விலங்குகளுக்கு கணக்கு தெரியுமா?



ஒற்றைக்கண் பார்வையைக் கொண்டு ஒரு டம்ளரில் நாணயத்தை விழ வைக்க முடியுமா? ‘முடியாது’ என சவால் விடுகிறான் என் நண்பன்.
- ஆர்.ராஜேஷ், 8ம் வகுப்பு, சி.எம்.சி பள்ளி, தென்காசி.



உங்கள் நண்பர் கூறுவது சரிதான். ஒரு கண்ணை மூடிக்கொண்டு, ஒரு டம்ளருக்குள் நாணயத்தை விழ வைக்க முடியாது. ஒரு கண் பார்வையால் எந்த ஒரு பொருளின் முப்பரிமாணத்தையும் - அதாவது நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை துல்லியமாகக் கணிக்க இயலாது. அதனால் நாணயத்தை சரியாக டம்ளருக்குள் விழ வைக்க முடியாது. இதை ஒரு ஜாலி விளையாட்டாகவே நண்பர்களுடன் செய்து பார்க்கலாம்!

விலங்குகளுக்கு எண்ணிக்கை தெரியுமா?
- ஆர்.ரம்யா, 9ம் வகுப்பு, லிட்டில் ஃப்ளவர் பள்ளி, சேலம்.

விலங்குகளுக்கு எண்ணத் தெரியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். தேனீக்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளே இதை உறுதிப்படுத்துகின்றன. பூந்தேன் என்கிற நெக்டாரை 4 விதமான அடையாளங்களுடன் சோதித்ததில், தேனீக்களால் 4 வரை எண்ணிக்கையை அறிய முடியும் என்ற முடிவை எட்ட முடிந்தது.

நம்மைப் போலவே எண்ணும் வழக்கம் குரங்குகள், மனிதக் குரங்குகள், லெமூர்கள் ஆகிய நம் உறவினர்களிடமும் உண்டு!
சிவப்பு முதுகு சலமாண்டர் என்ற உயிரினம் 3 வரை எண்ணும். அமெரிக்க கூட் தனது முட்டைகளை எண்ணிக் கணக்கிடும். அதன் மூலம் தன் கூட்டில் வேறு பறவை முட்டை இட்டிருந்தால் கண்டுபிடித்து விடும்! இருப்பினும், ‘பரோட்டா’ சூரி திரும்பவும் எண்ணச் சொல்கிற அளவுக்கு, நமது விலங்குகள் இன்னமும் பரிணாம வளர்ச்சி அடையவில்லை!

நாம் எவ்வளவு முறை கண் சிமிட்டுகிறோம்?
- க.மதிராஜ், 10ம் வகுப்பு, சென்னை பள்ளி, சென்னை-14.

நிமிடத்துக்கு 15-20 முறை.ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சமாக 1200 முறை. ஒரு நாளில் அதிகபட்சமாக 28 ஆயிரம் முறை ஓராண்டில் குறைந்தபட்சமாக 40 லட்சம் முறை! ஆயுளில்? நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!