டியர் டாக்டர்



ஒவ்வொரு மருத்துவக் கட்டுரைக்கும் தாங்கள் கொடுக்கும் ‘தலைப்பு’ படிக்கத் தூண்டுவதோடு, மிகப்பொருத்தமாகவும் அமைந்துள்ளது.
 வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

சி.டி. ஸ்கேன்  பயனும் உண்டு... பயமும் உண்டு. கதிர் வீச்சு மூலம் புற்றுநோய் வருகிறது என பயமும் கிளம்புகிறதே. அவசியமில்லாமல் ஸ்கேன் பண்ணக் கூடாது என அறிவுரையும் வழங்கி உள்ளீர்கள்.வாரா வாரம் ஞாயிறு அன்று எந்த வேலை உள்ளதோ, கறிக்கடைக்கு போவோம். உமர் ஃபாரூக் மற்றும் வர்ஷா சொல்வதைக் கேட்டால் கால் செல்ல தயங்குகிறது.
 எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம்.

‘ஹனிமூன் சிஸ்டைடிஸ்’ என்பது என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் பல சந்தேகங்களுக்கு விடை கொடுக்கும் விதத்தில் கட்டுரை அமைந்திருந்தது. சி.டி. ஸ்கேன் என்ற பெயரை மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு இதன் விரிவாக்கம் என்ன, இக்கருவி எப்போது யாரால் எங்கு கண்டுபிடிக்கப்பட்டு எப்போது நடைமுறைக்கு வந்தது, இதன் சிறப்புகள் என்னென்ன என்பதையும் இக்கருவி ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதையும் மிகத்தெளிவாக ‘அகராதி’ பக்கத்தில் அறிந்துகொள்ள முடிந்தது.

நாட்டுக்கோழியா, பிராய்லர் கோழியா? எந்த கோழிக் கறியை நம்பி, விரும்பிச் சாப்பிட வேண்டும் என்பதை ‘கவனம்’ கட்டுரை மிகத் தெளிவாக, விரிவாகச் சொல்லியிருந்தது. பிராய்லர் கோழிகள் வளர்ப்புமுறை, வளரும் வேகம், போடப்படும் ஊசிகள், அதில் உள்ள கொழுப்பு ஆகியவற்றைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
 வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.

‘அறிவியல் ரீதியாக சிகரெட்டை நிறுத்துவது’ கட்டுரை சிகரெட் பிடிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. குறைந்தது 6 மாத காலம் தாக்குப்பிடித்து விட்டால், பிறகு
சிகரெட் பக்கமே போக மாட்டோம்!
 ஆர்.செல்வமணி, திருநெல்வேலி.

‘கெட்டுப்போன உணவுகளால் ஃபுட் பாய்ஸன் ஏற்படும் என்று இல்லை. சுகாதாரமற்ற தண்ணீரால், சாப்பிட்ட பிறகு போடும் பீடாவால் கூட ஏற்படலாம்’ என இரைப்பை குடலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் கணேஷ் கூறிய கருத்து முற்றிலும் உண்மைதான். நாம் எந்த அளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என யோசிக்க வைத்த குங்குமம் டாக்டருக்கு நன்றி!
 மஞ்சுளா ரமேஷ், திருச்சி.

40 வயதுக்கு மேல் வரும் பல்வேறு நோய்களில்  முக்கி யமாக இதய நோய்க்கான மூன்று வகை அறிகுறிகளையும் அதற்கான தடுப்பு முறைகளையும் எடுத்துக்கூறிய டாக்டர் மு.அருணாச்சலத்துக்கு நன்றிகள்!
 நரசிம்மன், பெங்களூரு.