ்ஞானி புதிய ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவார். அந்த மந்தமான சேர்மம் இப்போது அதிக அளவில் பயன்படத் தொடங்கும். மந்தமான சேர்மத்தின் தேவை அதிகரிக்கும். மந்தமான சேர்மத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பொருள் அதிகப் பயனுடையதாக இருக்கும். இந்த நிலையில் அந்த மந்தமான சேர்மத்தை யார் கண்டுபிடித்தார் என்பது தெரியாமலே போய்விடும். புதிதாக எந்த விஞ்ஞானி அதிக அளவில் பயன்படுத்துகிறாரோ, அவரே அச் சேர்மத்தை (அல்லது தனிமத்தை) கண்டுபிடித்தவராக கருதப்படுவார்.

இப்படித்தான் ‘யுரேனியம்’ என்ற குழந்தைக்கு மூன்று பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் ஆதியில் யுரேனியத்தைக் கண்டுபிடித்தவர் யாரென்று ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டார்கள். அவர் பெர்லின் நகரத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஹென்றி க்ளாப்ராத். இவர்தான் யுரேனியத்திற்கு சொந்தம் கொண்டாடப்பட வேண்டிய ‘தந்தை’ என்று கூற காரணம் உண்டு!

‘பிட்ச்ப்ளாண்ட்’ என்று ஒரு தாது இருக்கிறது. பாப்புலரான கனிமம்தான் இது. துத்தநாகம் மற்றும் இரும்பின் தாதுவாக கருதப்பட்டது. இந்த பிட்ச்ப்ளாண்ட் தாதுவை நம்முடைய விஞ்ஞானி க்ளாப்ராத் அளவுக்கு யாரும் நுட்பமாக ஆராயவில்லை. அவர்தான் பிட்ச்ப்ளாண்ட் தாதில் அதுவரை அறியப்படாத தனிமம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தார். அது கறுப்பு நிறத்தில், அதே சமயம் ஒளிரக்கூடிய தன்மை பெற்றிருந்தது. யுரேனஸ் கோளின் தன்மையை ஒத்து இருந்ததால் அதற்கு அப்போது ‘யுரேனியம்’ என்று பெயர் சூட்டினார்கள்.

அதற்குப் பிறகு 1843ம் ஆண்டு வரை யுரேனியத்தின் வெற்றி நடை தொடர்ந்தது. வேதியியல் வரலாற்றில் யுரேனியம் யூத் ஹீரோவாக வலம் வந்தது. 1843ம் ஆண்டு ஜென் பெலிகோ என்ற விஞ்ஞானி க்ளாப்ராத்தின் வில்லனாக வந்தார் ‘‘க்ளாப்ராத் கண்டுபிடித்தது தனி யுரேனியம் அல்ல; அது யுரேனியம் ஆக்சைடு என்ற சேர்மம்’’ என்று சொல்லி, அதை நிரூபித்தும் காட்டினார். அந்த வகையில் ஜென்பெலிகோ, ‘‘நான்தான் யுரேனியத்தின் தந்தை’’ என்று கூறிக் கொண்டார்.

‘‘நான்தான் அவளைத் ெதாட்டு தாலி கட்டிய முதல் புருஷன்’’ என்று ஒரு படத்தில் வடிவேலு நகைச்சுவை வருமே... அதுபோல மெண்டலீஃப் என்ற வேதியியல் விஞ்ஞானி, ‘‘யுரேனியத்தின் உண்மையான தந்தை நான்தான்’’ என்று கூறிக் கொண்டார். அவர் சொன்னதற்கும் ஒரு வலிமையான காரணம் இருந்தது.
மெண்டலீஃப் வந்து சரி செய்யும் வரை தனிம வரிசை அட்டவணையில் யுரேனியத்திற்கு சரியான இடம் கொடுக்கப்படவில்லை.

யுரேனியத்தின் அணு எடையைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு, இப்போது இண்டியம் இருக்கும் இடத்தில் யுரேனியத்திற்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. யுரேனியத்தை வரிசைப்படுத்தும்போது யுரேனியத்தின் இயல்புகள் மற்றும் அணு எடையை கவனத்தில் கொள்ளவில்லை. மெண்டலீஃப்தான் இந்த இரு தவறுகளையும் சரி செய்தார்.

அவரே யுரேனியத்தின் எடையை சரியாகக் கணக்கிட்டு, அதன் இயல்புகளையும் கருத்தில் கொண்டு அட்டவணையின் ஆறாவது தொகுதியில் அதனை வைத்தார். பிற்காலத்தில் யுரேனியத்தின் இந்த வைப்பு முறையை, விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டார்கள். ஆக, மெண்டலீஃப்தான் யுரேனியத்தை அவையத்து முந்தியிருக்கச் செய்தவர்.

அதனால்தான் சொல்கிறேன்... யுரேனியத்தின் தந்தை யாரென்று உங்களிடம் யாராவது கேட்டால், அவசரப்பட்டு ஒரு பெயரை மட்டும் நீங்கள் சொல்லிவிடக் கூடாது.
க்ளாப்ராத், ஜென்பெலிகோ, மெண்டலீஃப் ஆகிய மூன்று பேருமே யுரேனியத்தின் தந்தைகள்தான்.

(அடுத்தது என்ன?)

டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்