இந்தியாவின் குளோனிங் ஆடு!

மென்மையான காஷ்மீர் கம்பளங்கள் உலகப்புகழ் பெற்றவை. இவை மென்மையாக இருப்பதற்குக் காரணம், பாஷ்மினா ஆடுகள். இமயமலையை ஒட்டிய பனி படர்ந்த பகுதிகளில் பிரத்யேகமாக வசிக்கும் இந்த ஆடுகள், அந்தக் குளிரைத் தாங்குவதற்கு ஏதுவான மென்மையான அடர் ரோமங்கள் அமையப் பெற்றவை. அவற்றிலிருந்து தான் புகழ்பெற்ற காஷ்மீர் சால்வைகளும் கம்பளங்களும் உருவாகின்றன. குறைந்துவரும் இந்த இனத்தை அபரிமித ஆற்றலோடு உருவாக்குவதற்கான முயற்சி, காஷ்மீரின் ஷெர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழக விலங்கியல் துறையில் நடக்கிறது. அவர்கள் குளோனிங் முறையில் பாஷ்மினா ஆட்டை உருவாக்கி சாதித்துள்ளனர். ‘நூரி’ என இந்த ஆட்டுக்குட்டிக்கு பெயர் வைத்துள்ளார்கள். கடந்த 2009ம் ஆண்டு ‘கரிமா’ என்ற எருமைக் கன்றுக்குட்டியை ஹரியானாவில் குளோனிங் முறையில் உருவாக்கினார்கள். அதன்பின் இந்தியாவின் இரண்டாவது குளோனிங் வெற்றி இது!