ஆண்ட்ராய்டில் ஆரோக்கியம்



செல்போன் நல்லது

ஆப்ஸ் (Apps) - இந்த வார்த்தையை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி உச்சரிக்க கேட்டிருப்போம். அது என்ன ஆப்ஸ்? அப்ளிகேஷன்ஸ்  என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமே ஆப்ஸ். ஆண்ட்ராய்டு, ஆப்பிள்மேக் ஐபோன் ஆகிய நவீன வகை போன்களில் ஏராளமான ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். படம் பார்க்க ஒரு ஆப்ஸ், பாட்டு மட்டும் கேட்க ஒரு ஆப்ஸ், ஏன்...

ரயில்வே பிஎன்ஆர் எண்ணை அழுத்தினால் உங்கள் இருக்கை உறுதியாகி உள்ளதா என்பதைக் காட்டும் ஆப்ஸ் கூட உள்ளது. அடுத்தகட்டமாக உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோய்கள் வராமல் தடுப்பதற்கும், மருந்துகள் குறித்த தகவல்களை பெறவும்,பலவிதமான ஆப்ஸ்கள் இப்போது கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆப்ஸ்கள் சிலவற்றை உருவாக்கியிருக்கும் நிபுணர் சிலரிடம் உரையாடினோம்.

அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சியை அதிகரிக்கவும், ஆரோக்கிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிம்ளிஃபிட்டி (Simplifity) நிறுவனம்‘5 min to health’ ஆப்பை உருவாக்கியுள்ளது. சிம்ளிஃபிட்டி நிறுவனத்தின் இயக்குநர் நரசிம்மன் சந்தானம் மெடிக்கல் ஆப்ஸின் அவசியம் குறித்து நம்மிடம் பேசினார்...

‘‘ஸ்மார்ட்போன் ஆப்ஸ்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு வருடம் முன்பு எங்கள் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியபோது, ‘அலுவலகங்களில் வேலை செய்பவர்களில் 80 சதவிகிதம் பேர் எந்த உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. அதனால்தான் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள்’ எனக் கண்டறிய முடிந்தது. இதைத் தடுக்க ஆப்ஸ் உருவாக்கி, உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தினமும் பயிற்சி செய்ய வைக்க முடியும் என நினைத்தோம்.

எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் மதுமிதாவும் குழுவினரும் பல மருத்துவ நிபுணர்கள், பிஸியோதெரபிஸ்டுகளிடம் ஆலோசனை செய்து இந்த ஆப்ஸை உருவாக்கினார்கள். 3 நிமிடங்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள், 5 நிமிடங்கள் செய்யக்கூடிய நடைப்பயிற்சிகள், 3 நிமிடங்கள் செய்யக்கூடிய மூச்சுப்பயிற்சிகள் என 3 வகைகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.

மிக எளிதாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் ஆப்ஸை வடிவமைத்துள்ளோம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மூன்றையும் எவ்விதம் செய்ய வேண்டும் என்று செயல்முறை விளக்கங்களையும் கொடுத்துள்ளோம். ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும் என்றும் இந்த ஆப்ஸ் சொல்லிவிடும்.

அலுவலகத்தில் ஒரே மாதிரி உட்கார்ந்து வேலை செய்யாமல் நடுநடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ளவும் நினைவுபடுத்தும். `4 மணி ஆகிவிட்டது... தயவு செய்து உங்கள் உடற்பயிற்சியை செய்யவும்’ என நினைவூட்டும். இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரம் உங்களை உடற்பயிற்சிகள் செய்ய வைக்கும்.

இந்த ஆப்ஸ் உருவாக்கியவுடன், ‘வெறும் ஐந்து, ஐந்து நிமிடங்களாக  உடற்பயிற்சிகளை செய்தால் போதுமா? பயன் கிடைக்குமா’ என சிலர் கேட்டார்கள். இது போதுமானது இல்லை என்று கூட சிலர் கருத்து தெரிவித்தனர். ஒன்றுமே பயிற்சிகள் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்பவர்களுக்கு,  இப்படி ஒருநாளில் அவ்வப்போது பயிற்சிகள் செய்தால் நோய்கள் வரும் அபாயம் பெருமளவு குறையும். இப்படி சில மணி நேரங்களுக்கு ஒருமுறை உடற்பயிற்சிகள் செய்வதால் இதய நோய்கள், நீரிழிவு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் வருவது எல்லாமே குறைகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

பவர் வாக், பஞ்சிங் வாக், சைட் வாக் என்று பலவகையான நடைப்பயிற்சிகளை இதில் கொடுத்துள்ளோம். அலுவலகத்தில் நெடுநேரம் அமராமல் நேரம் கிடைக்கும் போது இத்தகைய நடைப்பயிற்சிகளை செய்து பயன்பெறலாம். அதிக உடலுழைப்பு இல்லாதவர்களுக்கு இந்த ஆப்ஸ் ஒரு வரப்பிரசாதம். இதை ப்ளேஸ்டோரில் இருந்து இலவசமாக ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்...’’5 min to health ஆப்ஸின் தயாரிப்பு மேலாளர் மதுமிதா ஆப்ஸின் பயன்பாடுகளை
பற்றியும், ஆப்ஸின் வகைகள் குறித்தும் விளக்குகிறார்...

