கழுகு இனத்திலும் பெண் உஷார்தான்!





பூமியில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் காதல் பொதுவானது. சிறிய விலங்குகளையும், பறவைகளையும் தாக்கி உட்கொள்ளும் இரைக்கொல்லிப் பறவைகளாகட்டும், பரிதாபமாக இரையாகிப் போகும் எளிய பறவைகளாகட்டும்... எல்லாவற்றிற்குமே காதலும் கலவியும் இன்றியமையாத ஒன்று. இத்தகைய சிற்றின்ப சுகத்தை எந்த வொரு ஜீவராசி புறக்கணித்திருந்தா லும், அவ்வினத்தின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு நீடித்து வாழ்தலுக்கான வாய்ப்புகள் அழிந்து போயிருக்கும். காதல் வாழ்க!

இந்த ஹார்மோன் மாயா ஜாலங்கள், பிணந்தின்னும் கழுகுகளையும் வல்லூறு களையும் கூட மயங்க வைத்து விடுகின்றன. நம் ஊரில் சங்கீத உற்சவம் துவங்கும் குளிர் மார்கழியில் எக்கச்சக்கமான மேலைநாட்டுக் கழுகினப் பறவைகள், இந்தியா மட்டுமின்றி நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுக்கும் குளிர்கால வலசை வருவதுண்டு. இப்படி இப்பறவைகள் ஆண்டுதோறும் தலைமுறை தலைமுறையாய் ஒரே குறிப்பிட்ட இடத்திற்கு வந்து இனப்பெருக்கம் செய்து, வாரிசுகளுடன் பூர்வீகம் போவது வாடிக்கை. தேனிலவு!

பொதுவாக நம் உள்நாட்டுக் கழுகுகளும் வல்லூறுகளும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. எனினும் உலகெங்கிலும் வாழும் கழுகுகளின் இனப்பெருக்க சீசன், புவியியல் அமைப்பில் அவை வாழும் உயரத்திற்கேற்ப மாறுபடுகிறது. மேலும் அங்கே நிலவும் சீதோஷ்ண மாற்றங்களும் கூட இந்த இனப்பெருக்க சீசனை தீர்மானிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஜனவரி மாதத்திலும், ஈக்குவடார் நாட்டில் பிப்ரவரி மாதத்திலும், அமெரிக்காவின் ஓஹியோவில் மார்ச் மாதத்திலும், அர்ஜென்டினாவில் செப்டம்பர் மாதத்திலும் கழுகுகள் இனப்பெருக்கம் செய்கின்றன. கழுகுகள் இப்படியாக தம் இனப்பெருக்க காலத்தை மாற்றியமைத்து, குஞ்சு பொரிக்கும் தருணத்தில் மோசமான சீதோஷ்ணமோ, இரைப் பஞ்சமோ இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. புத்திர பாசம்!

இனவிருத்திக் காலம் துவங்கிவிட்டால், ஆண் கழுகுகளுக்கும், வல்லூறுகளுக்கும் அபரிமிதமாய் சிருங்கார ஆசை பிறந்துவிடும். இணைபிரியா ஜோடிகள் பழைய இணையுடனும், இணை துறந்த ஆண் பறவைகள் இதே மாதிரி இணையின்றித் திரியும் வேறு பெண் இணையுடனும் சேர்ந்துவிட முயற்சி செய்யும். இளம் பேச்சுலர் பறவைகளுக்கிடையே இணையை உஷார் செய்வதில் உலகமகா போட்டி இருக்கும். இத்தகைய ஆண் பறவைகள் தம் உடல் வாளிப்பையும் ‘ஏரோபாட்’ பறத்தல் வித்தைகளையும் பெண் பறவைகளுக் குக் காட்டி, தானே வல்லவன் என்று சாதிக்கப் பார்க்கும். ஆனால், பெட்டைகள் அவ்வளவு எளிதில் ஏமாந்து விடுவதில்லை. தீர யோசித்து தீர்மானித்துத்தான் ஆண் இணையைத் தெரிவு செய்கின்றன. உஷார் பஜார்!

இத்தகைய காதல் யுத்தம் இளைய பறவைகளில்தான் வெகு சுவாரஸ்யமாய் இருக்கும். மர உச்சியில் அமர்ந்திருக்கும் காதலியை அசத்த, ஆண் கழுகுகள் நேர் செங்குத்தாய் மேலேயும் கீழேயும் இறக்கைகளை அதிகம் விரிக்காமல் பறந்து காட்டும். சட்சட்டென்று ஆகாய வெளியில் குதிரை லாட வடிவில் வேகப் பாய்ச்சலோடு பெட்டையை நெருங்கி நெருங்கி வரும். சில திறந்தவெளிக் கழுகுகள் தரையிலேயே தம் காதலியை ஈர்க்க முயற்சி செய்யும். அதாவது ஒரு பெண் பறவையை ஓரம் கட்டி, அதைச் சுற்றி மாவீரன் போல் தம் இறக்கைகளை சற்றே அகட்டி வைத்துக்கொண்டு வட்டமடிக்கும். இடையிடையே குறைந்த ஆகாய உயரத்தில் தனக்குத் தெரிந்த பறத் தல் சாகசங்களைச் செய்து காட்டும். பிறகு ஒரு கட்டத்தில் ஆண் பறவைகளுக்கு இடையே சம்யுக்த சண்டை துவங்கிவிடும். அப்புறம் ஒன்றையொன்று துரத்திக் கொண்டும், டைவ் அடித்துக் கொண்டும் ஒற்றை ஆண் பறவை மிஞ்சும் வரை சண்டை யிடும். இப்படி வெற்றிபெற்ற வீர தீர ஆண் கழுகை, பெண் கழுகு சொற்பமான வெட்கத்துடன் கணவனாக ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு ஆண் கழுகுகள் இளைய பெண் கழுகின் முன்பு ஏகப்பட்ட சங்கதிகளையும், சாதுர்யங்களையும் காட்டத்தான் வேண்டியுள்ளது. காதலில் அசத்துவது எப்படி?

பழைய ஜோடியோ அல்லது புதிய இணையோ எதுவானாலும், இனவிருத்தி சீசனில் இணைந்துவிட்டால் இரை, தூக்கம் மறந்து விடும். பெயரளவிற்கு வெட்கப்படும் பெண் கழுகை, ஆண் கழுகுகள் முடிந்த அளவிற்கு சில்மிஷம் செய்யத் துவங்கும். இச்சமயத்தில் ஆண் கழுகுகளுக்கு அபூர்வ சக்தி பிறந்துவிடும். இவை ஜோடியாக உச்சஸ்தாயியில் சப்தமிட்டவாறு ஒன்றையொன்று விரட்டிக் கொண்டும், ஒன்றின் மீது ஒன்று விழுந்தடித்துக் கொண்டும் ஆகாய சேட்டைகள் புரியும். வல்லூறுகள் அம்பு போல் மேலெழுந்து சட்டென்று கீழிறங்கிக் காதலியை ஸ்பரிசிக்கும். ராஜாளிகள் மலையுச்சிக்கு ஒன்றையொன்று மூச்சிரைக்கும் வரை துரத்திச் சென்று, ஆகாயத்தில் வட்டமடித்து விளையாடும். ஒருவழியாக இந்த சில்மிஷங்கள் முடிந்த பின்புதான் சாந்தி முகூர்த்தம்!
- கழுகுகள் பார்க்கும்