புதுப்பிக்கப்பட்ட ஹுமாயூன் கல்லறை கலசம்!



வரலாற்றை அறிவதும், தொன்மை வரலாற்று நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதும் வெளிநாட்டில் சகஜம். இந்தியாவில் அது குறைவு என்றாலும், தற்போது அவை குறித்த விழிப்புணர்வு சிறிது சிறிதாக பரவி வருகிறது.

அவ்வகையில் ஹுமாயூன் கல்லறையின் கலசம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை அறிவோமா! டெல்லி-மதுரா சாலையில், டெல்லி நகரின் பிரதான இடத்தில் ஹுமாயூன் கல்லறை அமைந்துள்ளது. 1556ம் ஆண்டு ஹுமாயூன் இறந்தபோது பழைய கோட்டையில்தான் அடக்கம் செய்யப்பட்டார்.

அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்ட உடலின் எஞ்சிய பகுதிகள் தற்போது நினைவிடம் அமைந்துள்ள இடத்தில் புதைக்கப்பட்டது. இந்த இடத்தை ஹுமாயூன் தான் உயிரோடு இருந்தபோதே தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹுமாயூன் நூலக படிக்கட்டில் தவறி விழுந்து இறந்ததும் அவரது மனைவியும் அக்பரின் தாயாருமான நவாப் ஹாஜி பேகம் (எ) ஹமிதா பானு பேகம் இதைக் கட்டினார். 1556ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லறை 1559ல் 16 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

இங்கு ஹுமாயூன் கல்லறையைத் தவிர அவரது மனைவி, தம்பி, அவுரங்கசீப்பால் கொல்லப்பட்ட ஷாஜஹானின் மூத்த புதல்வரான தாரா ஷிகோ, சக்கரவர்த்தி ஜகந்தர் ஷர், பருக்காசியர் என்ற இரண்டாம் ஆலம்கீர் ஆகியோரது கல்லறைகளும் மற்றும் வேறு சிலரது கல்லறைகளும் அமைந்துள்ளன. இதுவே இந்தியாவின் முதல் கல்லறைப் பூங்காவாகும்.

2014 மே 30ம் தேதி மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் டெல்லியில் அடித்த புயல் காரணமாக, பால் வெண்மை நிறத்தில் அழகாகக் காட்சி தரும் கல்லறையின் குவிமாடத்தின் மீதிருந்த கலசம் விழுந்தது. 18 அடி உயரத்தில் உள்ள ஒரு மரத்தூணில் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டிருந்த அந்தக் கலசம் விழுந்து மாடம் வெறுமையாகக் காட்சி தந்ததால், தற்காலிகமாக ஒரு கலசம் பொருத்தப்பட்டது.

தங்க வேலை செய்பவர்கள், கைதேர்ந்த கைவினைஞர்கள், தச்சர்கள், பொறியாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள், உலோக ஆய்வாளர்கள், மொகலாய கட்டிட ரகசியங்களை அறிந்தவர்கள் என பலர் நடத்திய ஆராய்ச்சிகளின் பலனாக இங்கு புதிய கலசம் நிறுவப்பட்டது.

 ஹுமாயூன் கல்லறையைப் பராமரித்துவரும் ஆகாகான் கலாசார அறக்கட்டளையின் பொருளுதவியோடு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதிலிருந்த பழைய கலசம் 99.42 சதவிகிதம் தூய தாமிரத்கடுகளால் உருவாக்கப்பட்டவை.

இத்தகைய தரத்திலான தூய தாமிரம் இப்போது எங்குமே கிடைப்பதில்லை. இந்த தாமிரக் கலசம் பாரம்பரிய முறைப்படி ஷாஜஹானாபாத்தில் பாதுகாப்பான முறையில் மீண்டும் உருவாக்கப்பட்டது. பிறகு பெங்களூருவிற்கு மரப்பெட்டிகளில் அடுக்கி எடுத்துச் செல்லப்பட்டது. டைட்டன் நிறுவனம் மிக நேர்த்தியாக இதற்கு தங்க முலாம் பூசித் தந்தது.

மூன்றரை கிலோ சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி தங்க முலாம் பூசப்பட்டது. கலசத்தின் அடுக்குகள் மற்றும் மரத்தூண்களோடு சேர்த்து இதன் மொத்த எடை, 1700 கிலோ.

இவற்றை எந்தவித இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் சாரம் கட்டி மேலே எடுத்துச் சென்று அடித்தளத்திலிருந்து 30 அடி உயரத்திற்கு மேல் வெற்றிகரமாக சமீபத்தில் நிறுவப்பட்டது.

- க.ரவீந்திரன், ஈரோடு.