ஒரு கிளாஸ் மது ஒரு கிளாஸ் எண்ணெய்!



மது... மயக்கம் என்ன?

தங்கள் மூளையின் சில செல்களை இழப்பதற்கான தைரியம் உடையவர்களுக்கான பானமே ஆல்கஹால்!
- சார்லி ஹார்பர்
(பிரபல டி.வி. கதாபாத்திரம்)

மதுவோடு சேர்ந்து உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில் மிக முக்கியப் பங்கு நொறுக்குத்தீனிகளுக்குத்தான் உண்டு. மதுவின் கொடுமையை சற்றே தணிக்கக்கூடியதாக இருக்க வேண்டிய தின்பண்டங்கள், உண்மையில் வேறுவிதமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.

அதாவது, எரிகிற தீயில் எண்ணெயை அள்ளி அள்ளி வீசுவது போலத்தான்.மது அருந்தும்போது, நமது உடல் உடனடியாக வளர்சிதை மாற்றத்தைச் (மெட்டபாலிசம்) செயல்படுத்தத் தொடங்குகிறது. இச்செயல்பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட வேகம் தேவை. ஒரு பெக் விஸ்கியை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த 45 முதல் 60 நிமிடங்கள் ஆகின்றன. அது மட்டுமல்ல... கூடுதலாக ஒரு லிட்டர் தண்ணீரும் வேண்டும்!

ஒருவேளை மதுவோடு பச்சைக் காய்கறிகளும் பழங்களும் சாப்பிட்டால், இந்தக் காரியம் ஓரளவு எளிதாகும். காய்கறிகள், பழங்களில் உள்ள நார்ச்சத்து (ஃபைபர்) ரத்த ஓட்டத்தில் மதுவை ஒழுங்குபடுத்த உதவும்.

உடலின் நீர்த்தேவையும் பூர்த்தியாகும்.இந்நேரத்தில் உடலில் வற்றிப்போயிருக்கும் வைட்டமின், தாதுக்களை ஓரளவு பெறவும் பழங்கள், காய்கறிகள் உதவும். இது ஒரு போனஸ்!‘சரக்கு அடிக்கும்போது பழம், காயா? சே ச்சே...’ என வேறுவகை தீனிகளைத் தேடித் தேடி வெளுத்துக் கட்டினால்..?

குடியின் போது பெரும்பாலும் கொழுப்பு அதிகமான, ஊட்டச்சத்து குறைவான, நீர்ச்சத்தே இல்லாத நொறுக்குத்தீனிகளே விரும்பி உண்ணப்படுகின்றன. அதனால் விளைவுகளும் எதிராகவே இருக்கின்றன.

முதலாவதாக போதையின் தாக்கம் அதிகமாகி, குடிகாரர் தளர்ந்து போகிறார். ஹேங்ஓவர் எனும் மட்டையாகும் சம்பவம் நடக்கிறது. ஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அமிலத்தன்மை அதிகரிக்கிறது. வேகமாக எடை கூடுகிறது... குறிப்பாக தொப்பை. மொத்தத்தில் சந்தோஷத்துக்குத் தொடங்கிய குடி, நோயில் விழுவதில் வந்து நிற்கிறது, மறுநாள் காலைக்குள்ளாகவே.

ஆரோக்கியம், தொப்பையற்ற உடல், நீண்டகால மகிழ்ச்சி ஆகியவற்றை விரும்பு கிறவர்கள் எப்போதும் ஹெல்த்தியான நொறுக்குத்தீனிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் மறுசிந்தனை, புதுமை, கற்பனைத்திறன், மேம்பாடு ஆகியவை முக்கியம்.

ஒரு ஸ்நாக்ஸ் தெரிவு செய்வது ஏதோ எம்பிஏ பாடம் போல இருக்கிறதே என அஞ்ச வேண்டாம். அஞ்சினாலும் மிஞ்சினாலும் இது மிக அவசியம்! அலசி ஆராய்ந்து, பரிசோதியுங்கள்... அதன் பிறகு என்ஜாய் செய்யுங்கள்!உணவுகளுக்கு இடையே எடுத்துக்கொள்ளும் சிறுதீனி அல்லது தின்பண்ட வகைகளையே ‘ஸ்நாக்ஸ்’ எனக் குறிப்பிடுகிறோம். இவை மது அருந்தும்போதும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நல்ல ஸ்நாக்ஸ் எப்படி இருக்க வேண்டும்?

*அதிக நார்ச்சத்து இருக்க வேண்டும் (இது உடலில் ஆல்கஹால் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும்).
*நீர்ச்சத்து அதிகம் இருக்க வேண்டும் (நீர்க்கச் செய்யவும், உடலின் கூடுதல் நீர்த்தேவையை சமநிலைப்படுத்தவும்).
*ஊட்டச்சத்து அதிகம் இருக்க வேண்டும் (கூடுதல் ஊட்டச்சத்து தேவையை சரி செய்யும்).
*கொழுப்பு குறைவாக இருக்க வேண்டும்  (கல்லீரல் ஏற்கனவே மதுவோடு போராடிக் கொண்டிருக்கும். கொழுப்பும் சேர்ந்தால் அதன் பாடு இன்னும் திண்டாட்டமாகி விடும்).
*உப்பு குறைவாக இருக்க வேண்டும் (உடலில் சோடியம் அதிகமானால், நீர்த்தேவை இன்னும் அதிகமாகும்).

