கத்தியின்றி... ரத்தமின்றி...
தொழில்நுட்பம்
மருத்துவ சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு முன்னேற்றங்களில் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முக்கியமானது... நோய் கண்டறிதலுக்கும் சிகிச்சை அளிப்பதற்கும் லேப்ராஸ்கோப்பி பயன்படும் விதம் அபாரமானது... முக்கியமாக, அறுவை சிகிச்சைகளில் கத்தியின்றி ரத்தமின்றி எளிதாக நம் நோக்கத்தை நிறைவேற்ற உதவும் தொழில்நுட்பம் என்பது இதன் சிறப்பம்சங்களில் தலையாயது... மருத்துவ உலகை ஆண்டு கொண்டிருக்கும் இந்த லேப்ராஸ்கோப்பி பற்றி முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்..
லேப்ராஸ்கோப்பி(Laparoscopy) என்பது குறைந்தபட்ச ஊடுருவு அறுவைசிகிச்சை சாவித்துளை அறுவைசிகிச்சை கொண்ட ஒரு அதிநவீன அறுவைசிகிச்சை தொழில்நுட்பம்.
ஜெர்மனியின் டாக்டர் ஜார்ஸ் கெல்லிங் அவர்களால் 1901-ல் கண்டுபிடிக்கப்பட்டது லேப்ராஸ்கோப்பி. இது கேமராவின் உதவிகொண்டு, கூரான கருவியினால் 0.5-1.5 செ.மீ. அளவுள்ள சிறிய வெட்டுகளைப் பயன்படுத்தி, வயிற்றில் அல்லது இடுப்பெலும்புகட்டில் செய்யப்படும் ஒரு அறுவைசிகிச்சையாகும். வயிற்றில் ஒரு சில வெட்டுகளைக் (அறுவை) கொண்டு நோய் கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க லேப்ராஸ்கோப்பி உதவுகிறது.
ஆரம்பத்தில் மருத்துவத்துறை சார்ந்தவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகே, லேப்ராஸ்கோப்பி முறை பயன்பாட்டுக்கு வந்தது.
வழக்கமாக ஒரு வீடியோ கேமராவுடன் இணைக்கப்படும் Telescopic rod lens system மற்றும் Digital laparoscope என லேப்ராஸ்கோப்பியில் இரண்டு வகைகள் உண்டு.
லேப்ராஸ்கோப்பி என்ற பெயரை வைத்த பெருமை ஸ்வீடன் நாட்டு அறுவைசிகிச்சை மருத்துவர் ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஜக்கோபஸ் அவர்களையே சாரும்.
அவருடைய வழிகாட்டிகளின் ஊக்குவிப்பு மூலமும் மற்றும் மருத்துவ தொழில்துறையின் ஆதரவு மூலமும், அவர் 1970-களின் பின்பகுதிகளிலும் மற்றும் 1980 களின் முன்பகுதிகளிலும் பல கடுமையான உழைப்பிற்குப் பிறகு அவர் கடைசியாக அறுவைசிகிச்சைக்குப் போதுமான ஒரு வீடியோ சிஸ்டத்தை உருவாக்கினார்.
ஜெர்மன் நாட்டு இரைப்பைக் குடலியல் மருத்துவரான ஹெயின்ஸ் கல்க், 1929-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட லென்ஸ்கள் மற்றும் முதல் முன்னோக்கி பார்க்கக்கூடிய ஸ்கோப்பை கொண்டு ஓர் உயரிய லேப்ராஸ்கோப்பியை உருவாக்கினார். இது அவருக்கு நவீன லேப்ராஸ்கோப்பியின் தந்தை என்ற பெயரை ஈட்டித் தந்தது.
* 1971-ம் ஆண்டு முடிவில் டாக்டர் கார்ல் லெவின்சன் போன்ற அறுவைசிகிச்சை மருத்துவர்களால் அமெரிக்காவில் முதல் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை செய்யப்பட்டது.
