திறக்கும்... ஆனா, திறக்காது!



கேன் கண்டுபிடித்து பல ஆண்டுகள் கழித்துத்தான் அதைத் திறக்கும் ஓபனர் கண்டு பிடிக்கப்பட்டதாமே?

- க.அகிலன், 9ம் வகுப்பு,
ஜவஹர் பள்ளி, நெய்வேலி.

ஒன்றல்ல, இரண்டல்ல... 70 ஆண்டுகளுக்குப் பிறகுதான் (1885) டின் கேன்களை எளிதாகத் திறப்பதற்கான ‘ஓபனர்’களைக் கண்டுபிடித்தனர். டின் உணவுகள் விரைந்து கெட்டுப் போகாது. அவற்றை எங்கும் கொண்டு செல்லலாம். பல மாதங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அப்போது டின்களைத் திறப்பது எளிதான விஷயமல்ல. சுத்தியல், உளியையெல்லாம் தேட வேண்டும். அட்மைரல் பெர்ரி என்பவர் ஒரு முறை கிண்டலாகச் சொன்னார்... ‘‘சுத்தியலையும் உளியையும் கையாளத் தெரியாதவர்கள், உணவைத் தங்கள் உடைகளுக்குத்தான் கொடுக்கிறார்கள் - வயிற்றுக்கு அல்ல!’’

இது உண்மைதான்... சரியாக டின்களை திறக்கக் கற்றுக் கொள்ளாதவர்கள் உள்ளே இருந்தவற்றை தங்கள் மேல் கொட்டிக் கொண்டார்கள். பலரும் அருகில் உள்ள மளிகைக் கடைகளில் தங்கள் டின்களைத் திறந்து கொடுக்கச் சொல்லி பயன்படுத்தினார்கள். ஓபனர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, கேன் உணவுகள் பிரபலமாகத் தொடங்கின. இப்போது உலகில் கோடிக்கணக்கான காய்கறி, பழங்கள், மீன், கறி மற்றும் பலவித உணவு கேன்களின் மூடிகளை கடித்துத் துப்பிக்கொண்டு இருக்கின்றன ஓபனர்கள்!

மலைகள் எப்படி உருவாகின்றன?

- ஆர்.ஜேம்ஸ், 8ம் வகுப்பு,
சிஎம்சி பள்ளி, தென்காசி.

மலைகளை உருவாக்குவதில் மழைக்கும் பங்கு உண்டு. ஏன்... நதி, பனிக்கட்டி, காற்று ஆகிய இயற்கை சக்திகளுக்கும் அதிக பங்கு உண்டு. இந்த நான்குக்கும் கொஞ்சம் கூட இரக்கமே கிடையாது.

மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், பீடபூமிகள் ஆகியவற்றைத் தேய்த்து, அரித்து, குறைத்து சிறிது சிறிதாக அழிக்க முயற்சிப்பதே இந்த இயற்கை அசுரர்களின் முக்கிய வேலை. இவை நிலத்தின் மீது தாக்குதல் நடத்தும்போது, பெரிய இயந்திரங்களைப் போலவே இயங்குகின்றன. நிலத்தை பல சிறிய துண்டுகளாக்குகின்றன.

 அல்லது வேதிக்குடுவையிலுள்ள அமிலத்தில் போடப்பட்ட ஒரு பொருள் கரைவதைப் போல, உருத் தெரியாமல் மாற்றி விடுகின்றன. இதன் விளைவாகக் கிடைக்கும் மணலும், கப்பிக் கல்லும், கூழாங்கல்லும், இன்ன பிற கரை பொருட்களும் மிக நீண்ட பயணத்தைத் தொடங்குகின்றன.

அவை செல்லும் பாதையில் புதிய கட்டிடம் உருவாக உதவுகின்றன. அல்லது கடலுக்குள் மூழ்கி விடுகின்றன.இப்படி கடல் தரையில் வீழ்படிவாகச் சேருபவை, பல லட்சம் ஆண்டுகளாக அழுத்தப்பட்டு, உருமாற்றப்பட்டு, மேலே தள்ளப்பட்டு மலைத்தொடர்கள் உருவாகின்றன. அழிவும் ஆக்கமும் நிறைந்த இந்தச் சங்கிலி மெகா சீரியல் போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது!