பசுமைப் புரட்சி நாயகன்



இந்தியப் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். இவரை எம்.எஸ்.சுவாமிநாதன் என்று சுருக்கமாக அழைப்பார்கள். இந்தியாவில் விவசாய உற்பத்தியை உயர்த்த எல்லாவித நவீன யுக்திகளையும் கையாண்டு வெற்றி கண்டவர்.

அதனாலேயே இவரை ‘இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை’ என்கிறார்கள். இவர் 1925ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் தனது 11வது வயதிலேயே தந்தையை இழந்தார்.

திருவாங்கூர் பல் கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (இப்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். இதன் பின்னர் டெல்லி வேளாண்மை ஆய்வு நிலையத்தில் ‘மரபுவழி பண்பியல்’ துறையில் உயர் சான்றிதழ் பெற்று இந்திய வேளாண்மை பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டார்.

பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘தி ஸ்கூல் ஆஃப் அக்ரிகல்ச்சுரல்’ பிரிவில் சேர்ந்து கற்றார். அங்கு ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர் 1949ம் ஆண்டு முதல் 1952ம் ஆண்டு வரையில் நெதர்லாந்தில் ‘ஐக்கிய நாட்டு கல்வி அறிவியல் கழகத்தில்’ ஆய்வியல் மாணவராகச் சேர்ந்தார்.

1952ம் ஆண்டு முதல் 1953 ஆண்டு வரை அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார். தாம் கற்ற வேளாண்மை கல்வி இந்தியாவிற்கு பயன்பட வேண்டும் என்று நாடு திரும்பினார். 1954ம் ஆண்டு அவர் கட்டாக் அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் ‘ஆராய்ச்சியாளராக’ சேர்ந்தார். தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறவில்லை என்பதை உணர்ந்த  சுவாமிநாதன், இந்திய-ஜப்பான் கலப்பின அரிசியை உருவாக்கினார்.

அவரது அயராத உழைப்பால் இந்தியா உணவு   உற்பத்தியில் படிப்படையாக  முன்னேறி  தன்னிறைவு பெற்றது. இவரின் பெயரில் அமைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு நிறு வனத்தின் (MS Swaminathan Research Foundation) அமைப்பாளரும் இவரே.

அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து தனது 20 வருட ஆராய்ச்சியில் தனது மாணவர்களோடு இணைந்து அரிசி, கோதுமை, சணல் ஆகியவற்றின் கலப்பினங்களைப் பற்றி மிகச் சிறப்பாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். பார்லி, எண்ணெய் வித்துக்கள், மக்காச் சோளம், கம்பு ஆகியவற்றில் பல புதிய இனங்களைக் கண்டுபிடித்து இந்திய விவசாயத்திற்கு வழங்கினார்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நார்மன் போர்லாக் கண்டு பிடித்த ‘மெக்ஸிகன் கோதுமை’யின் மூலம் ‘கோதுமை’ உற்பத்தியில் தன்னிறைவு பெற விரும்பினார்.

அவரை இந்தியாவிற்கு வரவழைத்து‘மெக்ஸிகன் கோதுமை’யை உற்பத்தி செய்ய ஆலோசனை பெற்று, கோதுமை சாகுபடியில் பெரும் வெற்றி பெற்றார் சுவாமிநாதன். இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். இவர் தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளைப் பெற்றுள்ளார்.

- சி.பரத்