இன்று புதிதாக பிறந்தோம்!



மது... மயக்கம் என்ன?

முட்டாள்தனங்களுக்கான அளவில்லா பொறுமையை மது நமக்கு அளிக்கிறது.
_ ஷம்மி டேவிஸ் ஜூனியர்
(அமெரிக்க இசை நடனக் கலைஞர்/நடிகர்)

அட்டகாசம்... வெற்றிகரமாக 48 மணி நேரங்களைக் கடந்தாயிற்று, மது என்ற மாயையின் தாக்கம் இல்லாமலே! இப்போது பசி உணர்வு தலை தூக்கி யிருக்கும். வாந்தி உணர்வு நீங்கியிருக்கும். இதுவே நல்ல விஷயம்தான்... அப்படியானால் சாப்பிடத் தொடங்கலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம். ஒட்டுமொத்தமாக நிறைய நிறைய உள்ளே தள்ள வேண்டாம். தண்ணீருக்கும் கொஞ்சம் இடம் இருக்கட்டும். கடந்த நாட்களைப் போலவே குறிப்பிட்ட இடைவெளிகளில் நீர் பருகுவதை இன்றும் தொடருங்கள்.

இன்று தலை கூட கனமில்லாமல், எளிதாக உணர்வது போலவே இருக்கும். உடலில் உள்ள ஆல்கஹால் விஷங்கள் கணிசமான அளவு குறைந்திருப்பதே இதற்குக் காரணம். சரி... சூடாக ஒரு கப் ஃபில்டர் காபி அல்லது தேநீர் அருந்தி, புதிய உற்சாகம் பெறலாம்.  நேரம் கடக்க கடக்க, நம்முடைய பழைய ஆற்றல் திரும்பக் கிடைத்தாற்போல உணர்வோம்.

அது உண்மைதான்! இனி மற்றவர்களுடன் வழக்கம் போல உரையாடலாம். ஒருசில கிலோ மீட்டர்களை நடைப்பயிற்சி செய்து கடக்கலாம். விரும்பினால், மாலை வேளையில் மறுபடியும் ஒரு வாக் போகலாம். இவையெல்லாம் புத்துணர்வை அதிகரிக்கச் செய்யும் விஷயங்கள்.

இந்த நொடி முதல் புதிதாகப் பிறந்ததைப் போல உணர்வோம்!நம்முடைய நம்பிக்கை அளவு, முன் எப்போதும் இல்லாத அளவு நன்கு அதிகரித்திருப்பதையும் இப்போது உணர முடியும். மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். நாம் சாதித்து விட்டோமே!ஆனால், போர் இன்னும் ஓயவில்லை!அடுத்த அபாய கட்டம் இப்போதுதான் தொடங்குகிறது. மது மன அரக்கன் தன் சுய ரூபத்தையோ, ஒட்டுமொத்த வலிமையையோ காட்டத் துடிக்கும். நமது நம்பிக்கையைக் குலைக்க என்னென்னவோ செய்யத் தூண்டும்.

மனதைக் குழப்பும் முயற்சியில் ஏராளமான எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருக்கும். ‘‘27 வயதுதானே ஆகிறது... குடியை நிறுத்த அதற்குள் என்ன அவசரம்?’’
‘‘என்னால்தான் குடியை நிறுத்த முடிகிறதே... அப்புறம் என்ன பிரச்னை? ஒருமுறை குடித்துப் பார்க்கலாம்... இதிலிருந்து எப்படி வெளிவருவது என்றுதான் எனக்குத் தெரியுமே!’’
இப்படியெல்லாம், நம் தன்னம்பிக்கையையே நமக்கு எதிராகப் பயன்படுத்தும் அந்த மது மனம். நாம் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனி எந்தச் சூழலிலும் அதன் தூண்டுதலுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்ற உறுதியை என்றும் தொடர வேண்டும்.

அவ்வப்போது மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள்...
‘‘இனி எப்போதும் குடிக்க வேண்டியதில்லை...’’
‘‘இன்னொரு கட்டிங் என்பது எப்போதும் இல்லை...’’
‘‘நான் வெற்றியடைந்து விட்டேன். மீண்டும் அடிமையாகப் போவது இல்லை...’’

‘‘எனக்கு நிறையப் பொறுப்புகள் உள்ளன. என் வாழ்க்கை மிக முக்கியம்!’’
‘‘குடும்பத்தோடு செலவிடும் தருணங்களே எனக்கு முக்கியம்...’’
இப்படி... பாசிட்டிவ்வான எண்ணங்களை மனதில் உரம் போட்டு வளர்த்துக்கொண்டே இருப்பது, இந்தக் காலகட்டத்தில் மிக அவசியம்.
72 மணி நேரங்களை கடந்த பிறகு, நம்மை நாமே தாராளமாகப் பாராட்டிக் கொள்ளலாம். இனி வழக்கமான வாழ்வை மகிழ்ச்சியாக வாழத் தொடங்குவோம்....
 நிம்மதியாகத் தூங்குவோம்... மது மட்டும் இல்லாமல்!

