நோயை வென்ற தாய்!





கேன்சர்... உயிர்க்கொல்லி நோயாகத்தான் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று..? நம் யுவராஜ் சிங் கூட, ‘நான் நல்லாயிட்டேன்’ என்று கூலாகக் கையாட்டி சிரிக்கிறார் என்றால், அதற்குக் காரணம், மேரி க்யூரி.

ஆம், இன்றைய கேன்சர் சிகிச்சைக்கெல்லாம் மேரி க்யூரியின் அந்தக் கால ஆராய்ச்சிகள்தான் ஆதாரம். 1867ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி போலந்து நாட்டில் பிறந்தார் மேரி. பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். போலந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், தங்கள் சொத்துகளை இழந்தது மேரியின் குடும்பம். அதனால், கல்வியைத் தொடர முடியாமல் பணக்கார உறவினர் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார் மேரி. அந்த வீட்டு முதலாளியின் மகனும் மேரியும் காதல் கொண்டனர். இதனால் அந்தக் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மேரி, அதன் பின் பாரீஸ் சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

அங்கேதான் விஞ்ஞானி பியரி க்யூரியை சந்தித்தார் மேரி. இருவருமே காதலில் தோல்வியுற்றவர்கள்... விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்... என்பதால் காதல் அரும்பி, கல்யாணத்தில் முடிந்தது. யுரேனியத்தின் கதிரியக்கம் பற்றி இருவரும் 14 வருடம் ஆராய்ச்சி செய்தார்கள். யுரேனியத்தில் இருந்து ‘ரேடியம்’ என்ற பொருளைப் பிரித்தெடுத்து உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார் மேரி. யுரேனியத்தைவிட ஆயிரம் மடங்கு அதிக கதிரியக்கத்தை வெளியிடக் கூடியது ரேடியம். மனித உடலில் ஏற்படும் கேன்சர் கட்டி போன்றவற்றை இந்த ரேடியத்தைப் பயன்படுத்தி நீக்க முடியும் என்று நிரூபித்தது மேரி - க்யூரி தம்பதி. இதற்கு, ‘க்யூரி தெரபி’ என்று பெயரிடப்பட்டது.

இதன் பலனாக கணவன் மனைவி இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது. ஆனால், டன் கணக்கான பாறைகளிலிருந்து சொற்ப அளவு ரேடியத்தைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. கதிரியக்க சாம்பிள்களைக் கையாண்டதால் க்யூரி தம்பதியின் விரல் நுனியெல்லாம் கருத்து இறுகிப் போனது. கணவர் பியரிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து பார்வைத் திறன் குறைந்தது. அதனால், ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் அவர் பலியானார். அதற்குப் பிறகும் கணவரின் நினைவாக ஆராய்ச்சிகளைத் தொடர்ந்த மேரிக்கு மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்று வரை நோபல் பரிசை இருமுறை பெற்ற ஒரே பெண், மேரி மட்டுமே. தொடர்ந்த கதிரியக்க ஆராய்ச்சிகளால் மேரியின் உடல்நிலையிலும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. கடைசியாக, 1934ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி, கதிரியக்கத்தால் ஏற்படும் ‘அப்லாஸ்டிக் அனீமியா’ நோய்க்கு அவர் பலியானார். இன்று அவரால் பலியாகிக் கொண்டிருக்கின்றன பல நோய்கள்!
- சி.பரத்