இயற்கை பானங்களில் அமிலக் கலப்பு!எச்சரிக்கை

சில வகைக் குளிர்பானங்களில் பூச்சி மருந்துகள் கலக்கப்படுகின்றன என்கிற அதிர்ச்சித் தகவல் என்றைக்கு வெளியானதோ, அன்றைக்கே மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டனர். உடல்நலத்தைக் கெடுக்கும் செயற்கை குளிர்பானங்களை புறக்கணித்து விட்டு இளநீர், கரும்புச்சாறு, நெல்லிச்சாறு, கற்றாழைச்சாறு என இயற்கை குளிர்பானங்களை பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவை குளிர்பானம் மட்டுமல்ல... பல நோய்களையும் போக்கக்கூடிய அருமருந்து என்று அக்குளிர்பானங்கள் மீது மக்களின் கவனம் திரும்பியது. அதன் பிறகு சாதாரண அளவில் இருந்த இந்த பானங்களின் விற்பனை பெட் பாட்டிலில் அடைத்து விற்கும் அளவுக்கு வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இச்சாறுகள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டால் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது? இந்தக் கேள்வி உங்களுக்கு எழுந்தால் நீங்கள் விழிப்புடன் இருப்பதாக அர்த்தம்!

சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்ட சோதனையில் நெல்லி மற்றும் கற்றாழைச் சாறுகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அமிலக் கலப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் டி.அனுராதாவிடம் பேசினோம்...  

‘‘ஒரு குளிர்பான நிறுவனம் நெல்லி மற்றும் கற்றாழைச் சாறு உற்பத்தி செய்து வந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை கண்காணிப்பாளருக்கு இச்சாறுகள் உடல் நலத்துக்கு உகந்ததா என்று சோதிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தார் வழக்கறிஞர் கேசவமூர்த்தி. அதோடு, பல்வேறு இடங்களிலிருந்து இச்சாறுகள் மீது புகார் வந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 13 அன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த இதன் விற்பனை நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டோம். பாட்டிலில் ஒன்றாகவும் அட்டைப்பெட்டியில் வேறொன்றாகவும் பேட்ச் எண் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். உணவுப்பொருள் விற்பனைக்கான உரிமத்தையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அந்த இடமே சுகாதாரமற்ற முறையில் இருந்தது. எவ்வித அனுமதியும் பெறாமல் சர்க்கரை நோய், பருமன், இதய நோய்களைப் போக்கக்கூடியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்லி மற்றும் கற்றாழைச் சாறுகளின் மாதிரிகளை எடுத்து சேலம் உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பினோம்.

கற்றாழைச்சாற்றுக்கென உணவுப் பாதுகாப்புத் துறையால் இது வரையிலும் தர நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆகவே, புதுதில்லியில் இயங்கி வரும் உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்கு இதன் மாதிரியை அனுப்பி அனுமதி பெற்ற பிறகே விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளோம்.  நெல்லிச்சாறின் மீதான ஆய்வில் அது பாதுகாப்பற்றது, தரக்குறைவானது மற்றும் தப்புக்குறியீடு (கேடு விளைவிக்கும் பானத்தை நல பானம் என்று குறிப்பிட்டிருந்ததால்) என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நெல்லிச்சாறு கெட்டுப்போகாமல் இருக்க பென்சாயிக் அமிலமும் கூடுதலாக  அஸ்கார்பிக் அமிலமும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

உணவுப் பாதுகாப்புத் துறையின் தர நிர்ணயப்படி நெல்லிச்சாறில் பென்சாயிக் அமிலம் 120ppm (Parts Per Million) அளவுக்கு இருக்கலாம். அச்சாற்றிலோ 950ppm அளவு பயன்படுத்தப்பட்டிருந்தது. அஸ்கார்பிக் அமிலத்தை நெல்லிச்சாறில் உபயோகிக்கவே கூடாது. அதையும் மீறி உபயோகித்திருந்தார்கள். பாட்டிலின் லேபிளில் தண்ணீரும் நெல்லிச்சாறும் சேர்ந்தது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்விரு அமிலங்கள் கலக்கப்படுவது பற்றிக் குறிப்பிடப்படவே இல்லை. விதிமுறைகளை மீறி தரமற்ற உணவுப் பொருளை உற்பத்தி செய்து வந்த காரணத்துக்காக அந்நிறுவனத்துக்கு 15 நாட்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி விட்டு 15 நாட்களுக்குள் உணவுப் பாதுகாப்புத் தரத்தின்படி நெல்லிச்சாறு உற்பத்தி செய்து அதனை ஆய்வுக்குட் படுத்தி அனுமதி பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் செந்தாரப்பட்டியில் இயங்கி வரும் இரு நலபான உற்பத்தி நிலையங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில் ஓமலூர் நிறுவனம் உற்பத்தி செய்யும் சாறில் பென்சாயிக் பயன்பாடு அதிகம் இருப்பது தெரிய வந்தது. அதற்கும் 15 நாள் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. செந்தாரப்பட்டி நிறுவனத்தின் மீதான ஆய்வறிக்கை வந்ததும் உடனடி நடவடிக்கை மேற்கொள்வோம்’’ என்கிறார் அனுராதா.
நல பானங்கள் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளும் இதுபோன்ற பானங்களில் கலக்கப்படும் அமிலங்களால் எத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்? உயிர் தொழில்நுட்பவியல் உதவி பேராசிரியர் ச.சுவாமிநாதனிடம் கேட்டோம்.

