3D படம் கண்களை பாதிக்குமா?



நம் கண்ணருகே காட்சிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் முப்பரிமாணப் படங்கள் பலவும் குழந்தைகளைக் குறி வைத்தே உலகெங்கும் எடுக்கப்படுகின்றன. அதற்கான பிரத்யேகக் கண்ணாடியை அணிந்துகொண்டு, கத்திகளும் துப்பாக்கிகளும் மிக அருகே வருவதுபோன்ற உணர்வில் பரவசப்படும் குழந்தைகள் நிறைய!

ஆனால், ‘‘ஆறு வயதுக்கும் குறைவான குழந்தைகளை 3டி படங்களைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது’’ என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான ‘அன்செஸ்’ எச்சரித்துள்ளது. வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரி மாணப் படங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் ‘அன்செஸ்’ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஒரு 3டி படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாகப் புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் 3டி படங்களை நாம் கிரகித்துக் கொள்கிறோம்.

‘‘ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், 3டி படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஆகவே 13 வயது வரும் வரைக்கும் பிள்ளைகள் 3டி படங்களை குறைவாகவே பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்’’ என்கிறது ‘அன்செஸ்’. 

குழந்தைகளுக்கான படங்கள் அதிக அளவில் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவருகின்ற காலகட்டம் இது. வீடியோ கேம்கள், தொலைக்காட்சிகள், கணினித் திரைகள் என்று எல்லாவற்றிலும் 3டி திரை வந்துவிட்டது.

இந்நிலையில் இந்த எதிர்ப்பெல்லாம் சாத்தியமா என்றால், ‘‘3டி படங்கள் கண்களுக்கு ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு குறித்து குரல்கள் ஒலிப்பது இது முதல் முறையல்ல’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஏற்கனவே இத்தாலியில் குழந்தைகள் 3டி படங்களைப் பார்ப்பதற்குரிய கண்ணாடிகளை அணிவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. 

நிண்டெண்டோ என்ற வீடியோ கேம் நிறுவனம் 2010ல் ஒரு புதிய 3டி கருவியை அறிமுகப்படுத்தியபோது, ‘ஆறு வயதுக்கும் குறைவான பிள்ளைகள் இவற்றைப் பயன்படுத்தினால் அவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம்’ என எச்சரித்திருந்தது.

 அதேநேரம் முப்பரிமாணப் படங்களைப் பார்த்ததன் விளைவாக பார்வைத் திறன் கெட்டுப் போனதாக தங்களிடம் புகார்கள் வந்ததில்லை என்கிறது அமெரிக்க கண்திறன் சங்கம். ஆக, 3டி சமாச்சாரத்தில் நாலு பக்கமும் காரசாரமான விவாதத்துக்குப் பஞ்சமே இல்லை. சரி, நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்தான் என்ன?

ஜெ.ஆருஷ் அதர்வா