ஏன் இந்தக் கசப்பு?



அறிவோம்

காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும்போது வாயில் கசப்பு மற்றும் இனிப்புச்சுவை மாறிமாறி தோன்றுவதையும் சில நேரங்களில் உப்பு, புளிப்பு போன்ற சுவைகளும் உண்டாவதையும் அனேகமாக நாம் உணர்ந்திருப்போம். இதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றிப் பேசுகிறார் மூத்த மருத்துவ அதிகாரி தேவராஜன்.

ஒருவருக்கு ஜுரத்தின் தன்மை அளவுக்கு அதிகமாகும்போது, வாயில் கசப்பு, இனிப்பு போன்ற சுவைகள் உண்டாகும். பல நேரங்களில் இந்த இரண்டு சுவைகளோடு சேர்த்து புளிப்பு, உப்பு ஆகிய சுவைகளும்  ஏற்படும்.

வயிற்றில் அமிலம் உற்பத்தியாகி உணவுக்குழாய் வழியாக மேலேறி வரும். இதை Gastro esophageal reflux disease எனக் குறிப்பிடுவார்கள். அது போன்ற தருணங்களில்வாயின் சுவை தன்மை மாறும். சளி மற்றும் அலர்ஜி காரணமாகவும் நமது வாயின் சுவை அடிக்கடி மாறும். அதாவது, உப்பு,கசப்பு, புளிப்பு முதலிய சுவைகள் உருவாகும்.

ஒவ்வொரு முறையும் ஜுரம் அதிகமாகும்போது, நாக்கின் நுனிப்பகுதியில் இனிப்புச்சுவையும், அதனுடைய நடுப்பகுதியில் உப்புச்சுவையும், பக்கவாட்டுப்பகுதியில் புளிப்புச் சுவையும், பின்புறத்தில் கசப்புத்தன்மையும் ஏற்படும்.

ஜுரத்தால் பாதிக்கப்பட்டு உள்ள ஒருவர் ஆஸ்பிரின் போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது, சுவையை மாற்றிக் காட்டும். கல்லீரல் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவை தெரியாது. குறிப்பாக, புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் மருந்துகள் சுவை அறியும் தன்மையைக் கெடுக்கும். மூளையில் இருந்து வரும் ஏழாவது நரம்பு பாதிப்பு அடைந்தால் நாக்கில் சுவை தெரியாது.

நோயின் தன்மை தீவிரம் அடையும்போது, வாயில் உண்டாகும் கசப்பு, இனிப்பு தன்மைகளைத் தடுப்பதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. அப்போது நோயால் பாதிக்கப்பட் டவர் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

முக்கியமாக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் நேரடியாக மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. வாயை நன்றாக கொப்புளிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக அடிக்கடிதண்ணீர் குடிக்க வேண்டும். பல் மற்றும் ஈறு சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பெப்பர் மின்ட், வைட்டமின் சி மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்ளலாம். லவங்கம் சாப்பிடலாம்.

வைரஸ் ஏ, பி கிருமித் தொற்றுகளும் மற்றும் மஞ்சள் காமாலையும் சுவை அறியும் தன்மையைக் கெடுக்கும். அதுமட்டுமில்லாமல் பசியை யும் தடுக்கும். இதற்கு குளுகோஸ் நிறைய சாப் பிட வேண்டும். சூடோமோனாஸ் (Pseudo monas) என்ற பூச்சி வாயைத் தாக்கினால் சுவை மாறும். வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் சுவை மாறும். பித்தளை, வெண்கலம் பாத்திரங்களை தண்ணீர் அருந்த பயன்படுத்தக் கூடாது.

விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்