நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க...
Winter Wellness
குளிர்காலத்தில் பச்சிளம் குழந்தை தொடங்கி முதியவர் வரை அனைவரும் நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமல் அல்லல்படுவர். சளி, இருமல், காய்ச்சல் என்பதெல்லாம் சாதாரணமாக வந்துபோகும். இக்குறையைத் தீர்க்கும் வகையில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க நிபுணர்கள் வழங்கும் சில எளிமையான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம்...
சளி... இருமல்... காய்ச்சல்...
குளிர்காலத்தில், சிறுவர், சிறுமியர் தொடங்கி, முதுமைப் பருவத்தினர் வரை என அனைவரையும் பாதிக்கும் விஷயங்களில் சளி, இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் முதன்மையான காரணிகளாக திகழ்கின்றன. உடல் நலனைப் பாதிக்கும் இத்தகைய சின்னச்சின்ன காரணிகளைக் கவனமாக கையாள வேண்டும்.
ஏனெனில் இவற்றின் விளைவுகள் மேலும் அதிகமாக உருவெடுக்க கூடும். அதற்காக, பயம் கொள்ளத் தேவையில்லை. பொதுவாக அனைவரையும் தாக்கும் மேற்கூறப்பட்ட பாதிப்புக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், முழுமையாக குணப்படுத்தவும் இயற்கை அளித்திட்ட மசாலாப்பொருட்கள் மற்றும் மூலிகைகள் நிறைய உள்ளன. மசாலாப்பொருட்களில் மஞ்சள், கருமிளகு, இஞ்சி, இலவங்கம், ஏலக்காய், ஜாதிக்காய் மற்றும் சோம்பு போன்றவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
கற்பூரவள்ளி, கல்பாசி, துளசி முதலானவை பாரம்பரிய மூலிகைகளில் இடம் பெறுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, மூலிகை தேநீர் தயாரித்து அருந்தலாம். பழங்காலத்தில் இதையேதான் நம்முடைய பாட்டிமார்கள் கஷாயம் என்ற பெயரில் புகட்டி வந்தனர்.
உடலியக்கம்
எந்த நேரமும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இவ்வாறு செய்வதன்மூலம், எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும், உடலின் அனைத்து செல்களையும் எளிதாக சென்றடைகின்றன. இந்த ஊட்டசத்துக்கள் உடம்பின் அனைத்து பாகங்களையும் சேரும் வகையில் உடலுழைப்பு இல்லாத நேரத்தில் நடத்தல், மெதுவாக ஓடுதல், மிதிவண்டி ஓட்டுதல், கை, கால்களை நீட்டி, மடக்குதல்(Stretching Excersice) ஆகியவை நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க செய்யும்.
யோகா மற்றும் பிராணயாமா
யோகாசனம் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் பெரிய அளவில் நோயை எதிர்க்கும் ஆற்றலை உருவாக்குகிறது. மேலும் சுவாசப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து எல்லா உயிரணுக்களிலும் தூய காற்று உட்செல்ல உதவுகிறது. தனுராசனம்(உடம்பை வில்லாக வளைத்தல்) சிரசாசனம்(தலைகீழாக நிற்றல்) போன்ற ஆசனங்கள் நமது நிணநீர் நாளங்கள்(Lymphatic System) வழியாக, குருதியோட்டத்தை அதிகரித்து, உடலில் காணப்படுகின்ற நச்சுப்பொருட்களை அகற்றுகிறது.
மேலும் வெள்ளை ரத்த அணுக்களின் சுழற்சிக்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க செய்வதில் உத்ராசனம், ஹலாசனம், புஜங்காசனம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையான தூக்கம்/ ஓய்வு
இரவு நேரங்களில் சரியாக உறங்காதவர்களை ‘ராக்கோழி’என்ற பெயரால் குறிப்பார்கள். என்னடா! இது நோயை எதிர்க்கும் ஆற்றலைப் பற்றி கூறிக்கொண்டு இருக்கும்போது தொடர்பே இல்லாமல், வேறொரு செய்தி இடம் பெறுகிறதே என்று நினைக்க வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்… உங்களுக்கு மெல்லமெல்ல புரியும். காற்றோட்டமான இடத்தில் எந்தவித இடையூறு இல்லாமல் நிம்மதியாக தூங்கும் வழக்கம் உள்ளவர்களின் நோய் எதிர்ப்புத்திறன் அடிக்கடி புதுப்பிக்கப்படும். போதுமான தூக்கம் இன்றி அவதிப்படுபவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் தானாகவே குறையும். எனவே, நோயை எதிர்க்கும் திறனை அதிகரிக்க, தொந்தரவு அற்ற போதுமான நித்திரை(குறிப்பாக இரவு நேரங்களில்) மிகமிக அவசியம்.
உணர்வுகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் உணர்வு(Emotions) விஷயத்தில் எந்த சூழலிலும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. மன வருத்தம், கோபம், சீற்றம், பொறாமை மற்றும் ஆழ்ந்த துக்கம் போன்ற எதிர்மறையான உணர்வுகள், ஒருவருடைய நோயை எதிர்க்கும் சக்தியை உடனுக்குடன் முடக்கி விடும் தன்மை கொண்டவை.
நேசம், பாசம், மகிழ்ச்சி நன்றியுணர்வு முதலான நேர்மறை எண்ணங்கள் வியக்கதக்க வகையில், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. கார்டிசால் என்பது அட்ரினல் சுரப்பியில் இருந்து வெளிப்படும் ஒருவகையான ஸ்டீராய்டு தன்மை கொண்ட திரவம் ஆகும். இத்திரவத்தின் அளவு அதிகரிக்கும்போது, மன அழுத்தமும் கூடும்.
மேலும் இத்திரவம் நோய் எதிர்ப்புத்திறன் உட்பட ஆரோக்கியம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் முடக்கும் திறன் உடையது. எனவே மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திடும் தியானம், இறை வழிபாடு, நன்றி உணர்வு, மனித உறவை மேம்படுத்துதல்(கலந்துரையாடல், தழுவல் முதலானவை) ஆகியவை ஒருவருக்கு இன்றியமையாதவை ஆகும்.
வைட்டமின் மற்றும் கனிமப் பற்றாக்குறை
வைட்டமின், மினரல்ஸ் ஆகியவை நமது உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக, இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி,சி,டி,இ போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். ஆரோக்கியம் மற்றும் சரிவிகித உணவுகள் மைக்ரோ-நியூட்ரியன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. வைட்டமின் டி 3, சூரிய ஒளி, துத்தநாகம், பூசணி விதை மற்றும் சிப்பிகள் நமது நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க செய்கின்றன.
- விஜயகுமார்
|