குற்றம் செய்யத் தூண்டும் மரபணு 2



ஷாக்கடிக்கும் ஆய்வு முடிவு

ஒரு மனிதன் வன்முறையில் ஈடுபடவும், வன்மத்தோடு பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கவும், கொலைவெறி கொண்ட தாதாவாக உருமாறவும் காரணம், அவனுடைய உடலில் இருக்கும் குறிப்பிட்ட இரண்டு மரபணுக்கள்தான் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  பின்லாந்து நாட்டில் நடைபெற்றது இந்த ஆய்வு. வன்முறை மிக்க குற்றங்களைச் செய்ததாகக் கண்டறியப்பட்ட 900 பேரின் மரபணுக்களை பலமுறை சோதித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

குற்ற ஊக்கி மரபணுக்களாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கும் அந்த இரண்டு மரபணுக்கள் ஒருவருக்கு இருக்குமாயின், அவர்கள் தமது வாழ்நாளில் திரும்பத் திரும்ப வன் முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் 13 மடங்கு அதிகமாக உள்ளது என்பது ஆய்வின் முடிவு.

‘அட! எதுப்பா அந்த பொல்லாத மரபணு’ என்கிறீர்களா?

MAOA என்ற மரபணுவும் CDH13 என்ற மரபணுவின் குறிப்பிட்ட ஒரு வகையுமே வன்முறையோடு தொடர்புடைய மரபணுக்களாம். MAOA மரபணுவானது நமது மூளையில் டோபமைன், செரடோனின் போன்ற அவசியமான வேதிப்பொருட்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. CDH13 மரபணு, போதை மருந்துக்கு அடிமையாக ஆகக்கூடியவர்களிடம் காணப்படுகின்ற ஒரு மரபணு என ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.

தற்போது அதன் ஒரு குறிப்பிட்ட வடிவம் வன்ம குணாம்சத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக அப்டேட் தகவலை அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. பின்லாந்தில் நடந்துள்ள வன்முறைமிக்க குற்றங்களில் குறைந்தது 4 முதல் 10 சதவீதம் வரையிலானவற்றை குறிப்பிட்ட இந்த மரபணுக்களை உடையவர்கள்தான் செய்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு ‘மாலிக்குலர் சைக்கியாட்ரி’ என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், ‘‘இந்த மரபணு ஒருவருக்கு இருப்பதை வைத்து அவர் குற்றம் செய்தவராக இருப்பார் என்றோ, ஒருவருக்கு இந்த மரபணு இல்லை என்பதை வைத்து அவர் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என்றோ கருத முடியாது’’ என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

‘‘இந்த இரண்டு மரபணுக்கள்தான் என்றில்லை, வன்முறைக்கும் வேறு பல மரபணுக்களுக்கு இடையிலும் கூட தொடர்பு இருக்கலாம். அதுபற்றி முழுமையான ஆய்வுகளை இனிதான் செய்ய வேண்டும்’’ என்பதே அவர்களின் மற்றொரு பார்வை. ஆக... குற்றங்களைத் தடுக்கவும் குறைக்கவும் மருத்துவ ரீதியான அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது அறிவியல்!

பா.ராஜேஷ்