சுளுக்கைத் தடுக்க உதவுது சூரிய ஒளி!



சுளுக்கு

வேகமாக படிக்கட்டில் இறங்கும் போதோ, பஸ்ஸிலிருந்து இறங்கும் போதோ கால் கொஞ்சம் பிசகினாலும் சுளுக்கிக்கொள்ளும். சின்ன தடுமாற்றம்தான். ஆனால், வலி தாங்க முடியாது. காலில் மட்டும் அல்ல... கைகள், முதுகு என உடலில் எங்கு வேண்டுமானாலும் சுளுக்கு வரலாம். ‘முறையான உடற்பயிற்சியால் சுளுக்கு வராமல் தடுக்கலாம்’ என்கிற நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் எம்.பாலமுருகன், மேலும் சுளுக்கு பற்றி சுருக்கமாகச் சொல்கிறார்.

நமது உடலில் தசைநாண், எலும்பு, நரம்பு ஆகிய உடல் உறுப்புகளில் அடிக்கடி சுளுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிக வேலைப்பளு காரணமாக சுளுக்கு ஏற்படும். தசைநாண் பகுதியில் சுளுக்கு ஏற்படுவதற்கு, போதுமான வலிமை இல்லாமல், பலவீனமாக இருப்பது ஒரு காரணம். உடற்பயிற்சி இன்மை, சூரிய ஒளி உடலில் படாமல் இருத்தல் ஆகியவற்றால் உடல் வலுவற்று போகிறது.

மனித உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் எலும்புகள் மிகமிக முக்கியம். கால்சியம் போன்ற சத்துகள் குறைபாடு, வைட்டமின் டி குறைவாக இருப்பது, முன்பே கூறியது போன்று உடலில் சூரியக் கதிர்கள் படுவதற்கான வழி இல்லாமல் இருப்பது போன்றவையே எலும்பில் சுளுக்கு உண்டாகுவதற்கான முக்கிய காரணங்கள்.

நமது உடலில் சுளுக்கு காரணமாக பாதிப்படையும் மற்றுமொரு முக்கியமான உறுப்பாக நரம்புகள் அமைந்துள்ளன. சவ்வுப்பகுதி விலகி நரம்புகளின் மீது அதிக அழுத்தம் உண்டாகும்போது, சுளுக்கு ஏற்படுகிறது.

பொதுவாக, தசைநாண், எலும்பு, நரம்பு என நம் உடலில் எந்தப் பகுதியில் சுளுக்கு ஏற்பட்டாலும் சிகிச்சை மேற்கொள்வது, மருத்துவரிடம் சென்று காண்பிப்பதுதான் நம்மில் பலரின் வழக்கமாக இருக்கிறது. ‘வருமுன் காத்தல்’ என்ற நம் முன்னோர் அறிவுரையைப் பின்பற்றி நடப்பது சுளுக்கு பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த அணுகுமுறை.

பள்ளியில் நாம் அனைவரும் கற்றுக்கொண்ட கைகளைச் சுழற்றல், கால்களை முன்னும்பின்னுமாக ஆட்டுதல், தண்டால் எடுத்தல் போன்ற சிறிய பயிற்சிகள், உடற்பயிற்சிகளை தினமும் அனைத்து வயதினரும் தவறாமல் செய்து வர வேண்டும். தினமும் 15 நிமிடங்களாவது சூரிய ஒளி உடலில் படும்படி நிற்க வேண்டும். இது நம் உடலுக்கு வலு சேர்க்கும். அதனால் தேவையற்ற சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் சுளுக்கு ஏற்படுவது குறையும்.

இதையும் மீறி, ஒருவேளை சுளுக்கு ஏற்பட்டால், சுளுக்கால் அவதிப்படும் நபருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். அதாவது, சுளுக்கு ஏற்பட்ட உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். முடிந்த வரை அவற்றை அசையாமல் வைத்திருக்க வேண்டும். சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் ஐஸ்கட்டிகளை கொண்டு மென்மையாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்,

75 சதவிகிதம் சுளுக்கினைக் குணப்படுத்திவிட முடியும். அப்படியும் சுளுக்கின் தீவிரம் குறையவில்லையென்றால், மருத்துவர் தரும் வலி நிவாரணி மருந்துகளை சாப்பிடலாம். வலி குறையாத பட்சத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பிறகு, சுளுக்கின் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறலாம்.

கேப்ஸ்யூல்


காபி, டீயுடன் மாத்திரை போடக்கூடாதா?

காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் ஆர்.நரேந்திரன்...காபி மற்றும் டீயுடன் மாத்திரை சாப்பிடும் போது அதிலிருக்கும் ரசாயனம் மாத்திரையிலிருக்கும் ரசாயனத்துடன் கலந்து விடும். அப்படிக் கலக்கும் போது ஏற்படும் விளைவுகளால் மாத்திரையின் வீரியம் குறையவோ, அதன் பலன் முழுமையாக அழிந்துவிடவோ வாய்ப்புகள் அதிகம். அதனால் நாம் மாத்திரை எடுத்துக்கொள்வதன் பலனை அடைய முடியாமல் போகும்.

தண்ணீரில் மாத்திரை எடுக்கும் போது எந்த வித மாறுதல்களும் ஏற்படுவதில்லை. அதனால் தண்ணீரில் எடுப்பதே எப்போதும் நல்லது. பொதுவாக சளித்தொல்லை மற்றும் ஜீரணத்துக்கு நல்லது போன்ற காரணங்களால் வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகப்படுத்தி மாத்திரை போடுவார்கள். நல்லதுதான். பச்சைத் தண்ணீரிலும் போடலாம். தவறொன்றுமில்லை!

விஜயகுமார் 
படம்: ஏ.டி.தமிழ்வாணன்