மாதவிலக்கு முன் அறிகுறிகள் (PMS)



மாதத்தின் சில நாட்கள் காரணமில்லாத எரிச்சலும் கோபமும் சோகமும் தலைதூக்கும் சில பெண்களுக்கு. இன்னும் சிலருக்கு உடல்ரீதியான அசவுகரியங்கள் இருக்கும். ‘ஒண்ணுமில்லாத விஷயத்தைப் பெரிசுபடுத்தாதே...’ என குடும்பத்தாரால் அலட்சியப் படுத்தப்படுகிற, அடக்கப்படுகிற பெண்களே அதிகம்.

‘‘மற்றவர்களுக்கு ஒன்றுமில்லாத அந்த விஷயம், பெண்களைத் தற்கொலை வரை தூண்டுகிற அளவுக்குப் பெரிய விஷயம்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (PMS) என்கிற அந்தப் பிரச்னை பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.

‘‘85 சதவிகிதப் பெண்கள் மாதவிலக்குக்கு முன்பான உடல், மன உபாதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களில் 2 முதல் 10 சதவிகிதத்தினருக்கு தீவிரமான பாதிப்புகள் இருக்கின்றன. பி.எம்.எஸ். பாதிப்புக்கான காரணம் இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. ஆனாலும், இதன் பின்னணியில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் உள்ளிட்ட பெண் உடல் ஹார்மோன் சுரப்புகளில் உண்டாகிற ஏற்ற, இறக்கங்களின் விளைவு முக்கியமாக இருக்கிறது.

அறிகுறிகள்...

உடல் வீக்கம், மார்பகங்கள் மென்மையான உணர்வு, தலைவலி, முதுகு வலி, களைப்பு, அழுகை, விரக்தி, மன அழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல் போன்றவற்றுடன்  தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமின்மையும் எரிச்சலும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்தப் பிரச்னையை உறுதிசெய்ய தனிப்பட்ட பரிசோதனை ஏதும் இல்லை. குழந்தை பெறுகிற வயதில் இருக்கும் பெண்கள் சிலருக்கு தைராய்டு பிரச்னை காரணமாகவும் இவற்றில் சில அறிகுறிகள் தென்படும் என்பதால், தைராய்டு சோதனையை செய்ய வேண்டியிருக்கும். அடுத்தடுத்து 3 மாதங்களுக்கு இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் அவை மாதத்தின் எந்த நாட்களில் வருகின்றன, எத்தனை நாட்கள் நீடிக்கின்றன எனக் கவனித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

மாதவிலக்குக்கு 2 வாரங்கள் முன்பாக இந்த அறிகுறிகள் இருந்தாலோ...அந்த அறிகுறிகள் உங்கள் இயல்பு வாழ்க்கையை பாதித்தாலோ...இந்த அறிகுறிகள் எவையும் தைராய்டு, ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் போன்றவற்றின் அறிகுறிகள் அல்ல என உங்கள் மருத்துவர் உறுதிப்படுத்தியிருந்தாலோ... உங்களுக்கு ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் இருப்பது ஓரளவு உறுதி.

என்ன தீர்வு?

ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்ற தன்மைதான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை சரி செய்கிற சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாட்களில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை
சாப்பிட வேண்டியதிருக்கும்.

85 சதவிகிதப் பெண்கள் மாதவிலக்குக்கு முன்பான உடல், மன உபாதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களில் 2 முதல் 10 சதவிகிதத்தினருக்கு தீவிரமானபாதிப்புகள் இருக்கின்றன...

வி.லஷ்மி