டைபாய்டு காய்ச்சல் தடுப்பது எப்படி?3 நாட்களுக்கு மேல் ஒருவருக்குக் காய்ச்சல் நீடித்தால் `ஒருவேளை இது டைபாய்டாக இருக்குமோ?’ என்று ஐயப்படும் அளவிற்கு `டைபாய்டு காய்ச்சல்’ (Typhoid Fever) பொதுமக்கள் மத்தியில் பிரபலம். தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி, பனிக்காலம் முடியும் வரைக்கும் - அதாவது, அக்டோபர் முதல் ஜனவரி வரை - டைபாய்டு காய்ச்சல் நீடிக்கும்.

டைபாய்டு காய்ச்சலுக்குக் `குடற்காய்ச்சல்’ (Enteric Fever) என்று வேறு ஒரு பெயரும் உண்டு. காரணம், இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள் சிறுகுடலில் வசித்து, அங்கேயே வளர்ந்து, காய்ச்சலை உண்டாக்குவதுதான்.

யாருக்கு வருகிறது?    
குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினரையும் இது பாதிக்கலாம் என்றாலும் இந்தியாவில் ஐந்திலிருந்து பத்து வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளையே இது பெருமளவில் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த குழந்தைகள், சுகாதாரம் குறைந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகள் போன்றோருக்கு டைபாய்டு பாதிப்பு அதிகம். பெரியவர்களைப் பொறுத்த அளவில் சாலையோர உணவகங்களில், சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில் அடிக்கடி சாப்பிடும் வழக்கத்தில் உள்ளவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் இது ஒரு தொற்றுநோய் என்பதால், வீட்டில் ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், அடுத்தவர்களுக்கும் வர அதிக வாய்ப்பு உண்டு.

டைபாய்டு வரும் வழிகள்

`சால்மோனல்லா டைபை’ (Salmonella typhi) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் இந்தக் காய்ச்சல் வருகிறது. நோயாளியின் சிறுகுடலிலும் அதைச் சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் (Lymphoid tissues) இந்தக் கிருமிகள் வசிக்கின்றன. மலம், சிறுநீர் ஆகியவை மூலம் இவை வெளியேறி மண்ணில்
கலக்கின்றன.இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. கண்ட இடங்களில் உட்காரும் ஈக்கள் இந்தக் கிருமிகளைச் சுமந்து கொண்டு தெருவிலிருந்து வீட்டிற்கு வருகின்றன. 

நாம் பயன்படுத்தும் குடிநீரிலும் உணவிலும் இவற்றைக் கலந்து விடுகின்றன. இந்த அசுத்த உணவையும் தண்ணீரையும் சாப்பிடு பவருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது. ஏற்கனவே டைபாய்டு வந்து குணமானவரின் குடலில் சில காலம் இவை வசிப்பது உண்டு... அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் அவரை அறியாமலேயே அவ்வப்போது வெளியேறுவதுண்டு. இந்தக் கிருமிகள் அந்த நபரை அவ்வளவாக பாதிக்காது. ஆனால், ஈக்கள் மூலம் மற்றவர்களை அடையும்போது அவர்களுக்கு டைபாய்டு வந்துவிடுகிறது. இந்த நபர்களை `நோய் கடத்துநர்கள்’ (Carriers) என்கிறார்கள், மருத்துவர்கள்.

நோய் பரவும் மாற்று வழிகள்

டைபாய்டு கிருமிகள் தண்ணீரில் இரண்டு நாட்கள்தான் உயிர்வாழும். ஆனால், ஈரமான நிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் வாழத் தகுதி பெறும். ஆகையால் இந்தக் கிருமிகள் வாழும் மண்ணில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் சரியாகச் சுத்தம் செய்யத் தவறினால் அல்லது சரியாக வேகவைக்கத் தவறினால் அவற்றைச் சாப்பிடும் நபருக்கு டைபாய்டு வந்துவிடும்.

இந்தக் கிருமிகள் பாலில்கூட இருக்கலாம். பாலைக் கொதிக்க வைக்காமல் லேசாக சூடுபடுத்தி குடிக்கும்  பழக்கமுள்ளவர்களுக்கு இந்தக் காய்ச்சல் வர அதிக வாய்ப்புள்ளது. மேலும், குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கும் பனிக்கட்டி, ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளில் இவை பல மாதங்களுக்கு உயிர்வாழும். முக்கியமாக, சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில் இவை அதிகமாக வசிக்கும். அங்கு உணவு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு டைபாய்டு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு.

