மேஜிக் வயது 40!



எண்கள்... கண்கள்...

3 கறை நல்லதோ இல்லையோ… காபி இதயத்துக்கு நல்லது என்கிறார்கள் கொரியாவை சேர்ந்த ஆய்வாளர்கள். நாள் ஒன்றுக்கு 3 கப் காபி சாப்பிடுகிற 25 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த முடிவைக் கூறியிருக்கிறார்கள். இதயத்தின் கரோனரி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் அபாயத்தை காபி குறைப்பதே இதற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

21 இதய நோய், பக்கவாதம், நீரிழிவு என்று ஒன்றுக்கும் மேற்பட்ட பல நோய்கள் கூட்டாக ஒருவரைத் தாக்குவதையே ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ என்கிறார்கள். பாரம்பரிய உணவு முறையைப் பின்பற்றுகிறவர்களுக்கு இந்த மெட்டபாலிக் சிண்ட்ரோம் நிலை ஏற்படும் அபாயம் 21 சதவிகிதம் குறைவு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் என்ற இதழ் இந்த முடிவை வெளியிட்டு உள்ளது.

40 ‘மேஜிக் வயது 40’ என்கிறார் அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்த சரும நல மருத்துவரான எமி கிராபர். ‘முகத்தில் சின்னச் சின்ன புள்ளிகளாக இருந்துகொண்டு சங்கடப்படுத்தும் துவாரங்கள், 40 வயதில் நின்று போவதால்தான் இதை லாபகரமான பருவம் என்கிறேன்’ என்று விளக்கமும் சொல்கிறார்.

எமியின் கருத்தை ஆதரிக்கும் விதமாக மும்பை பிரபலங்களின் சரும நல மருத்துவரான ரேஷ்மி ஷெட்டி சொல்லும் டிப்ஸையும் இங்கே குறிப்பிட வேண்டும். ‘ஓட்ஸை, பவுடர் போல ஆக்கிக்கொண்டு மாய்சரைஸருடன் கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். ஒரு நிமிடத்துக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவாகிவிடும்’ என்கிறார்.

63 அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆமாம்… 10 மணி நேரம் அல்லது அதற்கு மேல் இரவில் தூங்குகிற பெண்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு நேரம் 63 சதவிகிதம் அதிகமாம். 7 முதல் 8 மணி நேரம் வரை தூக்கமே இயல்பானது என்றும் இந்த அளவுக்கும் மேல் தூங்கும் பழக்கம் கொண்ட பெண்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது என்றும் பரிந்துரைத்திருக்கிறது ஆய்வை மேற்கொண்ட ஹார்வர்ட் பள்ளி.

433 நாள் ஒன்றுக்கு பொதுவாக 2,500 கலோரி தேவை. ஆனால், மது அருந்தும்போது மட்டும் தேவைக்கு அதிகமான 433 கலோரி கிடைக்கிறது என்கிறது அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் அமைப்பு. பீர் அடிக்கிறவங்களுக்கு தொப்பை வர்றது இதனால்தானோ!