1980-களின் முற்பகுதியிலிருந்தும், மத்திய பகுதி வரையில் வீடியோஸ்கோப்பி படங்கள் எண்டோஸ்கோப்பிக்கும் மற்றும் கடைசியாக லேப்ராஸ்கோப்பிக்கும் பயன்படுத்தப்பட்டன. இந்த தொழில்நுட்பம் இப்போது பலரால் லேப்ராஸ்கோப்பிக்கு பயன்படுத்தப்படுகிறது.
1989ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்-ன் வருடாந்திர திட்டத்தின்போது கண்காட்சி அரங்கில் லேப்ராஸ்கோப்பி பித்தப்பை நீக்க சிகிச்சையானது பொது அறுவைசிகிச்சை உலகிற்கு காட்சிப்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற முன்னோடிகள் இதனை நிகழ்த்த ஆரம்பித்தனர்.
மிகச்சிறிய துளையிட்டு செய்யப்படும் அறுவைசிகிச்சைமுறை ஏற்படுத்திய பேரார்வம் மற்றும் உற்சாகத்தின் பேரலையில் அறுவைசிகிச்சை நிபுணர்களது சமூகமானது முழுமையாக அடித்து செல்லப்பட்டது. புதிய பயன்பாடுகள், கருவிகளை பயன்படுத்துதல் மற்றும் உத்திகள் பற்றிய தகவலுக்கான ஆர்வமும், தாகமும் மிகப்பெரிதாக வளர்ந்தது. இதனால் 1990-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் மிகப்பொதுவான விஷயமாக மாறிப்போனது.
சிக்கலான லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சைக்கான ஒரே மிகவும் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றம் எதுவென்றால், அது வீடியோ லேப்ராஸ்கோப்பி என்று சொல்லலாம். கூரையிலிருந்து கேமராவைத் தொங்கவிட்டு, தனது மானிட்டரில் ஒரு குறைந்த ரீசொல்யூஷன் உள்ள படத்தை ஓரக்கண்ணால் பார்த்து தனது முயற்சியைத் தொடங்கினார். இதை பின்பு 2005-ம் ஆண்டில் டாக்டர் கேம்ரன் நெஸாட் நகைச்சுவையுடன் விவரித்தார்.
உலகெங்கிலும் பொது அறுவைசிகிச்சை நிபுணர்களிடமிருந்து லேப்ராஸ்கோப்பி அதிகரித்த தேவையை எதிர்கொள்வதற்காக இந்த பயிற்சி அமர்வுகள் பரவலாக நடத்தப்பட்டன. திறந்த நிலையிலிருந்து லேப்ராஸ்கோப்பிக் முறையில் பித்தப்பை அறுவைசிகிச்சைக்கு மாறுவதற்கு உரிய காரணம் அல்லது அறிவியல் ரீதியிலான சான்றிதழ் இல்லாத நிலையிலும் இந்த மாற்றமானது மிக வேகமாக நிகழ்ந்தது.
சில அறுவைசிகிச்சை நிபுணர்கள் லேப்ராஸ்கோப்பி முறையை தடை செய்ய வேண்டும் என்று கோரினர். தனிச்சிறப்பு வாய்ந்த மையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு, சரியானதுதான் என்று லேப்ராஸ்கோப்பி முறை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது வாதமாக இருந்தது.
லேப்ராஸ்கோப்பிக்கு தடை கேட்ட கோரிக்கைக்கு மாறாக, பல பகுதிகளில் மருத்துவர்கள் லேப்ராஸ்கோப்பி பித்தப்பை நீக்க சிகிச்சையை செய்யத் தொடங்கினர். மருத்துவ உலகில் கிடைத்த அபார வரவேற்பால் பெரிய பரபரப்பை உருவாக்கியது லேப்ராஸ்கோப்பி. ‘இது மாற்றத்துக்கான நேரம்... இந்த சிகிச்சையை இனி யாரும் தடுக்க முடியாது’ என்று இதுபற்றி பல மருத்துவர்கள் குறிப்பிட்டார்கள்.