நோய் தோன்றும் முறை

அசுத்த உணவு, தூய்மையற்ற குடிநீர் போன்றவை மூலம் நம் உடலுக்குள் நுழையும் இந்தக் கிருமிகள் சிறுகுடலை அடைந்து உடனே ரத்தத்தில் கலந்துவிடும். அங்கு இவை பல்கிப்பெருகி மீண்டும் குடலுக்கே வந்து குடலில் உள்ள நிணநீர்த் திசுக்களில் குடியேறும். `சிறுகுடலின் பாதுகாப்புப்படை’   என்று அழைக்கப்படுகின்ற `பேயரின் திட்டுகள்’ எனும் பகுதிகளை அழிக்கும். இதனால் குடல் சுரப்புத் திசுக்கள் மற்றும் குடல் நிணநீர் முடிச்சுகள் வீங்கும். அப்போது குடல் திசுக்களில் சில்லரைக் காசு போல் வட்ட வட்டமாக புண்கள் உண்டாகி, காய்ச்சல் வரும். இதுதான் `டைபாய்டு காய்ச்சல்’.

அறிகுறிகள்

மனித உடலுக்குள் இந்த நோய்க்கிருமி நுழைந்து, பத்திலிருந்து பதினான்கு நாட்கள் கழித்து டைபாய்டு அறிகுறிகள் துவங்கும். முதல் நாளில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு தோன்றும். அடுத்த நான்கு நாட்களில் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். இரவில் காய்ச்சல் அதிகமாகும். 104  டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக காய்ச்சல் எகிறும்.

ஒவ்வொரு நாளும் தலைவலி அதிகரிக்கும். உடல்வலி கடுமையாகும். பசி குறையும். வாந்தி வரும். வயிறு வலிக்கும். ஏழாம் நாளில் நாக்கில் வெண்படலம் தோன்றும். வயிற்றுப்போக்கு தொல்லை தரும். சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். உடலெங்கும் பரவலாக ரோஜா நிறப் புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் மார்பிலும் முதுகிலும் அதிக அளவில் காணப்படும்.

சிக்கல்கள்

இந்தக் காய்ச்சலுக்குத் தொடக்கத்திலேயே சிகிச்சை பெறத் தவறினால் விளைவுகள் மோசமாகும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் மிகவும் அதிகமாகி வலிப்பு வரலாம். உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் வரலாம். சுயநினைவை இழக்கலாம்.

சிலருக்கு நோய் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலத்தில் ரத்தம் வெளியேறலாம். இன்னும் சிலருக்கு குடலில் சிறு துளைகள் விழுந்து `ரத்த மலம்’ போகலாம். இத்துடன் ரத்த வாந்தியும் வர வாய்ப்புண்டு. மேலும் ரத்தத்தில் இந்த நோய்க்கிருமிகளில் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘செப்டிசீமியா’ எனும் நிலைக்கு மாறி, நோயாளிக்கு அதிர்ச்சி நிலை உருவாகி, உயிருக்கே ஆபத்து வரலாம்.

நோய் நிர்ணயம்

இந்த நோயை உறுதி செய்ய  ரத்தப் பரிசோதனைகள் உள்ளன. முக்கியமாக, இவர்களுக்கு ரத்த வெள்ளையணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும். `வைடால்’ ரத்தப் பரிசோதனையில் (Widal test) இந்த நோய்க்குரிய எதிர் அணுக்களைக் கண்டறிந்து நோயை உறுதி செய்யலாம். தவிர, கிருமி வளர்ப்புச் சோதனை  (Blood Culture), PCR பரிசோதனை மூலமும்  நோயை உறுதிப்படுத்த முடியும்.

சிகிச்சை முறைகள்

டைபாய்டு காய்ச்சலுக்கு மருத்துவர் கூறும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த நோய் கிருமிகளை நேரடியாகத் தாக்கி, டைபாய்டு காய்ச்சலைக் குணப்படுத்த பல நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உள்ளன. குளோராம்பெனிக்கால், கோடிரைமாக்சசோல், சிப்ரோஃபிளாக்சசின், ஓஃபிளாக்சசின், செப்ட்ரியாக்சோன் சோடியம், அசித்திரோமைசின் போன்றவை அவற்றுள் முக்கியமானவை. இவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி முறைப்படி பயன்படுத்தினால் நோய் முழுவதுமாக குணமாகும். இல்லையென்றால் டைபாய்டு காய்ச்சல் மீண்டும் வந்துவிடும்.

நோயாளியின் பராமரிப்பு

டைபாய்டு காய்ச்சல் வந்தவர் வெளியிலும் வெயிலிலும் செல்லாமல் இருக்க வேண்டும். இந்தக் காய்ச்சல் அடுத்தவர்களுக்கு பரவுவதைத் தடுக்க, நோயாளியைத் தனி அறையில் வைத்துச் சிகிச்சை தருவது மிக நல்லது. நோயாளியுடன் நெருக்கமாகப் பழகும்போது அடுத்தவர்களுக்கும் இந்த நோய் பரவி விடும் என்பதால் இந்த எச்சரிக்கை. 

