மனிதன் Vs இயந்திரன்



இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்கள் காரணமாக  மனிதர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் தற்போது இயந்திரமயமாகிக்கொண்டுவருகிறது.ஜப்பானியர்களே நவீன ரோபோக்களை உருவாக்கினர்.

முதல் ரோபோவை, 1954ம் ஆண்டு ஜார்ஜ் தேவோல் என்பவர் வடிவமைத்தார். அதை முதலில் ‘யுனிமேட்’ என அழைத்தனர். இது 1960ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.

இது வெப்பமான உலோகத் துண்டுகளைக் கையாளப் பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ‘யுனிமேட்’ டுக்கு ‘ரோபோ’ என்ற பெயரைச் சூட்டினார்கள்.ரோபோ என்பதற்கு, ‘மனிதன் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் இயந்திர மனிதன்’ என பொதுவாக அர்த்தம் கூறலாம்.

ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக் என்பவர் 1920ம் ஆண்டு தான் எழுதிய நாவலில் பயன்படுத்தினார். அவர் தனது ‘ஆர்.யு.ஆர்.’ எனும் நாடகத்தில் ‘ரோபோ’ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தார். அதில் மனிதர்கள் போல் தோற்றம் கொண்ட இயந்திரங்கள் பல தொழிற்சாலையில் வேலை செய்வது போல் காட்சி அமைத்திருந்தார்.

ரோபோ என்பதற்கு செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் கடும் தொழில், கடும் உழைப்பு எனப் பொருள்.வீட்டு வேலைகள் செய்ய முதலில் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது பெரிய தொழிற்சாலைகளில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் அவர்கள் பணியைச் செய்ய உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதனால் தொழிற்சாலைகளில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரிக்கிறது.

மனிதர்களைப் போல் அதற்கு மாதா மாதம் ஊதியம் வழங்கப்பட வேண்டியதில்லை. அவ்வப்போது பராமரிப்பு செய்தால் போதும்.
மேலும் தற்போதைய ரோபோக்களின் திறமையை அதிகரித்து வருகின்றனர். மனித அறிவுடன் போட்டியிடும் அளவு இவை தயாரிக்கப்படுகின்றன.
இன்னும் 3 ஆண்டுகளில் சுயமாக சிந்தித்து, பேசும் ரோபோக்களை பார்க்கப் போகிறோம்.

இவை மனிதனிடம், உரையாடவும், விவாதங்களில் பங்கேற்கவும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா. நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான ஆய்வை ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டீன் பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி சாத்தியமானால், உலகமே வியப்படையும். இந்த புத்திசாலித்தனமான தொழில்நுட்பம், மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும்.

இதுபற்றி அபெர்டீன் பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் வாம்பெர்டோ, ‘‘இதற்கான சாஃப்ட்வேர்‘‘ இன்னும் 3 ஆண்டுகளில் கிடைக்கும்’’ என நம்பிக்கையுடன் கூறுகிறார். மனிதனின் வழிகாட்டுதல் இல்லாமல், தானாகவே சிந்தித்து இவை இயங்கக் கூடியவை. சுயமாக சிந்திக்கும் ரோபோக்கள் ஆய்வில் உள்ளன.

இதனால் விரைவில் மனிதர்களின் வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்களால் 50 சதவீத மக்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று ரைஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோஷி வார்தி என்பவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது: அனைத்து வேலைகளையும் மனிதர்களை விட சிறப்பாக இயந்திரங்கள் செய்யும் காலகட்டத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கோம்.அதேவேளையில் எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்தால், மனிதர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை முன்
நிறுத்த  சமூகத்திடம் நான் வேண்டுகிறேன்.

வரும் 2050ஆம் ஆண்டுக்குள் மனிதர்களின் அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் கைப்பற்றிவிடும்.இதனால் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் வேலை இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுவர்’’ என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் ‘‘அத்தகைய சூழ்நிலையை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை’’  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதே கூற்றை புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கும் ‘‘மனித இனம் சுய அழிவை எதிர்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.மனிதன் உண்டாக்கிய ரோபோக்கள் அவனையே அழிக்கும் நிலை விரைவில் நேரும். இதுவரை திரைப்படங்களில் கண்டு கைதட்டிய நாம் சுய சிந்தனையுடனான ரோபோக்களின் வருகையை அப்படி வரவேற்க முடியாது; கூடாது.

மனிதனின் கண்டு பிடிப்புகள் அவனையே சுய அழிவுக்குக் கொண்டு செல்கிறது. கடவுள் உட்பட்ட  தனது கண்டுபிடிப்புகளைக் கண்டு மனிதனே பயப்படும் நிலை உண்டாகிவிட்டது.

- சீனி.சுப்பிரமணியன், தூத்துக்குடி.