 ‘‘நெல்லிக்காயில் இயற்கையாகவே அஸ்கார்பிக் அமிலம் இருக்கிறது. இன்றைக்கு கர்ப்பிணிகள் பலரும் ரத்தசோகைக்கு ஆளாகியுள்ளனர். உணவுப்பொருட்களிலிருந்து எடுத்துக் கொள்ளும் இரும்புச்சத்து முழுமையாக உடலில் சேர்வதற்கு அஸ்கார்பிக் அமிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவேதான், ரத்தசோகை  உள்ளவர்கள் நெல்லிச்சாறு அருந்த வேண்டும் என்கிறோம். அஸ்கார்பிக் அமிலம்தான் வைட்டமின் சி என்று அறியப்படுகிறது. ஆனால், Rutin, bioflavonoids ஆகிய சத்துகளும் faktor k, j, t காரணிகளும் அஸ்கார்பினொஜென் நொதிகளும் வைட்டமின் சியில் இருக்கின்றன.

அஸ்கார்பிக் அமிலத்தை செயற்கையாக உட்செலுத்தும்போது மற்ற அம்சங்கள் கிடைக்காமல் போய்விடும். செயற்கையான அஸ்கார்பிக் அமிலம் 10 மடங்கு அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனால் வயிற்று உபாதைகள், எலும்பிலிருந்து கால்சியம் சிதைந்து போதல், சிறுநீரகக்கல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக இவை இதயத்தமனியில் lipoprotein A என்கிற கொழுப்பை பதிய வைக்கிறது. இதன் காரணமாக ரத்தக்குழாய் அடைப்பும் ஏற்படலாம். இது போன்று செயற்கையாக உருவாக்கப்படும் விட்டமின் சியிலிருந்து புற்றுநோய் காரணிகள் உருவாகும் என 2001ம் ஆண்டே சயின்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. அஸ்கார்பிக் அமிலத்தை ஆண்கள் 90 மி.கி., பெண்கள் 75 மி.கி. என்ற அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 கற்றாழையின் பச்சை நிறத்துக்காக நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. நெல்லி மற்றும் கற்றாழைச் சாறுகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. 2000ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி பென்சாயிக் அமிலம் இதயம், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை மற்றும் அட்ரினல் சுரப்பியை பாதிப்பதாக கூறியுள்ளது.

மனக்குவிப்புத்திறன் குறைவு, சோர்வு, தூக்கமின்மை, தலைவலி ஆகியவற்றையும் ஏற்படுத்துவது தெரியவந்தது. இங்கிலாந்து ஷெஃபில்ட்  பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியலாளர் பீட்டர் பைப்பர், உணவுப் பொருளின் மொத்த எடையில் 0.1 சதவிகிதம் மட்டுமே பென்சாயிக் அமிலத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், திரவமாக இருந்தால் 5 ppb (parts per billion) அளவுதான் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த அளவை விட பல மடங்கு அதிக அளவில் இந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் பிரச்னையே.

அஸ்கார்பிக் மற்றும் பென்சாயிக் அமிலங்கள் ஒரே உணவுப்பொருளில் சேர்க்கப்படும்போது ஒன்றோடொன்று வேதிவினை புரிந்து பென்சின் உற்பத்தியாகிறது. இது புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென் (Carcinogen) என்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இயற்கையான மலை நெல்லியை வாங்கி தேனில் பதப்படுத்தி உட்கொள்ளுதல்தான் சிறந்த வழி. கற்றாழை வளர்ப்பதற்கு பெரிய பராமரிப்பு தேவையில்லை என்பதால் வீட்டிலேயே வளர்க்கலாம்’’ என்கிறார் சுவாமிநாதன்.மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

இயற்கையான மலைநெல்லியை வாங்கி தேனில்  பதப்படுத்தி உட்கொள்ளுதல்தான் சிறந்த வழி. பெரிய பராமரிப்பு தேவையில்லை என்பதால் வீட்டிலேயே எளிதாக   கற்றாழை வளர்க்கலாம்!நெல்லிச்சாறு கெட்டுப்போகாமல் இருக்க பென்சாயிக் மற்றும் அஸ்கார்பிக் அமிலங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.

- கி.ச.திலீபன்
படம்: சங்கா்