தூவானம் முதல் ரயில்!





இந்தியாவின் முதல் ரயில் பம்பாயிலிருந்து தானேவுக்கு பயணம் செய்தது. இந்த 30 மைல் தூரப் பயணம் நிகழ்ந்த தேதி 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என 14 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலை மூன்று எஞ்சின்கள் இழுத்துச் சென்றன. மொத்தம் 500 பேர் பயணித்தார்கள். பெரும்பாலும் பிரிட்டிஷ் அதிகாரிகளே பயணித்ததால், பம்பாய் தொழிலதிபர்களாக இருந்த சில இந்தியர்கள்தான் இந்த ரயிலில் பயணிக்க முடிந்தது. வழிநெடுகிலும் ஆயிரக் கணக்கானவர்கள் இந்த ரயில் பயணத்தை அதிசயமாகப் பார்த்தார்கள்.

வித்தியாசம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல முரண்பாடுகள் உள்ளன. அரசியல்ரீதியாக எல்லை வரையறையில் ஏற்பட்டுள்ள முரண்படுதல் முக்கியமானது. ‘எல்லாம் காலம்தான்; கொஞ்ச காலத்தில் சரியாகிவிடும்’ என்று தத்துவார்த்தமாக சமாதானமும் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்தியா- பாகிஸ்தான் இடையே கால வித்தியாசம், அரை மணி நேரமாகும்!

அட, ஆம்பிளையே!
பொதுவாகவே பிடரியுடன் சிலிர்த்து நிற்கும் ஆண் சிங்கத்தின் கம்பீரத்தை நாம் வியக்கிறோம். ஆனால் இனப்பெருக்கத்திற்கு இந்த ஆண் சிங்கம் காட்டும் ஆர்வத்தை, இரை தேடுவதில் பெரும்பாலும் காட்டுவதேயில்லை. ஆமாம்... 90 சதவீதம் பெண் சிங்கம்தான் இரை தேடிக் கொண்டு வந்து குடும்பத்துக்குப் படியளக்கிறது.

மகா பெரிய பள்ளி
உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது, ஸிடி மான்டிசோரி பள்ளி. நம் நாட்டில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ளது இந்தக் கல்வி நிலையம்.

ஒரு கவிஞர், இரு நாடுகள்
இரு நாடுகளுக்கான தேசிய கீதங்களை இயற்றியவர் என்ற பெருமை பெற்ற ஒரே கவிஞர், ரவீந்திரநாத் தாகூர். அந்த இரு நாடுகளில் ஒன்று இந்தியா என்பது தெரியும். இன்னொன்று? வங்க தேசம்.

பற பற செய்திகள்
தன் இறக்கைகளை மடக்கிக்கொள்ள இயலாத பூச்சி, தட்டாம் பூச்சி. கடல் புறாக்கள் கடலில் மிதந்துகொண்டே தூங்க வல்லவை. ஊங்காரக் குருவி முன்னும் பின்னும் பறக்கும் தன்மை கொண்டது. நீரிலும், நிலத்திலும் வாழும் பறவை, பெங்குயின்.

காலைப் பறவைகள்
யூகோஸ்லாவியாவில் வேலைக்குப் போகும் பணியாளர்களை காலைப் பறவைகள் என்று பாராட்டும் வகையில் குறிப்பிடுகிறார்கள். காரணம், அவர்கள் அனைவரும் காலை ஏழு மணிக்கெல்லாம் தத்தமது அலுவலகத்துக்குப் போய் வேலை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
- வித்யுத்