கல்லீரலை என்ன செய்யப் போகிறீர்கள்?மது... மயக்கம் என்ன?

மது ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை நாம் ஒவ்வொருவரும் ஓரளவு அறிந்திருக்கிறோம். எனினும், மருத்துவ ரீதியாக அது ஏற்படுத்தும் சிக்கல்களைச் சொல்லி ஒரு கல்லீரல் மருத்துவர் அளவுக்கு வேறு எவராலும் பயமுறுத்தி விட முடியாது!சமீபத்தில் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சண்முகம் நடத்திய கல்லீரல் கண்காட்சியில், அவரது உரையாடல் வரிகள் ஒவ்வொரு மது அருந்துநருக்கும் வாழ்க்கைப் பாடம்!

கல்லீரல் பற்றி முழுமையாக அறிவது அனைவருக்கும் - குறிப்பாக மது அருந்துகிற ஒவ்வொருவருக்கும் அவசியம் என்கிற டாக்டர் சண்முகம் பகிர்ந்துகொண்ட
மருத்துவ விஞ்ஞானத் தகவல்களிலிருந்து...

*மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. 1 முதல் 1.5 கிலோ எடை கொண்ட கல்லீரலே, நம் உடலில் மிகப்பெரிய உறுப்பு. வயிற்றின் மேல் பகுதியில் வலது புறத்தில் விலா எலும்புக் கூட்டுக்குள் இது பாதுகாப்பாக அமைந்திருக்கிறது. அதிக ரத்த ஓட்டம் கொண்ட உறுப்பும் கூட. உடலில் உறிஞ்சப்படும் அனைத்து சத்துகளும் கல்லீரலையே சென்றடையும். மிக மிருதுவாகவும் வழவழப்பாகவும் இருக்கும் மென்மையான இந்த உறுப்பை நாம் என்ன பாடு படுத்துகிறோம், தெரியுமா?

*கல்லீரல் என்னவெல்லாம் செய்கிறது? குறிப்பாக... ஜீரணத்துக்கு உதவுகிறது. நோய்த்தொற்றுகளை (கிருமிகள்) எதிர்த்துப் போரிடுகிறது. நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்துகிறது. ஆற்றலை சேமிக்கிறது. புரதச்சத்தினை (புரோட்டீன்) உருவாக்குகிறது.

 ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. உணவிலுள்ள சத்துகளைப் பிரித்தெடுத்து எல்லா வகையான திசுக்களுக்கும் அனுப்புகிறது. மது விஷத்தையும், நச்சுத்தன்மை கொண்ட மற்றப் பொருட்களையும் நமது உடலில் இருந்து நீக்குகிறது. இவை மட்டுமே அல்ல... மருத்துவ விஞ்ஞானிகள் நமது கல்லீரல் 500 வெவ்வேறு பணிகளைச் செவ்வனே செய்வதாகக் கண்டறிந்துள்ளனர்!

*கல்லீரலுக்கு இன்னும் மிக முக்கிய வேலைகளும் உண்டு. முக்கிய திரவங்களின் உற்பத்தியை இதுவே மேற்கொள்கிறது. பித்த நீர், ஆல்பமின் போன்றவையும் இதில் அடங்கும். இந்த பித்தநீரே கொழுப்புச்சத்தை ஜீரணிக்கும். ரத்தக்கசிவை நிறுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யும். சர்க்கரைச் சத்தினை (குளுக்கோஸ்) சேகரித்து வேண்டும்போது வெளியிடும். வைட்டமின் A, D, B12, K போன்றவற்றைச் சேமித்து வைக்கும்.

*கல்லீரலின் முக்கிய நோய்கள்...- வைரஸ் கிருமிகளால் ஏற்படுபவை - ஹெபடைடிஸ் A, B & C. இவற்றில் B மற்றும் C வைரஸ்கள் மிகக்
கடுமையானவை.

- அளவுக்கு மீறிய மதுவினால் வருபவை (எது அளவு மீறல் என்பது நம்மவர்களுக்கு கடைசி வரை தெரியாதது பெருஞ்சோகம்).
- அதிகக் கொழுப்பினால் வரும் நோய்கள் (மதுவின் போது எடுத்துக்கொள்ளும் உணவுகளாலும் அதிக கொழுப்பு உண்டாகிறது).
- ஒவ்வாத மருந்துகளால் உண்டாகும் நோய்கள்.
- பிறப்பிலேயே உண்டாகும் சில நோய்கள்.

* கல்லீரல் A வைரஸ் (Hepatitis A) 

இது தண்ணீர், உணவு மூலம் பரவக்கூடியது திடீரென ஒரே வாழிடப்பகுதியில் பல பேரைப் பாதிக்கும் (Epidemic).- காய்ச்சல், உடல் வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, அரிப்பு, சோர்வு மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை இதன் அறிகுறிகள்.- இந்த வைரஸ் நோய்க்கு தடுப்பூசி உண்டு. நோயைத் தடுக்கலாம். பெரும்பாலானோருக்கு வந்ததும் தெரியாமல் சென்றதும் தெரியாமல் தானாகவே சரியாகி விடும்! ஓய்வு, உணவுக்கட்டுப்பாடு போதுமானது. - இந்த வைரஸ் தாக்கியவர்களில் 1 சதவிகிதத்தினருக்கு மட்டும், இந்நோய் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

* கல்லீரல் B வைரஸ் (Hepatitis B)

- உலகில் 4 கோடி மக்களுக்கு இந்நோய் உள்ளது. இந்தியாவில் 40 லட்சம் பேருக்கு இருக்கிறது. இது கல்லீரலுக்குள் மிக வேகமாகப் பெருகும். வீக்கம் அல்லது அழற்சியை ஏற்படுத்தும். இதன் காரணமாக கல்லீரல் செல்கள் மெல்ல மெல்ல மரணம் அடையும். கல்லீரலில் வடு
ஏற்படும். கடைசியாக, கல்லீரல் சிரோசிஸ் அல்லது கல்லீரல் கேன்சர் ஏற்படும்.