* மருத்துவ உலகில் லேப்ராஸ்கோப்பி ஏற்படுத்திய உற்சாகமும், பரபரப்பும் பரவலாவதற்கு ஊடகங்களும் உதவின. இதுபற்றிய தகவல் கிடைக்கப்பெற்ற நோயாளிகள், லேப்ராஸ்கோப்பி சிகிச்சைமுறைதான் வேண்டுமென்று கோரிக்கை வைக்கத் தொடங்கினர்.
லேப்ராஸ்கோப்பி சிகிச்சைமுறை வருவதற்கு முன்பு, நோயாளியின் வயிற்றில் அறுவைசிகிச்சை செய்கிற மருத்துவ நிபுணர், 6½ அங்குல நீளத்திற்கு வெட்டி கீற வேண்டியிருந்தது.
லேபராஸ்கோப்பியின் பிரபலத்தால் The journal of the society of laparoscopic surgeons என்ற இதழானது, அச்சிடப்பட்டு மிகப்பரவலாக வினியோகிக்கப்படும் மருத்துவ அறிவியல் இதழாக உருவெடுத்தது.
அறுவைசிகிச்சையில் என்ன செய்கிறோம் என்று பார்ப்பதற்கும், சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டிய இடத்தினை துல்லியமாக அடைவதற்கும் லேப்ராஸ்கோப்பி செய்த உதவியானது மருத்துவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.
வழக்கமான பாரம்பரிய அறுவைசிகிச்சையோடு ஒப்பிடுகையில் லேப்ராஸ்கோப்பி உத்தியானது பல்வேறு ஆதாயங்களைக் கொண்டிருக்கிறது. ஏனெனில், இது மிகக்குறைவான அளவே காயத்தையே உண்டாக்குகிறது. நோயாளிகளுக்கு மிகச்சிறிய அளவிலேயே தழும்புகள் இருக்கும். மருத்துவமனையிலிருந்து விரைவாக டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்லலாம். கூடிய விரைவிலேயே இயல்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணர் பல சிறிய அளவிலான கீறல்களை செய்கிறார். வழக்கமாக ஒவ்வொரு கீறல் வெட்டும் அறை அங்குல நீளத்திற்கு அதிகமானதாக இருக்கும். ஆகவேதான் இந்த சிகிச்சைமுறையானது சில நேரங்களில் Keyhole surgery என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு துளை வழியாகவும் ஒரு குழாயை அவர்கள் உட்செலுத்துகின்றனர். கேமரா மற்றும் அறுவைசிகிச்சைக்குரிய கருவிகள் இவற்றின் வழியாக உள்ளே செல்கின்றன. அதன் பிறகு, அறுவைசிகிச்சை நிபுணர், அறுவைசிகிச்சையை செய்கிறார்.
வயிற்று வலி முதல் கருத்தரித்தல் வரை பல்வேறு பிரச்னைகளுக்கு இன்று லேப்ராஸ்கோப்பி அளித்து வரும் தீர்வானது அளப்பரியது என்று கூறலாம்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும் மிகச்சிறிய அளவில் லேப்ராஸ்கோப்பி கருவிகளை தயாரிப்பதற்கும் மற்றும் மிக உயர்ந்த தரத்தில் இமேஜிங் செய்வதற்கும் தற்போது வழிவகுத்திருக்கிறது. இதன் மூலம் மிகக்குறைவான ரத்தக்கசிவோடு மிகத் துல்லியமாக உடலுறுப்புகளை வெட்டியகற்றும் பணியை லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணர்கள் மேற்கொள்வது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான லேப்ராஸ்கோப்பி செயல்முறைகளில் இருந்த பிரதான சிரமங்கள், இந்த சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களினால் இன்னும் வெற்றிகரமாக அகற்றப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி!
தொகுப்பு: யாழ் ஸ்ரீதேவி
|