மந்தாசனம் : மியூசியம் விசிட்





கர்நாடகாவின் தென் கனரா பகுதி யில் ஒரு காலத்தில் செல்வாக்கு செலுத்தியவர்கள் மத்வ ஆச்சாரி யர் என்ற வைஷ்ணவ மதப் பிரிவினர். மத்வர் என்ற வைஷ்ணவ மத சீர்திருத்தவாதியைப் பின்பற்றியவர்கள்தான் இந்தப் பிரிவினர். அந்தக் காலகட்டத்தில் இந்தப் பிரிவு சாதாரண மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தது. கோயில் என்றில்லாமல் இந்த பிரிவினர் மத்வரின் வழிபாட்டு நடைமுறைகளை அன்றாட வாழ்க்கையிலும் பின்பற்றினார்கள். ‘கோயிலில் குடியிருக்கும் இறைவன் வீட்டுக்கே வந்து நம்மை ஆட்கொண்டால் நமது பிரச்னைகள் தீரும்’ என்ற நம்பிக்கையில், கோயில் போன்ற வடிவமைப்புடைய சிறு அமைப்பு களை உலோகத்தில் படைத்து, அதில் நுட்பமான வேலைப்பாடுகளுடன் தெய்வ உருவங்களை செதுக்கி, வீட்டிலேயே வைத்து வழிபடத் தொடங்கினார்கள் இந்த பக்தகோடிகள்.

இன்றும் அந்தப் பகுதியில் வாழும் இந்தப் பிரிவினர் இதுபோன்ற வடிவங்களை மரத்தால் செய்து வீடுகள்தோறும் வழிபடுகிறார்கள். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அந்தப் பகுதிகளில் கிடைத்த பித்தளை மந்தாசன மாதிரி வடிவத்தை கடந்த வாரம் பார்வைக்கு வைத்து, அந்தக்கால பக்தி நிலையை பரவச் செய்துவிட்டார்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தினர். மந்தாசனம் குறித்து மேலும் தகவல்களைக் கூறுகிறார் அருங்காட்சியகத்தின் புவியியல் மற்றும் மனிதவியல் காப்பாட்சியர் துளசி பிருந்தா...

‘‘இந்த மந்தாசனங்கள் எண்கோண வடிவில் இருக்கும். ஒரு கோயிலின் கருவறையோடு அதன் அர்த்த மண்டபமும் இதில் இருக்கும். மாதிரியின் மேல் பகுதியில் கருடாழ்வார், கிளிகள் மற்றும் தாமரை மொட்டுகள் அழகிய சிற்பங்களாகக் காணப்படும். எண் கோணத்தின் எட்டு பக்கங்களிலும் விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரம் புடைப்புச் சிற்பமாக உருவாக்கப்பட்டிருக்கும். விஷ்ணுவிற்கு பத்து அவதாரம். ஆனால் இங்கு எட்டு அவதாரங்கள்தான் இருக்கும். காரணம், அவரின் முதல் இரண்டு அவதாரங்களான மத்சய மற்றும் கூர்ம அவதாரங்களுக்கு தனித்தனியான கோயில்கள் இல்லை. மற்றவற்றுக்கு தனித்தனி கோயில்கள் உண்டு. இதனால் இதில் எட்டு அவதாரங்களை மட்டுமே உருவாக்கி வணங்குகிறார்கள். எண்கோணத்தில் ஒரு கோணத்தில் மட்டிலும் கதவு உண்டு. இதை திறந்தால் உள்ளே சிறு சாமி சிலை வைப்பதற்கு இடம் இருக்கும். மந்தாசனங்களில் சாமி சிலைகளை வைப்பதற்கு முன்பு அபிஷேகங்கள் செய்யவேண்டும். ‘இறைவன் கோயிலில் மட்டுமே குடிகொள்பவன் அல்ல, நம் வீடுகளிலும் கோயில்கொள்பவன்’ என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்த மந்தாசன வழிபாடு.
- டி.ரஞ்சித் படங்கள்: ஆர்சிஎஸ்