கடவுளை படைக்கும் மனிதர்கள்



கடவுள் உருவங்களை உருவாக்கும் தொழில், நாடு முழுவதும் நலிந்துள்ளது. இந்தத் தொழிலில் இந்தியாவில் இரண்டு இடங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பற்றிய தொகுப்பே இது...

 மகாராஷ்டிர மாநிலத்தில் ரெய்காத் மாவட்டத்தில் ‘பென்’ என்ற நகர் உள்ளது. இந்த ஊரில் விநாயகர் உருவங்களை உருவாக்குவதும் உப்பு தயாரிப்பதும் முக்கிய தொழில்களாகும். சுமார் 33 ஆயிரம் பேர் வசிக்கும் ‘பென்’ நகரின் மக்கள்தொகையில் 82 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் விநாயகர் சிலைகள் தயாராகின்றன. இங்குள்ள 600 விநாயகர் சிலைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளில் 10 ஆயிரம் கலைஞர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தினசரி வருமானம் ரூ.200லிருந்து ரூ.2000 வரை.

விஷ்ணு அவதார கணபதி, மகாதேவோ கணபதி மற்றும் மயூரேச கணபதி ஆகியவை மக்களால் விரும்பி வாங்கப்படும் கணபதி சிலைகளாகும். மராத்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ‘ஜெய் மல்ஹார்’ என்ற தொடரின் மூலம் மேற்கு இந்தியா முழுவதும் மல்ஹார் கணபதி உருவங்கள் பிரபலமாகிவிட்டன.

இதனால் இதையும் இப்போது உருவாக்க ஆரம்பித்துவிட்டனர்.விநாயக சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன்பு இங்கு விநாயகர் சிலைகளை வாங்க மக்கள் குவிகிறார்கள். கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்தும், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

6 அடி உயர விநாயகர் சிலையின் விலை ரூ.5000. பென் நகரில் ஆண்டுக்கு ரூ.1500 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலைகள் விற்பனையாகின்றன. பென் நகர கலைஞர்கள் 1980களின் ஆரம்பத்தில் விநாயகர் சிலைகளை முறையாகத் தயாரிக்கப் பயிற்சி பெற ஆரம்பித்தார்கள். அதுவரை களிமண்ணாலேயே விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டன.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் உருவங்களை செய்ய ஆரம்பித்ததும் நிலைமை மாறிவிட்டது. இப்போது இங்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் 95 சதவீத சிலைகள் வடிக்கப்படுகின்றன.

5 சதவீத சிலைகளே களிமண்ணால் செய்யப்படுகின்றன. நான்கடி உயர களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை 80லிருந்து 100 கிலோ எடை இருக்கும். மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்வது கடினம்.

அதனால் களிமண் சிலைகளை வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.முதலில் களிமண்ணால் அச்சை உருவாக்குகின்றனர். கண்ணாடி இழை நாராலும் அச்சுகள் தயாரிக்கப்படுகின்றன. இதை உருவாக்கும் தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு ரூ.1500லிருந்து ரூ.2000 வரை ஊதியம் கிடைக்கின்றது.

பிறகு அச்சில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் குழம்பை ஊற்றி உருவங்களை வடிக்கிறார்கள். இதன் மூலம் கச்சா கணபதி உருவம் கிடைக்கின்றது. மும்பை மற்றும் பிற நகரங்களுக்கு கச்சா கணபதி சிலைகளை மொத்தமாக வாங்கிச் சென்று அங்கே வண்ணம் தீட்டுகிறார்கள்.

விநாயக சதுர்த்திக்கு இரண்டு மாதத்திற்குப் பிறகு விநாயகர் சிலை தயாரிக்கும் வேலை தொடங்கி தொடர்ந்து ஆண்டில் பத்து மாதங்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 12,000  15,000 சிலைகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு ரூ.20 லட்சம் வரை முதலீடு தேவைப்படுகிறது. பெரிய தயாரிப்பாளர்கள் ரூ.50 லட்சம் வரை வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள்.

இங்கு தயாரித்து ரூ.35 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 12 அடி உயர ஜெய் மல்ஹார் கணேசா உருவம், இங்கிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள மும்பையில் ரூ.1 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.குஜராத்திலிருந்து களிமண்ணும் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிளாஸ்டர் ஆஃப் பாரிஸும் இங்கு வருகின்றன.

கொல்கத்தாவில் குமார்டுளி என்ற பகுதியில் துர்க்கை மற்றும் மகிஷாசூரன் உருவங்களைச் செய்யும் தொழில் கடந்த   300 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குமார்டுளி என்பதற்கு ‘மண்பாண்டம்  செய்பவர்  கள் குடியிருப்பு’ என்று பொருள். இந்தத் தொழிலைச்  செய்பவர்கள் PAL  அல்லது   PAUL   என்ற  அடைமொழியால் அழைக்கப்படுகின்றனர். இங்கு கண்ணாடி நாரினால் (Fibre  Glass) உருவாக்கப்பட்ட துர்க்கை உருவங்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. களிமண்ணால் செய்யப்பட்ட உருவங்கள் வெளிநாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை.

துர்க்கை பூஜைக்காக செய்யப்படும் உருவங்களைத் தவிர சரஸ்வதி பூஜை, காளி பூஜை, விஸ்வகர்மா பூஜை ஆகியவற்றுக்கும் இங்கு சிலைகள் செய்யப்படுகின்றன.
ஹூப்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குமார்டுளி பகுதியில் 350 தொழிற்சாலைகளில் சிலைகளை உருவாக்கும் பணி நடைபெறுகிறது.  இவற்றில்    12ல் மட்டுமே கண்ணாடி          நார் உருவங்கள் உருவாக் கப்படுகின்றன. மற்ற இடங்களில், கங்கை நதியிலிருந்து கிடைக்கும் தரமான களிமண்ணிலிருந்து சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இங்கு ஆண்டுக்கு 20,000 சிலைகள் செய்யப்படுகின்றன.

களிமண்ணால் உருவாக் கப்பட்ட 12 அடி உயரமுள்ள துர்க்கை சிலைகள் ரூ. 1.2 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சம் வரை விற்கப்படுகின்றன. கண்ணாடி நார் இழை உருவங்கள் செய்வதன் மூலம்   20 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் கிடைக்கின்றது. 

‘பென்’ நகரத்தில் உபயோகிப்பது போல் இங்கு பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் உபயோகப் படுத்தப்படுவதில்லை.ஒரு வண்டி களிமண் விலை ரூ.100லிருந்து ரூ.300 ஆக விலை உயர்ந்ததாலும், கூலி உயர்ந்ததாலும், இத்தொழில் பென் நகரைப் போலவே இங்கும் சவாலையே சந்தித்து உயிர் பிழைத்து வருகிறது. கடவுள் படைத்த மனிதர்கள், கடவுளைப் படைத்து வாழ்வதுதான் இந்த இரண்டு நகர கலைஞர்களின் வாழ்வை சுவாரஸ்யமாக்கும் அம்சம்!

 க.ரவீந்திரன், ஈரோடு.