அதிவேக லிஃப்ட்!





உலகிலேயே மிக விரைவாகச் செல்லக்கூடிய எலிவேட்டரை ஜப்பானின் மிட்ஸுபிஷி நிறுவனம் உருவாக்குகிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் ‘ஷாங்காய் டவர்’ என்ற வானுயர்ந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வரும் 2014ம் ஆண்டு இது கட்டி முடிக்கப்படும். 632 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்த ஷாங்காய் டவர், உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை விட சற்றே உயரம் குறைவானது. 128 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் ஸ்பெஷல் அயிட்டமாக இந்த எலிவேட்டர் வருகிறது.

ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது இந்த எலிவேட்டர். தரைத் தளத்தில் ஏறும் ஒருவர், 128வது மாடியை வெறும் 37 நொடிகளில் சென்றடைய முடியும். இப்போது புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருக்கும் எலிவேட்டரைவிட இது இரண்டு மடங்கு வேகம். இவ்வளவு வேகமாகச் சென்றாலும், உள்ளே பயணிப்பவர்கள் சிறு அதிர்வையோ, காது அடைத்துக் கொள்ளும் அவஸ்தையையோ உணர முடியாது. இப்படி வேகமாகப் பயணிக்கும்போது, அந்த இயக்கத்தில் கொஞ்சம் மின்சாரத்தையும் இது உற்பத்தி செய்யுமாம்.

மீண்டும் கடலுக்கு...


கடல் ஆமைகள் நோய்வாய்ப்பட்டு கரை ஒதுங்கினால், அவற்றுக்கு சிகிச்சை கொடுத்து உடம்பைத் தேற்றி மீண்டும் கடலில் விடுவதை ஒரு சேவையாகவே உலகெங்கும் பலர் செய்கிறார்கள். நம் சென்னையில்கூட இதற்கு அமைப்பு இருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இப்படி நோய்த்தொற்று காரணமாக உடல் மெலிந்து கரை ஒதுங்கிய இரண்டு ஆமைகள், சிகிச்சை முடிந்து மீண்டும் கடலுக்குப் பயணிக்கும் காட்சி இது!


பைக் நேசர்களின் பயணத்துணை!

தங்கள் மோட்டார் சைக்கிளை உயிருக்கு உயிராக நேசிப்பவர்கள் ஏராளம் பேர் உண்டு. எவ்வளவு நேசித்தாலும், மரணத்துக்குப் பிறகான இறுதிப் பயணம் பைக்கில் அமையாது. அமரர் ஊர்தியில்தான் போயாக வேண்டும். இப்படிப்பட்ட பாசக்கார நண்பர்களுக்காக ஒரு வாகனத்தை உருவாக்கி இருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஜோர்க் கிராஸ்மேன். பைக்கோடு இணைக்கப்பட்ட இந்த அமரர் ஊர்தியில், பைக் காதலர்கள் தங்கள் இறுதிப்பயணத்தைச் செய்யலாம். கல்லறை நோக்கிய பயணத்துக்கு இப்போதே ஏராளம் ஆர்டர்கள் குவிகின்றன.
- லோகேஷ்