பண்டைக்கால பண்டமாற்று



  1. இன்று நாடு அறிய, கண்டம் அறிய ரூபாய், யூரோ, யென், தினார் என பல நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை தவிர அமெரிக்க டாலர் மற்றும் பல நாடுகளில் டாலர்கள், பிரிட்டனில் பவுண்ட், இணையத்தில் பிட்காயின் எனவும் உண்டு. இன்று ஒரு நாட்டு நாணயத்தை, மற்றொரு நாட்டில் உள்ள நடைமுறை நாணய செலாவணிக்கு ஏற்ப மாற்றிப் பெற முடியும்.



இன்றைய வளர்ச்சிநிலை அன்று கிடையாது. ஒவ்வொரு மாகாணமும், மாநிலமும், நாடும்  தனித்தனி பொருளை நாணயமாக கொண்டிருந்தன. இந்த வகையில் உலகின் அந்தக் கால ‘10’ நாணயங்களை தற்போது பார்ப்போம்! இவற்றில் சில இன்னமும் புழக்கத்தில் உள்ளன என்பது உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தரலாம்.

1. ராய் கற்கள்
படத்திலுள்ள கல்தான் இது! மைக்ரோனேசியாவில் யாப் என்று ஒரு தீவு உள்ளது. இங்கு கி.பி. 500ம் ஆண்டு முதல் இப்போதுவரை இதுதான் செலாவணி நாணயமாக இருந்து வருகிறது. மற்ற நாணயங்கள் போல அளவை வைத்தோ, அதில் இருக்கும் எண்ணை வைத்தோ மதிப்பு இல்லை. மாறாக இந்தக் கல் எவ்வளவு பழமையான வரலாறு கொண்டதோ, அதற்கு ஏற்ப மதிப்பு அதிகம்.

2. கனடியன் டயர் நாணயம்
1958ம் ஆண்டு கனடியன் டயர் என்பவர் உருவாக்கிய 5, 10, 25, 50 சென்ட், 1 டாலர், 2 டாலர் பண நோட்டுக்கள்தான் இவை. கனடாவில் நுகர்வோருக்குத் தரும் ஒரு பரிசு போல இதை உருவாக்கினர். ஆனால் இது கரன்சி போலவே மதிப்பு கொண்டதாக இப்போதுவரை இருக்கிறது. இதை பணம் போல் கொடுத்து தேவைப்படும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

3. பாட்டில் மூடி
கேமரூன் நாட்டில் உள்ள ஒரு மது நிறுவனம், 2005ம் ஆண்டு தன்னுடைய மது பாட்டில் மூடிகளின் உட்பக்கம் சிலவற்றில் பணமதிப்பை அச்சடித்து, அதனைக் கொண்டு வந்து கொடுத்து பணம் பெறலாம் என அறிவித்தது. வெற்றி பெற்றவர்கள்  மூடியைக் கொடுத்து,  பணமாக திரும்பப் பெற்றனர். உடனே இதனை பல நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கி விட்டன.

4. ஷையர் சில்வர் பணம்
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் ஒரு நிறுவனம், ஷையர் சில்வர் கார்டு என்ற ஒன்றை 2007ம் ஆண்டு அறிமுகம் செய்தது. நாம் தற்போது பயன்படுத்தும் கிரெடிட் கார்டு போன்றது இது. இந்த ஷையர் கார்டு தங்கம் மற்றும் வெள்ளி கலந்து தயாரானது. இவற்றின் கலப்புக்கு ஏற்ப மதிப்பும் கூடும். இன்றுவரை இது கரன்சியாக புழக்கத்தில் உள்ளது.



5. நாட்ஜெல்ட்
ஜெர்மன் மொழியில் Notgeld என்றால் அவசரகால பணம் என்று அர்த்தம். 1914-1923ம் ஆண்டுகளிடையே ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்வீடன், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த கார்டு எமர்ஜென்சி பணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏன்? முதல் உலகப் போரின்போது, காசு செய்யப் பயன்படும் உலோகங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது அதனால் அப்போது இந்த நாட்ஜெல்ட் கார்டுகள் அவசர கால பணமாக ஏற்கப்பட்டது. 

6. டீ கற்கள்
பிளாக் டீ, க்ரீன் டீ பதப்படுத்தப்பட்ட தேயிலை நன்கு அழுத்தப்பட்டு கற்களின் வடிவில் இருக்கும். சீனா, மங்கோலியா, திபெத் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் 19ம் நூற்றாண்டில் 1935ம் ஆண்டு வரை இவை பணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

7. பார்மிஜியானோ - ரெகியானோ
பாலாடைக் கட்டிக்கும் மதிப்புண்டு. ஆமாம்; குறிப்பிட்ட அளவு கொண்ட பாலாடைக் கட்டிகள் 300 யூரோ அல்லது 341 டாலர் மதிப்பு கொண்டவையாக கருதப்படுகின்றன. நம் ஊரில் தங்கத்தை ஈடு வைப்பது போல, கடனுக்கு ஈடாக பாலாடைக் கட்டிகளை இத்தாலிய வங்கி கிரெடியோ எமிலியோனோ 1953ம் ஆண்டு முதல் இன்று வரை ஏற்கிறது.

8. சிப்பிகள்
சாலமன் தீவுகளில் ‘லங்கா லங்கா’ என உப்பு நீர் ஏரிப் பிரதேசம் ஒன்று உள்ளது. இவை கடலிலிருந்து மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்டு உருவானவை. இங்கு கிறிஸ்து பிறப்பதற்கு 1200 ஆண்டுகள் முன்பிருந்தே, சிப்பிகள் பணமாக பயன்படுத்தப்பட்டு வந்தன என தொல்பொருள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு சிப்பியின் மதிப்பு, சாலமன் தீவில், புழக்கத்தில் இருக்கும் 100 டாலருக்கு சமம் என கணக்கில் கொள்ளப்படுகிறதாம்.

9. மொபைல் போனில் பேசும் நிமிடங்கள் உலகின் பல நாடுகளில் 2011ம் ஆண்டிலிருந்து இன்று வரை பல மால்களில், கடைகளில் வாங்கிக் குவிக்கும் பொருட்களுக்கு ஏற்ப, மொபைல் போனில் பேசும் நிமிடங்கள், கூடுதலாக ஏற்பாடு செய்து தருவது தொடருகிறது. இங்கு மொபைல் ைடம் ஏற்பாடே பணமாக செயலாற்றுகிறது.

10. 100 க்வின்டில்லியன் பெங்கோ
ஹங்கேரி நாட்டில், இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1946ம் ஆண்டு நாட்டில் பயன்படுத்தும் பொருட்களின் விலை 15 மணி நேரங்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காக உயர ஆரம்பித்து, நாட்டின் மிகப் பெரிய பணவீக்கத்துக்கு வழி வகுக்க 0.2 டாலர் மதிப்பு கொண்ட பணநோட்டை அந்த நாடு அப்போதைக்கு கூடுதலாக வெளியிட்டு சமாளிக்க வேண்டியதாயிற்று.
- ராஜிராதா, பெங்களூரு.