``பலவித உடற்பயிற்சிகள், ஆரோக்கிய உணவு தகவல்கள், தேவையற்ற கலோரிகளை எரிப்பதற்குத் தேவையான நடைப்பயிற்சிகளை விளக்கும் படங்கள் என அனைத்தையும் இந்த ஆப்ஸில் உள்ளீடு செய்தோம். எந்த உணவுகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பதை பயன்படுத்துபவர்கள் தெரிந்துகொள்ள முடியும். 3 வகையான ஆப்ஸ்கள் மருத்துவ உலகில் உள்ளன. ஹெல்த் மானிட்டரிங் ஆப்ஸ் என்பது உடலில் உள்ள பிரச்னைகளை மட்டும் தெரியப்படுத்தும்.

உதாரணமாக பிபி எவ்வளவு இருக்கிறது என பார்க்கலாம். இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா என அறியலாம். இரண்டாவது ஹெல்த் ஆக்டிவிட்டி ஆப்ஸ். இது உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள், ஸும்பா நடனம், ஏரோபிக்ஸ், மூச்சுப்பயிற்சிகள் போன்றவற்றைத் தெரியப்படுத்தும். எங்களது ஆப்ஸ் இந்த வகையைச் சேர்ந்தது.
மூன்றாவது வகை மெடிகல் ஆப்ஸ். இதை பெரும்பாலும் டாக்டர்கள் பயன்படுத்து கிறார்கள்.

எந்த நோய்க்கு எந்த மருந்து, சிகிச்சை முறைகள், குறிப்பிட்ட மருந்து, மாத்திரையின் பக்க விளைவுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். இந்த வகை ஆப்ஸ்களை சாதாரண மக்கள் பார்த்து சுய மருத்துவம் செய்துகொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உள்ளது’’ என்கிறார் மதுமிதா.
‘டாக்டர் மோகன்’ஸ் டயாபடிஸ் சென்டர்’ நீரிழிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கூறவும் ஒரு ஆப்ஸை உருவாக்கியுள்ளனர். இந்த ஆப்ஸை குறித்து அம்மையத்தின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர்ஆர்.எம்.அஞ்சனா விளக்குகிறார்...

``ஆப்ஸ் உருவாவதற்கு முன்னால் போர்ட்டல் எனப்படும் வசதியை கம்யூட்டரில் பயன்படுத்தி வந்தோம். அதை எல்லோரும் எளிதாக பயன்படுத்த முடியாது. ஆப்ஸாக மாற்றிவிட்டால் எளிதாக இருக்கும் என நினைத்தோம். டாக்டர் மோகன்’ஸ் ஆப்ஸை ப்ளேஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். நீரிழிவு பற்றிய
16 பாடங்களைக்  கொடுத்துள்ளோம்.

இந்த ஆப்ஸை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக பாடங்களை அறிந்துகொள்ளலாம். ரத்த சர்க்கரை அளவை எவ்வாறு கண்டறிவது? சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் எவ்விதமான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? எவ்விதமான உணவுகளை சாப்பிடவேண்டும்? இப்படி அத்தனை தகவல்களையும் இந்த ஆப்ஸில் கொடுத்துள்ளோம். நீங்கள் சாப்பிட்ட உணவுகளை பதிவு செய்தால் உங்கள் உடலில் ஏறியுள்ள கலோரிகளின் அளவைக் காட்டிவிடும்.

தேவையற்ற கலோரிகளை எரிக்க நீங்கள் எவ்வளவு நடக்க வேண்டும் என கூறிவிடும். ஒரே இடத்தில் வெகுநேரம் அமர்ந்தாலும் `நீங்கள் இவ்வளவு சாப்பிட்டு உள்ளீர்கள்... எழுந்து நடக்கவும்’ என்று உங்களுக்கு நினைவுப்படுத்தும். இதுவரை பத்தாயிரம் பேர் இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்துள்ளார்கள்.

ப்ரீ டயாபடிக் நிலையில் உள்ள இளைஞர்களுக்கும் பயனுள்ளது எங்களின் ஆப்ஸ். இந்த ஆப்ஸின் அறிவுரைகளை பின்பற்றி நடந்தாலே நீரிழிவு வராமல் தடுத்துவிடலாம். உணவுகள் பற்றி விரிவான விஷயங்களும் உள்ளன. டாக்டரின் அறிமுகவுரை அடங்கிய வீடியோவும் ஒவ்வொரு பாடத்துக்கும் முன் உள்ளது. பரிசோதனை முடிவுகளை ஆப்ஸில் பதிவு செய்தால், அந்தத் தகவல்கள் எங்கள் மருத்துவமனையின் டாக்டர் சர்வருக்கு வந்துவிடும்.

 அவர் அடுத்த முறை மருத்துவமனைக்கு வரும் போது அவரைப் பற்றிய முழுதகவல்களும் எங்களிடம் இருக்கும்...’’அலுவலகங்களில் வேலை செய்பவர்களில் 80 சதவிகிதம் பேர் எந்த உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. அதனால்தான் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

- விஜய் மகேந்திரன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்