பொதுவாக உட்கொள்ளப்படும் ஸ்நாக்ஸ் எவை?

*வறுக்கப்பட்ட உப்பு நிறைந்த கடலை
*வறுக்கப்பட்ட உப்பு நிறைந்த முந்திரி
*உப்பு நிறைந்த சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரை வகைகள்
*முழு கொழுப்புள்ள சீஸ் (பாலாடைக்கட்டி)
*ஃப்ரைடு சிக்கன், கபாப் வகைகள்
*வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, ஸ்ப்ரிங் ரோல் போன்றவை
*மிக்சர், பக்கோடா வகைகள்
*முட்டை அயிட்டங்கள்
*இதர அசைவ அயிட்டங்கள்
*இதர எண்ணெய் பதார்த்தங்கள்
*பிரியாணி, நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் வகைகள்

இந்த உணவு வகைகளில் மிக அதிக கொழுப்பு உள்ளது. இவற்றின் 75 சதவிகித கலோரி இந்தக் கொழுப்பில் இருந்தே வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு கையில் ஒரு கிளாஸ் மதுவும், இன்னொரு கையில் ஒரு கிளாஸ் எண்ணெயும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிக் குடிப்பதற்குச் சமம், இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவதும்!

எது ஆரோக்கிய ஸ்நாக்ஸ்?

* பச்சைக் காய்கறி சாலட்
* ஃப்ரூட் சாலட்
* வேக வைக்கப்பட்ட காய்கறிகள்
* முளைகட்டிய பீன்ஸ் / தானியங்கள்
* கிரில் செய்யப்பட்ட மீன்
* குறைவான கொழுப்புள்ள சீஸ்

ஆரோக்கிய ஸ்நாக்ஸ் வகைகளின் லிஸ்ட் மிகச்சிறியதாக இருக்கிறதே என கவலை கொள்ள வேண்டாம். கற்பனைத்திறனைப் பயன்படுத்தி, இதே உணவு வகைகளையே மேலும் சுவாரஸ்யமாக்கலாம். எலுமிச்சைச்சாறு, தயிர் போன்றவை இதற்கு உதவும். உப்பும் எண்ணெயும் வேண்டாம்.குடிப்போர் கவனத்துக்கு...

*ஸ்நாக்ஸ் பற்றி பயமுறுத்தி இருப்பதால், எதுவும் சாப்பிடாமல் வெறுமனே மதுவை மட்டுமே குடிக்க வேண்டாம். வெறும் வயிற்றில் மது அருந்தும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி, கல்லீரலைப் பாதிக்கிறது.
*நட்ஸ் மற்றும் பொரிக்கப்பட்ட தீனிகளுக்குப் பதிலாக சாலட்டையே தேர்வு செய்யுங்கள்.ஆல்கஹாலும் பொரிக்கப்பட்ட உணவுகளும் சேரும்போது கொழுப்பாகவே உடலில் சேமிக்கப்படும்.
*ஆல்கஹால் பொதுவாகவே ஒரு சிறுநீர்பெருக்கி என்பதால், அடிக்கடி சிறுநீரை வெளியேற்றி, உடலின் நீர்ச்சத்தைக் குறைத்து விடும். அதனால் இடை இடையே தண்ணீர் அல்லது ஃப்ரெஷ் ஜூஸ் பருகுவது நல்லது.
*தட்டு நிறைய நொறுக்குகள் காணப்பட்டாலும், ஆசையைத் தூண்டினாலும், பொறுமை அவசியம். நன்கு சிந்தித்த பிறகே, அந்தத் தட்டில் கை வையுங்கள். எவ்வளவு அவசியமோ அவ்வளவு மட்டுமே சாப்பிடுங்கள். கபகபவென உள்ளே தள்ளுவது உடல்நலத்துக்குத் தீங்கானது!

குடியின் போது பெரும்பாலும் கொழுப்பு அதிகமான, ஊட்டச்சத்து குறைவான, நீர்ச்சத்தே இல்லாத நொறுக்குத்தீனிகளே விரும்பிஉண்ணப்படுகின்றன.

அதிர்ச்சி டேட்டாஉலகில் மூவரில் ஒருவர் பருமனாக இருக்கிறார். மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமானோர் (37.5%) பருமன் பிரச்னை உடையவர்களே.
இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து பருமன் ஆகிக்கொண்டே இருக்கும் இந்தியாவின் இந்நிலைக்கு மதுவும் ஒரு காரணம்!

(தகவல்களைப் பருகுவோம்!)

டாக்டர் ஷாம்