இவை அனைத்தும் தொற்று ஏற்பட்டு, 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் நிகழும். அடுத்து உயிரிப்புதான்.- காது குத்துதல், டாட்டூ போடுதல், பழைய அக்குபங்சர் ஊசிகளை மீண்டும் பயன்படுத்துதல், பாதுகாப்பற்ற உடலுறவு போன்றவை மூலம் இந்த வைரஸ் எளிதில் பரவும். ஒருவரின் டூத் பிரஷ், ஷேவிங் பிளேடு, நெயில் கட்டர் போன்ற கூர்மை உபகரணங்கள் போன்றவற்றை இன்னொருவர் பயன்படுத்துவதும் இந்த வைரஸுக்கு வழி விடும். டயாலிசிஸ் எந்திரம், பல் சிகிச்சை எந்திரம் ஆகியவற்றினாலும் இது பரவும் அபாயம் உள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு வரக்கூடும். உமிழ்நீர், விந்து
மூலமும் பரவக்கூடும்.

- காது மற்றும் மூக்கு குத்துதல், டாட்டூ போடுதல் போன்றவற்றுக்கு ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட ஊசிகளையோ, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ஊசிகளையோ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ரத்தம் பெற வேண்டியிருப்பின் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.     - இந்த வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை (3 முறை) போட்டுக்கொள்வது பாதுகாப்பு அளிக்கும். முதல் தடுப்பூசியை முதல் நாளிலும், இரண்டாவதை 30வது நாளிலும், கடைசி ஊசியை 6வது மாத முடிவிலும் போட்டுக்கொள்ள வேண்டும்.

இப்போது இந்நோய்க்கு நல்ல மருந்துகள் வந்துவிட்டன. மருத்துவரின் ஆலோசனையுடன் தகுந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின், உடலில் இந்த வைரஸ் குறைகிறதா என முறையான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

* கல்லீரல் C வைரஸ் (Hepatitis C)

- இந்நோய் கொண்டிருப்போரில் 5ல் ஒருவருக்கு தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியாது. தற்செயலாகச் சோதித்துப் பார்த்தால் மட்டுமே அறிய முடியும். - இந்த வைரஸ் உலகில் 1 கோடியே 70 லட்சம் மக்களைத் தாக்கியுள்ளது.

HIV எனும் பாலியல் நோயுடனே அதிகமாகக் காணப்படும் இந்த வைரஸ், ரத்தம் மூலம் பரவக்கூடியது. கர்ப்பிணிக்கு இருந்தால் குழந்தைக்கு நிச்சயம் வரும்.- தடுப்பூசி இதுவரை கண்டறியப்பட வில்லை. ஆகவே, தடுக்கவும் இயலாது. பரவும் முறை அறிந்தே காத்துக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை சோதித்துக்கொள்ள வேண்டும்.

- இந்நோயிலிருந்து தப்ப என்ன செய்யலாம்? பச்சை குத்திக்கொள்ளக் கூடாது. புதிய அக்குபங்சர் ஊசிகளையே பயன்படுத்த வேண்டும். ஊசிகள், டூத் பிரஷ், ஷேவிங் பிளேடு, நெயில் கட்டர் போன்ற பெர்சனல் ஆன பொருட்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. போதை மருந்துகள் பயன்படுத்தக்கூடாது. பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்க்க வேண்டும். ரத்த வங்கிகளில் ரத்தம் முறையாகச் சோதிக்கப்பட்டு, கிருமிகள் அறியப்பட்டிருக்க வேண்டும். டயாலிசிஸ் செய்து
கொள்ளும் சிறுநீரக நோயாளிகள், அதற்கு முன் ஹெபடைடிஸ் B வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

- இந்நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இப்போது நல்ல மருந்துகள் கிடைக்கின்றன. 24 முதல் 48 மாதங்கள் வரை சிகிச்சை தேவைப்படும். - ஹெபடைடிஸ் B மற்றும் C வைரஸ்கள் கல்லீரலுக்குள் சென்று பல மடங்காகி திசுக்களை அழிக்கும்.

இதனால் கல்லீரலில் அழற்சி (Inflammation) ஏற்படும். இடையிடையே நார்த்திசு வளரும். இது அதிகமாகி கல்லீரல் இறுகும். அதிகமாகக் கெட்டியாகிவிட்டால் (Cirrhosis), முழு செயல்திறனையும் இழக்கும். கல்லீரல் 75 சதவிகித அளவு செயல் இழந்துவிட்டால், உயிர் வாழ்வதே கடினமாகி விடும்.சரி... இந்த வைரஸ்களுக்கும் மதுவுக்கும் என்ன தொடர்பு? அடுத்த இதழில் பேசுவோம்!

அதிர்ச்சி டேட்டா

ஹெபடைடிஸ் வைரஸ் தாக்குதலால், உலகில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த மரண எண்ணிக்கை ஹெச்ஐவி/எய்ட்ஸ் மரணங்களுக்கு இணையானது. இவர்களில் பலரது மரணத்துக்கு மதுவும் காரணமாக இருக்கிறது என்பது சோகப் பின்னணி.

(தகவல்களைப் பருகுவோம்!)

டாக்டர் ஷாம்