நோயாளி மிகவும் தளர்ச்சியுடன் காணப்பட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் ஆகிய அறிகுறிகள் குறையாமல் இருந்தால், அவருக்கு குளுக்கோஸ், சலைன் போன்ற நீர்மங்களைச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். அதற்கு அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையைத் தொடர வேண்டும், நோயாளி முதியவர்  அல்லது கர்ப்பிணி என்றால் சிறப்பு கவனம் தேவை.

என்ன உணவு கொடுப்பது?

நோயாளிக்கு நிறைய தண்ணீர் தர வேண்டும். எளிதில் செரிமானமாகிற அரிசிக்கஞ்சி, கோதுமைக்கூழ், ஜவ்வரிசிக்கஞ்சி, ஆரஞ்சு, ஆப்பிள், தக்காளி, எலுமிச்சை, மாதுளை, திராட்சைப் பழச்சாறுகள், பால், இளநீர், குளுக்கோஸ், தண்ணீர் சத்துமிக்க பானங்கள் மற்றும் ரொட்டி, பிஸ்கெட்டுகள்ஆகிய உணவுகளைத் தர வேண்டும்.

தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இல்லையென்றால் திரவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு, திட உணவுகளை அதிகப்படுத்தலாம். நீராவியில் தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு உண்பது நல்லது. ஒரு வாரத்திற்குப் பிறகு வழக்கமான உணவுகளை உண்ணலாம். இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை மூன்று வாரங்களுக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது. தடுப்பு ஊசி உள்ளது!

டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க  இரண்டு வகை தடுப்பூசிகள் உள்ளன. ‘விஐ கேப்சுலர் பாலிசாக்கரைடு தடுப்பூசி (Vi-capsular polysaccharide (Vi-PS) vaccine) என்று ஒன்று. `விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி’  (Vi-PS TT Conjugate vaccine) என்பது இன்னொன்று. விஐபிஎஸ் தடுப்பூசி போடும் முறை குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளத் தவறியவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஒருவர் ஒருமுறை இதைப் போட்டுக்கொண்டால், 3 ஆண்டுகளுக்கு டைபாய்டு காய்ச்சல் வரும் வாய்ப்பு குறையும். ஆகவே, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.விஐபிஎஸ் டிடி இணைக்கூட்டுப்பொருள் தடுப்பூசிகுழந்தைக்கு 9 மாதம் முடிந்ததிலிருந்து ஒரு வயதுக்குள் இதைப் போட்டுக்கொள்ளலாம். ஊக்குவிப்பு ஊசியாக குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் ஒருமுறை இதைப் போட்டுவிட வேண்டும்.

டைபாய்டு வந்தவருக்குத் தடுப்பூசியைப் போடலாமா?
டைபாய்டு பாதிப்புக்கு உள்ளானவர்கள் கடந்த 3 வருடங்களுக்குள் டைபாய்டுக்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை என்றால்,  டைபாய்டுக்கு முறைப்படி சிகிச்சை எடுத்துச் சரியான பிறகு, 4 வாரங்கள் கழித்து இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். இதுவும் முக்கியம்!டைபாய்டு காய்ச்சலை வரவிடாமல் தடுக்கத் தடுப்பூசி  மட்டுமே போதாது. காரணம், இவற்றின் நோய் தடுக்கும் சக்தி 80 சதவிகிதம் மட்டுமே. எனவே, மற்றத் தடுப்பு வழிகளும் முக்கியம். சுய சுத்தம் பேணப்பட வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். தெருக்களைக் கழிப்பறைகளாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும். காய்கறிகளையும் பழங்களையும் நன்கு கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும்.

உணவுகளை ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். சுத்தமான உணவுகளையே சாப்பிட வேண்டும். சாலையோரக் கடைகளில் சாப்பிடக்கூடாது. திறந்தவெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக்கூடாது. வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்.        

ஏற்கனவே டைபாய்டு வந்து குணமானவரின் குடலில் சில காலம் இந்த கிருமிகள் வசிப்பது உண்டு.டைபாய்டு காய்ச்சலுக்குத் தொடக்கத்திலேயே  சிகிச்சை பெறத் தவறினால் விளைவுகள் மோசமாகும். குழந்தைகளுக்கு வலிப்பு வரலாம். நீரிழப்பு ஏற்பட்டு, ரத்த  அழுத்தம் குறைந்து, சுயநினைவை இழக்கலாம்.

டாக்டர் கு.கணேசன்