ஆல்கஹால் அரக்கனிடமிருந்து விடுதலை பெற்ற ஆக்க சக்தி!டன் கணக்கில் பாராட்டுகள் உரித்தாகட்டும்!இன்னும் ஒரு விஷயம்... நாம் மது மனதை வெற்றி கொண்டுள்ளோமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக அழித்துவிடவில்லை. அதனால் அது எப்போதும் ஏக்கத்துடன் காத்துக் கொண்டு தான் இருக்கும். ஒரே ஒரு பானம் கொண்டு, உங்களை வீழ்த்திவிடத் துடிக்கும். அதனால், இந்தத் தற்காலிக வெற்றியை நிரந்தர வெற்றியாக மாற்றிக்கொள்வது என்றும் நம்கையில்தான் உள்ளது.

சந்தோஷம், கொண்டாட்டம், துக்கம், விரக்தி, சோர்வு என ஏதேதோ சூழல்கள் நம் வாழ்க்கையில் மாறிமாறி நிகழும். அச்சூழல்களை சுழல்களாக மாற்றி, நம்மை தன் பிடிக்குள் மீண்டும் கொண்டுவர மது மனம் எப்போதும் விழிப்புடன் இருக்கும். நம் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும். நம் தன்னம்பிக்கையையே அதன் ஆயுதமாகவும் பயன்படுத்தும். அதனால் என்றும் இருக்கட்டும் அதிக கவனம்.

இப்படியாக ஒரு ஆண்டை வெற்றிகரமாகக் கடந்துவிட்டால், நாம் வெற்றி விழாவே கொண்டாடலாம்... மது இல்லாமல்தான்! இப்போது நிச்சயம் மது மனதின் வீரியம் குறைந்திருக்கும். நமது பலம் அதிகமாகி இருக்கும்.

ஓராண்டு, ஈராண்டு, ஐந்தாண்டு, பத்தாண்டு... ஏன் 20 ஆண்டுகளைக்கூட நாம் வெற்றிகரமாகக் கடக்க முடியும், ‘ஒரே ஒரு லார்ஜ் மட்டும் / ஒரே ஒரு ஸ்மால் மட்டும்’ என்ற எண்ணத்தை ஒரு போதும் அனுமதிக்காமல் இருந்தால்! ஒருவேளை மீண்டும் மதுமனதின் வலைக்குள் விழுந்துவிட்டோலோ, மீண்டு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. இதை நாம் ஓர் எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் அறிந்த வரையில், மதுவை விரட்டிய பலரும் ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ குடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ‘மதுவை நாம் நினைத்தால் நிறுத்தி விடலாம்’ என்ற அதீத தன்னம்பிக்கையே இதற்குக் காரணமாகி விடுகிறது. அதனால், இரண்டாவது முறை நிறுத்துவது அவ்வளவு எளிதல்ல என்ற புரிதலோடு செயல்பட வேண்டியது மிக அவசியம்.

வாழ்க்கையில் எத்தனையோ பிரமாதமான விஷயங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. அவை அனைத்துமே மது தரும் போதையைக் காட்டிலும் மிக அதிக குதூகலத்தை அளிக்கக்கூடியவை. மதுவுக்குள் மீண்டும் விழுந்தால், வாழ்வின் ஒட்டுமொத்த மகிழ்வும் தொலைந்து போகும். இனியும் நாம் தோற்க வேண்டியதில்லை.

நிறுத்தி, தொடங்கி, நிறுத்தி, தொடங்கி, நிறுத்தி, தொடங்கி... இஷ்டம் போல விளையாட, வாழ்க்கை என்பது சாதாரண விளையாட்டல்ல. ஆகவே...நம் வாழ்க்கை நம் உரிமை. இதை அர்த்தம் உள்ளதாகவே என்றும் ஆக்கிக் கொள்வோம்.சமீபத்தில்தான் குடிக்கத் தொடங்கியவர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இந்த வழிமுறைகள் எளிதானதாகவே இருக்கும்.

 நல்லது. அதனால் உடனே முயன்று பார்த்தால், வெற்றி உறுதி!இதே வழிமுறைகளைப் பயன்படுத்தி சிகரெட், சூதாட்ட ஆர்வம் போன்றவற்றில் இருந்தும் மீள முடியும். இது நமக்கு இன்னொரு போனஸ்!கி.பி. 1100 காலகட்டத்தில் இத்தாலியில் மருத்துவக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட  வடிகட்டும் (Distillation) முறையே, பிற்காலத்தில் ஒயின் பானத்தை செறிவாகவும் தெளிவாகவும் தயாரிக்க உதவியது.

அதிர்ச்சி டேட்டா

பத்தாண்டுகளுக்கு முன் வரை, குடிப்பவர்களில் 20 சதவிகிதத்தினர் மட்டுமே, குடிநோயாளிகளாக மாறினர். சமீபகாலமாக இந்த அளவு அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

(தகவல்களைப் பருகுவோம்!)

டாக்டர் ஷாம்