சாலார் ஜங் அருங்காட்சியகம்!



1951ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்ட சாலார் ஜங் அருங்காட்சியம்,  நாட்டின் 3 தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்று. தெலுங்கானா மாநிலத்திற்கே பெருமை தரும் ஐதராபாத் நகரில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகம், சென்னை எழும்பூரில் இருக்கும் அருங்காட்சியகத்தை விட ஒப்பீட்டளவில் பல மடங்கு  பெரியது.



நிஜாம் அரச வம்சத்தைச் சேர்ந்த நவாப் யூசப் அலிகான் (எ) சாலார் ஜங் என்பவர் இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கினார். இவருக்கு முன் வாழ்ந்த நிஜாம்களுக்கு இல்லாத கலைச் சுவை இவருக்கு இருந்திருக்கிறது. உள்நாட்டிலும், வெளிநாடு களிலும் கிடைத்த அபூர்வ பொருட்களை எல்லாம் வாங்கிச் சேர்த்தார் ஜங். சில பொருட்கள் அவருக்குப் பரிசாகக் கிடைத்தவை ஆகும். இவை அனைத்தையும் 36 அறைகளில் வைத்து ‘சாலார் ஜங் அருங்காட்சியகம்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்.

இதனுள் நுழைந்ததும் முதலில் நம் கண்ணில் தென்படுவது அதிசய கடிகாரம். இந்தக் கடிகாரத்துக்குள் கொல்லர் ஒருவர் பழுக்கக் காய்ச்சிய இரும்பை பட்டறைக் கல்லில் வைக்க, அதனை மற்றொருவர் சம்மட்டி கொண்டு ஓங்கி ஓங்கி அடிப்பது போன்ற சிற்பம் உண்டு. மணி 12 என்றால் 12 அடி அடித்துவிட்டு ஒதுங்கிக் கொள்வார். அதன் பிறகு ஒரு மணிக்குத்தான் வருவார். இந்த அதிசய கடிகாரத்தைப் பார்க்க, எப்பொழுதும் ஒரு கூட்டம் நின்றுகொண்டே இருக்கும்.

இதேபோல, குதிரை பூட்டிய சாரட் வண்டி ஒன்று நம் மனதைக் கவரும் வண்ணம் உள்ளது. குதிரை வண்டியை ஓட்டுபவர், சாட்டைக் குச்சி உள்பட அனைத்துப் பொருட்களும் இதில் புத்தம் புதியதாக உள்ளன. இதில் தங்க வேலைப்பாடுகளை அற்புதமாக அமைத்துள்ளனர். இது தவிர, ஒரு தாய் தனது குழந்தைக்குப் பாலூட்டும் காட்சியும், குழந்தை ஒன்று புறாவைப் பறக்க விடும் காட்சியும் அழகிய சிலைகளாக உள்ளன.



முன்பக்கம் பார்த்தால் அழகான பெண்ணாகவும், பின்பக்கம் பார்த்தால் வீரமிக்க ஆணாகவும், ஒரே சிலை இருவேறு தோற்றத்தில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். வேலைப்பாடுகள் அமைந்த மரச் சாமான்கள் அனைத்தும் ஒரு அறையிலும், தங்கம், வைடூரியம், வைரம், கோமேதகம், புஷ்பராகம் போன்ற விலை மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் ஒரு அறையிலும், அந்தக் காலத்து மன்னர்கள் பயன்படுத்திய வாள், கேடயம், தங்கக் காசுகள், வெள்ளி நாணயங்கள் அனைத்தும் ஒரு அறையிலும், இந்திய மற்றும் இத்தாலியச் சிலைகள் அனைத்தும் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் ஒரு அறையிலும் இங்கே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

இவை போக பருவப் பெண்ணொருத்தி சல்லாத் துணியால் தலையில் இருந்து கால்கள் வரை மூடிக் கொண்டு கவர்ச்சியாக நின்று கொண்டிருக்கிறாள்.அவள் அணிந்திருக்கும் மேலாடையும், கீழாடையும் இந்தச் சல்லாத் துணியை மீறி வெளியே தெரியும். இச்சிலையினை வெள்ளைச் சலவைக் கல்லில் அழகாக ஒரு இத்தாலிய சிற்பி வடித்துள்ளார். ஆடம்பரப் பிரியரான ஷாஜகான் பயன்படுத்திய வீரவாளும்,  குறுங்கத்தியும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

இங்கேயுள்ள ஒவ்வொரு அறையும், ஒவ்வொரு பொருளும் அற்புத கலைக் களஞ்சியமாக விளங்குகின்றன. தங்கம், வைரம், மாணிக்கம், சந்தனம் போன்ற பொருட்களினால் உருவான பொருட்கள் நம்மை கண்சிமிட்டி அழைக்கின்றன. மேரி அன்டோனைட் என்ற பிரிட்டிஷ் அரசி பயன்படுத்திய தந்த மேஜை, நாற்காலிகள் கூட இங்கே எழிலாக இருக்கின்றன. அழகான ஓவியக்கூடம் ஒன்றும் இங்குள்ளது.  ‘வர்ணிக்க வார்த்தைகள் இல்லை’ என சொல்வார்களே, அதற்கு உதாரணமாய் இந்த ஓவியக் கூடம் அமைந்துள்ளது.

மோனாலிசா உயிரோடு இருப்பது போல் வரையப்பட்டுள்ள அவரது ஓவியம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மைசூர் மன்னன் திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்க மேஜை, நாற்காலிகள், சாலார் ஜங்கின் குடும்ப வரலாறை சித்தரிக்கும் படங்களும் இங்கு காட்சி பொருளாக உள்ளன. சீனா, திபெத், ஜப்பான், கொரியா, பர்மா போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அரபி, உருது ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் இருந்து மன்னர் சாலார் ஜங் சிறந்த கலா ரசிகர் மட்டுமல்ல, தலைசிறந்த ஒரு கல்விமான் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்!

-  விருதை ராஜா, விருதுநகர்.