டியர் டாக்டர்



* அழகு சாதனங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை ‘அழகிய ஆபத்தில்’ தெளிவுற கூறிய ‘குங்குமம் டாக்டர்’ -க்கு நன்றிகள் பல! இதன் மூலம் நோய் வருமுன் காப்பது மிக மிக நல்ல விஷயம் என்பது தெரிய வந்தது. தொடரட்டும்
உங்கள் சேவைகள்.
- எஸ். ஜெகன், சாந்திநகர்.

* ‘நொச்சி வளர்த்தால் நூறு நன்மை’ கட்டுரையில் நொச்சியின் மருத்துவ குணங்களை டாக்டர் திருநாராயணன் தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறி, பலரை நொச்சிச் செடியின் மீது நாட்டம் கொள்ள வைத்திருக்கிறார். இனி எல்லோரின் வீட்டிலும் நொச்சிக்கு ஒரு இடம் உண்டு என்பது நிச்சயம்.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*  நோயாளிகள் விழிப்புணர்வை வெளிக்காட்டிய அட்டைப்படம் அருமை. ஒரு சில டாக்டர்களின் இன்றைய நிலையை தெளிவாக அட்டைப்படமே காட்டிவிட்டது. ‘குங்குமம் டாக்டர் டீமுக்கும், தீமுக்கும் ஒரு பலே!

* ‘நோயாளிகள் விழிப்புணர்வு ஸ்பெஷலாக’ ஒரு கவர் ஸ்டோரியையே நான்கு பகுதிகளாக பிரித்து கொடுத்து, நோயாளிகளுக்கு ஏற்படும் மருத்துவ சிக்கல், மருத்துவமனைகளின் ஏமாற்று வேலை, எந்த மருத்துவத்தை நம்பி நாடுவது என்ற தயக்கம் இப்படி ஒவ்வொன்றையும் அலசி, ஆராய்ந்து நோயாளிகளுக்கு தெம்பூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.சீசனுக்கு ஏற்ற உணவே மருந்து விஷயத்தில் இம்முறை ‘கரிசலாங்கண்ணி’ பற்றி வியப்பூட்டும் பல விஷயங்களை புட்டு புட்டு ‘பெட்டி’ச் செய்திகளில் தந்திருப்பது நல்ல ஆரோக்கியம்.
- சிம்மவாஹினி, வியாசர்நகர்.

* சிறுமூளையின் முக்கியத்துவத்தைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். அதுபற்றிய தெளிவான விளக்கத்தைத் தந்திருந்தது நரம்புகள் தொடர். டாக்டர் தன்னுடைய நேரடி அனுபவம் மூலமாக தெளிவுப்படுத்தியது இன்னும் எளிதாக புரிந்துகொள்ள உதவியது.  
- சி.கோபாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.

* கண்களின் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைத்து வருகிறது ‘கேமரா 576 மெகாபிக்ஸல்’ தொடர். கண்களின்
பிரச்னைகளையும், அவற்றைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய பல வழிமுறைகளையும் அறிந்துகொள்கிறோம். மிகவும் நுட்பமான மருத்துவ விஷயங்களை என்னைப் போன்ற சாதாரண வாசர்களுக்கு எளிமையாக புரிய வைக்கும் டாக்டர் மருத்துவர் அகிலாண்ட பாரதிக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்!

* வயது வந்தபின் கண்களைப் பாதுகாப்பதைவிட, குழந்தைப் பருவத்திலேயே கண் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தேன்.
- ஆர்.ராஜசேகர், மடுவின்கரை.