தூவானம்




எதிரொலி மாளிகை


இங்கிலாந்தில் ‘உட்ஸ் டாப்’ என்ற பெயரில் ஒரு மாளிகை இருக்கிறது. இந்தக் கட்டிடத்துக்குள் போய் நின்றுகொண்டு ஒருமுறை குரல் கொடுத்தால், அது உள்ளேயே 11 முறை எதிரொலிக்கும். வித்தியாசமான தொழில்நுட்பம் கொண்ட இந்த மாளிகை, எதிரொலி மாளிகை என்றே அழைக்கப்படுகிறது.

அறிக்கை வண்ணங்கள்

‘ப்ளூ புக்’ என்பது பிரிட்டிஷ் அரசின் அதிகாரபூர்வ அறிக்கையைத் தாங்கிய புத்தகத்துக்கான பெயர். அதேபோல, பாரசீக அரசு அறிக்கைக்குப் பச்சை, பெல்ஜியம் மற்றும் ஜப்பான் அரசுக்கு சாம்பல் நிறம், நெதர்லாந்துக்கு ஆரஞ்சு வண்ணம், ஜெர்மனி, போர்ச்சுகல் மற்றும் சீன அரசாங்கங்களுக்கு வெள்ளை.

இவையெல்லாம் அந்தந்த நாட்டு அறிக்கைகளுக்கு வெறும் பெயர்கள்தானே தவிர, அந்த அறிக்கைகளைத் தாங்கி வரும் தாள்களோ, கோப்பு களோ அந்தந்த வண்ணத்தில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

கொடியில் நட்சத்திரம்

வியட்நாம் நாட்டுக் கொடி முற்றிலும் சிவப்பு வண்ணத்தினாலானது. அதன் மத்தியில் மஞ்சள் நிறத்தில் ஒரே ஒரு நட்சத்திரம் இருக்கும்; அதேபோல சோமாலியா நாட்டுக் கொடி நீலவண்ணமயமானது; இதன் மையத்தில் வெள்ளை வண்ண நட்சத்திரம் ஒன்றைக் காணலாம். கூடுதல் தகவல்: நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஃபிஜி நாட்டுக் கொடிகளில் மேல் இடது மூலையில் இங்கிலாந்து நாட்டுக் கொடி அச்சிடப்பட்டிருக்கும்.

தமிழ்நாடு பிறந்தது

1968ம் ஆண்டு சென்னையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டில்தான் ஒரு புயல் வீசி, ஸ்டாமடிஸ் என்ற கப்பலை மெரினா கடற்கரைக்கு ஒதுக்கி, ஆயிரக்கணக்கான மக்களின் காட்சிப் பொருளாக மாறியது. இதே ஆண்டில்தான் சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது.

ஒளிவிடும் கடிகாரம்

இரவில் பார்த்தாலும் பளிச்சென்று தெரியக்கூடிய கடிகார எண்கள் ரேடியம் பூச்சு கொண்டவை. ஆனால் மிகச் சிறு அளவிலான ரேடியத்துடன் சல் ஃபேட்டும் கலக்கப்பட்டுதான் எண்கள் மீது பூசப்படுகிறது. ஏனென்றால் ஒரு குண்டூசி முனை அளவு ரேடியத்தைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான கடிகார எண்கள் ஒளிருமாறு செய்ய முடியும். ரேடியம் காஸ்ட்லியும்கூட. ஒரு கிலோ ரேடியம், ஆயிரம் கிலோ தங்கத்தின் மதிப்புக்குச் சமம்!

கரித்து இனிக்கும்

ஜெய்ப்பூரில் ஒரு ஏரி இருக்கிறது. இரு தன்மைகள் கொண்ட நீர் நிரம்பிய, 128 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பிரமாண்ட ஏரி இது. அக்டோபர் முதல் மே மாதம் முடிய இந்த ஏரி நீர் உப்புக் கரிக்கும். இந்த காலகட்டத்தில் இதிலிருந்து இரண்டரை லட்சம் டன் உப்பு தயாரிக்கப்படுகிறது. இதே ஏரி, ஜூன் முதல் செப்டம்பர் வரை இனிப்பான நீரைக் கொண்டிருக்கும்! காரணம்? இந்தக் காலகட்டத்தில் மழை நீர் சேர்வதுதான்!

குறள் பழம்

திருக்குறள் பழம்பெரும் தமிழ் இலக்கியமாக இருந்தாலும், இதிலுள்ள 1330 குறள்களில் ஒரே ஒரு பழம்தான் இடம் பெற்றிருக்கிறது. அதுவும் இப்போது வெகு அரிதாகவே கிடைக்கும் பழம் - நெருஞ்சிப் பழம்.

-வித்யுத்