பூரானின் புதிர் வாழ்க்கை!



பூச்சிப் பூக்கள் 56

பூமிக் கோளத்திற்குப் பூரான்களின் வரவு 4 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சிலுரியன் பருவத்தின் இறுதிப் பகுதியாக இருக்குமெனப் புதை படிம ஆதாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. தரைவாழ் ஜந்துவான இந்தப் பூரான்களிடம் கொஞ்சம் சுளீர் விஷம் இருப்பது என்னவோ நிஜம்தான். ஆனால் திடகாத்திர மனிதனுக்கு இது சும்மா ஜுஜுபி!

தாங்க முடியாத வலியையும் நமைச்சலையும் மட்டுமே ஒரு சொற்ப அவகாசத்திற்குக் கொடுக்கும். எனினும் சில காட்டுவாசிப் பூரான்களுக்கு கானக வீரியத்தோடு விஷமிருப்பதுண்டு. இதன் கடிக்கு மனிதனே கூட ஸ்தம்பித்துப் போவான். மகா விஷம்!

சிலோப்போடா என்னும் பிரிவைச் சேர்ந்த இந்தப் பூரான்களில் 8000க்கு மேற்பட்ட சாதிகள் உள்ளன. இவற்றில் 3000 சாதிகள் மட்டுமே நாளது தேதி வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை பல்வேறு தினு சுகளில் இருக்கின்றன.

குளிர்ப் பிரதேச நாடுகளில் ஒன்றரை அங்குலத்திற்கு மிகாமலும் நம்ம நாடு மாதிரியான வெப்ப மண்டலப் பிரதேசங்களில் பத்து, பனிரெண்டு அங்குல நீளத்திலும் கூட இருக்கின்றன. இவற்றில் மண் பூரான், கல் பூரான், ட்ராபிக்கல் பூரான் என்று எத்தனையோ ரகங்கள் இருந்தாலும், நமக்குப் பரிச் சயமான ஒரே ரகம் வீட்டுப் பூரான்!

இந்த வீட்டுப் பூரானின் உடல், பழுப்பிலிருந்து சாம்பல் கலந்த மஞ்சள் வரையிலான பல்வேறு ஷேடுகளில் இருக்கும். மேற்புறத்தில் மூன்று அடர் கோடுகள் தென்படும். பூரானின் நீள் வடிவ உடல் அனேகமாக 15-17 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

உலகத்துப் பூரான் அனைத்திற்கும் இப்படி ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் உடல் கண்டங்கள் இருக்கும். முன் பகுதியில் வட்டமான தட்டைத் தலை. அதில் நீண்ட ஸ்ட்ராங் தாடைகள். ஒரு ஜோடி டுமீல் கூட்டுக் கண்கள். வெளிச்சம் மற்றும் இருட்டு மட்டுமே தெரியும். இதுபோக இரண்டு உணர் கொம்புகள்! 

பூரானின் ஸ்பெஷாலிட்டி என்பது அவற்றின் கால்கள்தான். ‘சென்டிபேடு’ என்னும் இதன் பெயருக்கு ஏற்ப, இவற்றிற்கு 100 கால்கள் இருக்கும் என்று சொல்லப்படுவதெல்லாம் எமகாதகப் பொய். விசித்திரமான பதிவுகளைத் தவிர்த்து விட்டால் நிஜத்தில் 15-17 ஜோடிக் கால்களுக்கு மேல் இருப்பதில்லை. சில எக்ஸென்ட்ரிக் ரகங்களுக்கு நூறென்ன... அதற்கு மேலும் கால்கள் இருக்கக் கூடும். இவற்றுக்கு நம்மூர் விசா இன்னும் கிடைக்கவில்லை. அந்நியப் பூரான்!

பொதுவாகப் பூரானுக்கு அதன் ஒவ்வொரு உடல் கண்டத்திலும் ஒரு ஜோடிக் கால்கள் இருக்கும். இதில் முதல் ஜோடிக் கால்கள் மட்டும் விஷம் தோய்ந்த கொடுக்குகள் போல கூர்மையான ஆயுதமாக மாறி விட்டிருக்கின்றன.

இதன் உடலில் இருக்கும் நச்சுச் சுரப்பி, ஒரு குழல் வடிவில் இக்கால்களுக்குள் முனை வரை விஷம் பீய்ச்சுகின்றன. இத்தனை ஜோடிக் கால்களை வைத்துக் கொண்டு இந்தப் பூரான் எப்படி அட்சரம் பிசகாமல் நடக்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கும் ஒரு பிரமாதமான தகவு இவற்றிடம் இருக்கிறது.

அதாவது முதல் ஜோடிக் கால்களை விட அடுத்த ஜோடிக் கால்களின் நீளம் சற்றே அதிகம். இப்படியே இந்தக் கால்களின் நீளம் அதிகரித்துக் கொண்டே போய், இறுதி ஜோடிக் கால்களின் நீளம் முதல் ஜோடியைப் போல இரண்டு மடங்கை எட்டி விடுகிறது. பலே கால்கள்!

இந்தப் பூரான்கள் உலகம் முழுவதும் அன்டார்க்டிகாவைத் தாண்டியும் கூட நீக்கமற எங்கும் நிறைந்து, வியாபித்துள்ளன. இயற்கைச் சூழலில் வாழும் இனங்கள் கானகத்தின் நீரற்ற ஆனால் ஈரப்பதமான இடங்களைத் தேர்வு செய்து வாழ்கின்றன. குறிப்பாக வெப்ப மண்டலக் காடுகள், பாலைவனங்கள் போன்ற பிரதேசங்களில் பாறைகள், கல்லிடுக்குகள், வீழ்ந்து கிடக்கும் மரங்கள் போன்ற இடங்களில் இவை ஒளிந்து வாழ்கின்றன.

வீட்டுப் பூரான்கள் வீட்டில் உள்ள ஸ்டோர் ரூம், டாய்லெட், அடுக்கி வைத்த விறகுகள், சுவர் வெடிப்புகள், பைப் லைன்கள், ஜங்க் ரூம், அம்மிக்கல், ஆட்டுக்கல், கால் நடைகளின் தண்ணீர்த் தொட்டியின் அடிப்பகுதி போன்ற இடங்களில் ரகசிய வாழ்க்கை வாழ்கின்றன.

இந்தப் பூரானின் வாழ்க்கை ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்கிற ரீதியில்தான் இருக்கிறது. பகல் முழுவதும் ரகசிய இடத்தில் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பூரானிற்கு இரவு வந்து விட்டால் பேட்டரி சார்ஜ் ஆகி உடல் முறுக்கேறிவிடும். உடனே சுமாரான மேக்கப்புடன் இரை வேட்டைக்குக் கிளம்பி    விடும்.

இவற்றின் விருந்துப் பட்டியலில் எண்ணற்ற பூச்சிகளும் அவற்றின் முட்டைகள் மற்றும் லார்வாப் புழுக்களும் அடங்கும். மேலும் இவை மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பல பூச்சிகளை உட்கொண்டு நன்மை புரிகின்றன. அதாவது வீட்டில் நம்மை இம்சிக்கும் கரப்பான் பூச்சி, சிலந்தி, கார்ப்பெட் வண்டுகள், வெட்டுக்கிளி போன்றவற்றை ஸ்வாகா செய்கின்றன.

இவை தமது தோலை உரிக்கும் சமயத்தில், உரித்துப் போட்ட தன் தோலையே கூட வயிறு முட்டப் புசித்து விடுவதுண்டு. இரையேதும் கிடைக்காத இக்கட்டான பசி நேரத்தில், கொஞ்சம் தைரியம் வந்து பெரிய இரைகளைக் கூட வேட்டையாட முயற்சிக்கும்.

இத்தகைய வேட்டையில் எலி, ஓணான், வௌவால் போன்ற பிராணிகளைக் கூட சேஸ் பண்ணத் துவங்கிவிடும். இரையை நெருங்கியவுடன் முதலில் தனது விஷக் கடியை வீசி இரை விலங்கை ஸ்தம்பிக்கச் செய்கின்றன. அப்புறம் ஜாலியாக இரையைப் பிய்த்து அரைத்து உண்ணுகின்றன. இந்தப் பூரான்கள் எப்போதுமே சுத்த அசைவம்!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்